அழகிய முன் முகப்புடன் கூடிய கோவில்பத்து கோதண்டராமர் ஆலயம் சாலையின் விளிம்பிலேயே உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் நீண்ட பிரகாரமும் உள்ளது. இடதுபுறம் தனி சன்னிதியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். ‘ஸ்ரீதருநேத்ரதசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயர்’ என்பது இவர் பெயர். ஆம்! இந்த ஆஞ்சநேயர் ஐந்து முகங்களுடன் அருள்பாலிப்பது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
இவர் ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார். நேர் எதிரே ஆஞ்சநேயராகவும், இடதுபுறம் நரசிம்மராகவும், வலதுபுறம் வராக மூர்த்தியாகவும், பின்புறம் கருடாழ்வாராகவும், மேல்பகுதி ஹயக்ரீவராகவும் காட்சி தரும் இவர், நின்ற கோலத்தில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
அனுமன் ஜெயந்தி அன்று இந்த ஆஞ்சநேயர் சன்னிதி முன்பாக ‘மூல மந்திரயாகம்’ என்ற யாகம் நடத்தப்படுகிறது. பூஜை மற்றும் யாகப் பொருட்களுடன் நவதானியமும் யாகத்தில் இடப்படும். சுமார் ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்டு பயன் பெறும் இந்த யாகம் நடக்கும் அன்று, ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் பக்தர்களுக்கு வடை, புளிசாதம், சர்க்கரைப் பொங்கல் முதலியன பிரசாதமாகத் தரப்படுகிறது.
கல்வி செல்வம் வேண்டியும், திருமணத் தடை விலகவும், விரைந்து திருமணம் நடக்கவும் வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதல் விரைந்து பலிப்பதாக கூறுகின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் அவர்கள் ஆஞ்சநேயருக்கு புத்தாடை அணிவித்து, அர்ச்சனை செய்து வெற்றிலை மாலை, கொய்யாப்பழ மாலை, வாழைப்பழ மாலை, எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
ஆஞ்சநேயர் சன்னிதியை அடுத்து மகாமண்டபமும், கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. மகா மண்டப நுழைவு வாசலின் இடது புறம் நாகர் மற்றும் வலதுபுறம் தும்பிக்கை ஆழ்வார் திருமேனிகளும் உள்ளன.
உள்ளே கருவறையில் மூலவராக வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவருக்கு முன் உற்சவர் கோதண்டராமர், சீதாப் பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர். அருகே நம்மாழ்வாரின் திருமேனியும் உள்ளது.
இங்கு நடைபெறும் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. பங்குனி மாதம் ராமநவமி திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயத்தின் தெற்கு திருச்சுற்றில் ஒரு மண்டபம் உள்ளது. ராமநவமியின் 10-ம் நாள் உற்சவமாக இந்த மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடை பெறும்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இறைவன்- இறைவிக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. மார்கழி வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு நடைபெறும் கண்ணாடி சேவை மிகவும் பிரபலம். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுவர். மாசி மகத்தன்று கடற்கரையில் தீர்த்தவாரி திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.
குழந்தை பேறு வேண்டுவோர் இந்த ஆலயம் வருகின்றனர். கருவறையில், கையில் தூக்கக் கூடிய வடிவில் சந்தானகிருஷ்ணன் உலோகச்சிலை ஒன்று உள்ளது. அர்ச்சகர் அந்தச் சிலையை பிரார்த்தனை செய்பவர் கரத்தில் சில நிமிடங்கள் தந்து விட்டு திரும்ப வாங்கிக்கொள்வார். அந்தப் பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் விரைந்து கிடைக்கும் என உறுதியாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.
பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஊர் மக்களின் சுப காரியங்கள் நடைபெறுகின்றன. திரு மணம், காதுகுத்து, வளைகாப்பு போன்ற மங்கல விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
வில்லேந்திய ராமபிரானையும், சீதாப்பிராட்டியாரையும் தரிசிக்க நாமும் ஒருமுறை இந்த ஆலயம் சென்று வரலாமே.
No comments:
Post a Comment