ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலமாக விளங்குவதால், புராதனக் கோவில்களின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது, ‘திருப்புல்லாணி’ திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
இந்த ஆலயத்தின் மூலவரான ஆதிஜெகன்னாதப் பெருமாள் திருமகளும், நிலமகளும் இருபுறமும் நிற்க, அமர்ந்த நிலையில் அருட்காட்சி நல்குகிறார். புனித பாரதத்தில் எத்தனை ஜெகன்னாதர் கோவில் இருப்பினும், இவர் மிகவும் பழமையானவர் என்பதால் ஆதி ஜெகன்னாதர் எனப்படுகிறார். இறைவனுக்கு ‘புல்லாணித் தென்னன் தமிழன்’ என்பது திருமங்கை ஆழ்வார் செல்லமாக வைத்த பெயர். உற்சவர் கல்யாண ஜெகன்னாதர்.
‘சக்கர தீர்த்தம்’ என்னும் தாது கலந்த தெள்ளிய திருக்குளத்தின் முன்பு, வண்ணங்கள் அள்ளித் தெளித்த ஐந்து நிலை ராஜகோபுரம் உயர்ந்து நிற்கிறது. அதனைக் கடந்து உள்ளே நுழையும் போதே வேத மந்திரங்கள் காற்றில் தவழ்ந்து நம் செவிகளைப் புனிதமாக்குகிறது. பலிபீடம், கொடிமரம், பெரிய மண்டபத்தில் சேவிக்கும் கருடாழ்வார், அவர் முன்பாக கல்யாண விமானத்தின் கீழ் கடல்நிறப் பெருமாள் காட்சி தருகிறார்.
ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் விளக்குகிறது.
தென்பிரகாரச் சுற்றில் விமானத்தில் சற்று உயர்ந்த பகுதியில் லட்சுமிநரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். மண்டபங்களில் சிற்பங்கள் சிந்தையைக் கவர, நாம் இரண்டாம் சுற்றினைத் தாண்டியதும் தென் பிரகாரத்தில் பத்மாசனித் தாயார் மூலவராகவும், உற்சவராகவும் புன்னகைத்தபடி தனிச் சன்னிதியில் அமர்ந்திருக்கிறார். வடமேற்குத் திசையில் கோதை நாச்சியார் கொலு விற்றிருக்கிறார்.
வடக்குப் பிரகாரத்தில் மூலவர் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது காணக் கிடைக்காத திருக்காட்சி.
இந்த சன்னிதியின் இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் பகை வருக்குப் பயமூட்டும் தோற்றத்துடன் இருப்பது சிறப்பு. ராவணன் தூதர்கள் முன்னே வந்தால் ‘என்னை மானுடனாக மட்டும் எண்ணி விடாதே’ என்பது போல தோற்றத்துடன் வீர ராமன் காட்சித் தருகிறார். நாபியிலிருந்து மூன்று தண்டுகள் எழுந்து, ஒரு தண்டில் உள்ள தாமரையில் பிரம்மனும், மற்ற இரு தண்டுகளில் சூரிய - சந்திரர்களும் இருக்கிறார்கள். மேலே முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டதாக நுண்ணிய சிற்பங்கள் மின்னுகின்றன.
கருவறையைச் சுற்றிலும் இக்கதை வண்ணப்படங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிறப்பாக மிளிரும் சிற்பக்கலை போல, சித்திரக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
இந்தச் சன்னிதிக்கு முன்னதாக சந்தான கோபாலன் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். எட்டு யானை களுடனும், எட்டு நாகங்களுடனும், ஆமையை ஆசனமாகக் கொண்டுள்ள ஆதிசேஷன் மீது கண்ணன் காட்சி தருகிறார். இவரைப் பிரார்த்தித்துக் கொண்டு நாகப் பிரதிஷ்டை செய்தால், நாகதோஷமும் புத்திரதோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.
அதன் எதிரே கொடிமரத்துடன் கூடிய பட்டாபிராமர் சன்னிதி உள்ளது. ராவண வதம் முடித்து புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்பும் போது, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து இங்கே பட்டாபிஷேக காட்சியை ராமன் கொடுத்தாராம். இந்தச் சன்னிதியில் நின்ற நிலையில் ராமனும், அருகே தம்பி லட்சுமணனும், சீதை உடனிருக்க தோற்றம் தர அனுமன் குவித்த கரங் களோடு நிற்கிறார்.
இந்த திவ்விய தேசத்தில், பின்புறம் தல விருட்சமாக ஆண்டுகள் பல கடந்த அரசமரம் உள்ளது. இலையிலிருந்து வேர்வரை மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது பொதுவான கருத்து. ‘மரங்களில் நான் அரசாக இருக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கல்லவா! இம்மரத்தடியில் தான் பக்தர்கள் நாகப்பிரதிஷ்டை செய்கிறார்கள்.
திருப்புல்லாணி வந்து, கல்யாண ஜெகன்னாதரை சேவிக்க திருமணத் தடைகள் நீங்கும் எனவும், சந்தான கோபாலரை வணங்கி அரசமரம் சுற்றினால் மழலைப் பேறு கிடைக்கும் எனவும், ராம பிரானை வழிபட்டால் வெற்றிகள் குவியும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம்
ராமநாதபுரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் ராமநாதபுர சமஸ்தான கோவில்களில் ஒன்றாகத் திகழும் திருப்புல்லாணி ஆலயம், தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தான் கடலரசன் ஆட்சி செய்யும் சேதுக்கரை நீல நிறத்தில் காட்சி தருகிறது.
No comments:
Post a Comment