Wednesday 30 May 2018

மனசே! மனசே! கதவைத்திற!


குருநாதரின் முன்னாள் சீடன், ஒருநாள் அவரைச் சந்திக்க வந்தான். ''குருவே...நான் உங்களின் அறிவுரைப்படி தியானம் பயில்கிறேன். அதனால், ஞாபகசக்தி, புத்திக்கூர்மையுடன் இருக்கிறேன். இருந்தாலும்....'' என சற்று இழுத்தான். ''இருந்தாலும்.... உனக்கு என்ன குழப்பம்?''

''நான் நல்லவன் தானா என்ற சந்தேகம் எழுகிறது. சில நேரத்தில் தெரிந்தே தவறு செய்கிறேன். தியானம் பயில்பவன் இப்படி இருக்கலாமா என நினைக்கும் போது குழப்பம் அதிகரிக்கிறது!”

குரு சிரித்தார். ''ஆக….. சில நேரத்தில் விழிப்பற்ற நிலையில் தவறும் செய்கிறாய், அப்படித்தானே…?'' தலை குனிந்தபடி சீடன், ''ஆமாம் குருவே. அது தவறு தானே...''

''தவறில்லை. நீ தியானம் செய், தவறு செய், தியானம் செய், தவறு செய், கொஞ்சநாளில் ஏதேனும் ஒன்று நின்று விடும்!''

சீடன் பதறினான், ''அய்யோ... ஒருவேளை தவறுக்குப் பதில் தியானம் நின்று விட்டால்?''
''அப்படி நடக்க வாய்ப்பில்லை. தவறு செய்கிறேனே என்ற எண்ணம் எழுந்ததே, தியானத்தின் மீது உனக்கு அக்கறை வந்ததை உணர்த்துகிறது. விழிப்பு நிலைக்கான கதவு உன்னுள் திறந்து விட்டது என்பதே உண்மை'' என்றார். குழப்பம் தீர்ந்த சீடனும் நன்றியுடன் புறப்பட்டான்.

No comments:

Post a Comment