இந்தியாவில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை அமைந்துள்ள 6 கோவில்களில், பெங்களூருவில் உள்ள நந்தி கோவிலும் ஒன்று. கர்நாடகத்தில் மைசூரு, பேளூர் ஆகிய இடங்களிலும், தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேசுவரம் ஆகிய இடங்களிலும், ஆந்திராவில் இந்துப்பூர் அருகே உள்ள லெபாட்சி என்ற இடத்திலும் இதேபோல் ஒரே கல்லால் ஆன சிலைகள் உள்ளன.
பெங்களூருவில் உள்ள நந்தி கோவிலை ‘பசவனகுடி’ என்று உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். அதற்கு ‘நந்தியின் கோவில்’ என்று பொருள். இந்த கோவில் 16-ம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலை அம்சத்துடன் பெங்களூருவை நிர்மாணித்த கெம்பே கவுடாவால் கட்டப்பட்டது. அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வேர்க் கடலை தோட்டத்தில் நந்தி புகுந்து சேதப்படுத்தியதாகவும், எனவே அதை சாந்தப்படுத்த கோவில் கட்டியதாகவும் புராதன வரலாறு சொல்லப்படுகிறது. அங்கு நந்தி சிலை வளர்ந்து கொண்டே இருந்ததால் அதை தடுக்க தலைப்பகுதியில் திரிசூலம் அணிவிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் வேர்க்கடலையில் முதலில் அறுவடை செய்யும் ஒரு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் நந்திக்கு படைத்து வழிபட்டு வந்தனர். அதுவே நாளடைவில் ‘கடலைக்காய் சந்தை’யாக மாறி, தற்போது நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நந்திகோவில் அருகே ‘தொட்ட கணேசா’ கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயர விநாயகர் சிலை உள்ளது. ஒவ்வொரு திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் சிலை 100 கிலோ நெய்யால் அலங்கரிக்கப்படுகிறது. அந்த நெய் பக்தர்களுக்கு வினியோகமும் செய்யப்படுகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இதுதவிர நந்திகோவில் அருகே கவி கங்காதேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளன. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் நந்தி கோவில் உள்ளது.
No comments:
Post a Comment