Tuesday, 29 May 2018

இது தான் புதையல் யோகம்

நோயில் வாடிய விவசாயி தன் மகன் முருகனை அழைத்தார்.  '' நான் சொல்றதைக் கேளப்பா! என் காலத்திற்கு அப்புறமா வயலை யாருக்கும் வித்திடாதே! அங்கே புதையல் வச்சிருக்கேன். எந்த மூலையில இருக்குதுன்னு ஞாபகமில்லே! ஒரு இடம் பாக்கி இல்லாம கலப்பையால நல்லா உழுதிடு. புதையல் யோகம் கிடைக்கும்'' என்று சொல்லி விட்டு உயிர் விட்டார். இந்த ரகசியத்தை அவன் அம்மாவிடம் கூட சொல்லவில்லை. ஒருவாரம் கழிந்தது.அப்போது கோடை மழை கொட்டியது.

அந்த நேரத்தில் முருகன் கலப்பையுடன் புதையலைத் தேடி வயலுக்குப் போனான். அதைக் கண்ட முருகனின் அம்மா, ''கணவர் இறந்ததும், மகனுக்கு நல்ல புத்தி வந்திருச்சு '' என எண்ணினாள். வயலில் ஒரு மண்கட்டியைக் கூட விட்டு வைக்கவில்லை. 

மூலை முடுக்கெல்லாம் ஆழமாக உழுதான். புதையல் கிடைத்தபாடில்லை. அப்பா மீது கோபம் எழுந்தாலும், வெளிப்படுத்தவில்லை. அடுத்தடுத்த வயல்களில் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பித்தனர். உழுதது வீணாகாமல் இருக்க, முருகனும் விதைத்தான். விதைகள் முளைவிட்டதைக் கண்டு மகிழ்ந்தான். ஆர்வமுடன் பயிர்களைப் பாதுகாத்து நீர் பாய்ச்சினான். 

அறுவடை நாள் நெருங்கியது. எதிர்பார்த்ததை விட இருமடங்கு விளைச்சலோடு, நிறைய பணம் வர மகிழ்ச்சியாக வாழ்ந்தான். உழைப்பின் அருமையைத் தான் 'புதையல் யோகம்' என்று அப்பா சொன்னது அவனுக்கு புரிந்தது.

No comments:

Post a Comment