தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் பிரபலமானது. இந்தியாவில், இரண்டு காலபைரவர் கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று காசியில் தென்காசி காலபைரவராகவும், மற்றொன்று தர்மபுரி அதியமான்கோட்டையில் தட்சிணகாசி காலபைரவராகவும் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். இவர் இக்கோயிலில் வீற்றிருப்பது மேலும் சிறப்பு. 9-ம் நூற்றாண்டில் எதிரிகளால் நிறைய இந்து கோயில்கள் இடிக்கப்பட்டது. அப்பொழுது அப்பகுதியை ஆட்சி செய்த அதியமான் என்னும் மன்னரால் போரில் வெல்லமுடியாத நிலை ஏற்பட்டது. ஜோதிடர்களைக் கலந்து ஆலோனைச் செய்கையில் காவல் தெய்வமான காலபைரவரை வணங்க வேண்டும் என்றனர். ஆஸ்தான ஜோதிடர்களின் சொல்லுக்கிணங்க காசியில் இருந்து சிலைகளை அதியமான் கோட்டைக்கு கொண்டுவந்து காலபைரவர் ஆலயத்தை எழுப்பினார்.
தான் கட்டிய கோயிலில் காலபைரவரை பிரதிஷ்டை செய்தார். காலபைரவரின் கருவறை விதானத்தில் நவக்கிரகங்களின் திருவடிவங்களையும் வடித்தார். நவக்கிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், காலபைரவரை மட்டுமே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக் கூடாது என்பதற்காகவும் அதியமான் மன்னர் நவக்கிரகங்களை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது.
காசிக்கு அடுத்து தனிச் சந்நிதியில் இருக்கும் காலபைரவர், தட்சிணகாசி காலபைரவர் என்று பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார். அதன் காரணமாகவே இந்தத் தலம் முக்தி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது. தருமபுரி மக்கள் மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தட்சிணகாசி காலபைரவரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.
இக்கோயிலில் உள்ள உன்மந்திர பைவரவரின் திருமேனியில் 27 நட்சத்திரமும், 12 ராசியும் அடக்கம். எனவே, இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும். ஜாதகத்தில் உள்ள அனைத்துத் தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
12 ராசிக்காரர்கள் கால பைரவரின் எந்தெந்த பகுதியை வணங்கினால் தோஷம் விலகும்..
மேஷ ராசிக்காரர்கள் சிரசினை பார்த்துக் கும்பிட்டால் தோஷம் தீரும்.
ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும்.
மிதுன ராசிக்காரர்கள் தோல், புஜம் இவற்றை வணங்க தோஷம் விலகும்.
கடக ராசியினர் மார்பு பகுதியை வணங்க தோஷம் குறையும்.
சிம்ம ராசிக்காரர்கள் வயிறு பகுதியை வணங்க வேண்டும்.
கன்னி ராசியினர் பைரவ பெருமானின் குறியை வணங்க தோஷம் விலகும்.
துலா ராசிக்காரர்கள் தொலைப் பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்கள் முட்டி பகுதியை பார்த்த கும்பிட தோஷம் குறையும்.
தனுசு, மகர ராசிக்காரர்கள் முட்டியின் கீழ்ப்பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.
கும்ப ராசியினர் கணுக்காலை வணங்க வேண்டும்.
மீன ராசிக்காரர்கள் பாதத்தை பார்த்து வணங்க வேண்டும்.
இக்கோயிலில், அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்ததால், அதன் அடையாளமாக இன்றும் இக்கோயிலில் வாள் வைத்து வழிபடுகின்றனர்.
நினைத்த காரியம் கைகூட தட்சிணகாசி காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இதுதவிர, கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று தட்சிணகாசி காலபைரவருக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.
தர்மபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிணகாசி காலபைரவர் திருக்கோயில்.
No comments:
Post a Comment