ஒரு காட்டில் சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர். ஒருநாள் அவர் தமது சீடர்களிடம், கடவுள் எல்லோரிடத்திலும் இருக்கிறார். எனவே எல்லோரையும் வணங்குங்கள் என்று உபதேசம் செய்தார்.
ஒரு நாள் அந்தச் சீடர்களில் ஒருவன் ஹோமத்திற்கு விறகு சேகரிக்கக் காட்டிற்குச் சென்றான். அப்போது திடீரென்று அங்கே ஒரு பேரிரைச்சல் கேட்டது. எல்லோரும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். என்ன ஆகிவிட்டது? ஏன் எல்லோரும் ஓடுகிறார்கள் என்று சீடன் யோசிக்கும் போதே, ஒரு குரல் ஓடுங்கள் எல்லோரும் ஓடுங்கள். மதயானை ஒன்று வருகிறது என்று யாரோ உரத்த குரலில் சத்தமிடுவது கேட்டது. எல்லோரும் ஓடினர். ஆனால் இந்த சீடன் மட்டும் ஓடவில்லை. மதயானையும் ஸ்ரீமத் நாராயணன் என்று அவன் நம்பினான். பின் அவன் ஏன் ஓடப் போகிறான்? எனவே அங்கேயே நின்றுகொண்டு கைகூப்பிய வண்ணம் ஸ்ரீமந் நாராயணனைத் துதிபாடி போற்றத் தொடங்கினான்.
யானைப்பாகன், ஓடுங்கள் ஓடுங்கள் என்று கத்திக்கொண்டு வந்தான். சீடன் அதைப் பொருட்படுத்தவில்லை. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். மதயானை துதிக்கையால் அவனைத் தூக்கி வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டது. உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சீடன் மூர்ச்சித்து விழுந்தான்.
இந்த செய்தியைக் கேட்டு குருவும் மற்ற சீடர்களும் அங்கு விரைந்து சென்றார்கள். சீடனை ஆசிரமத்திற்குத் தூக்கி வந்து சிகிச்சை அளித்தார்கள். சிறிது நேரத்தில் அவனுக்கு நினைவு திரும்பியது. அப்போது சீடர்களுள் ஒருவன் அவனைப் பார்த்து ஆமாம் மதயானை வருகிறது என்பதை அறிந்திருந்தும் நீ ஏன் ஓடவில்லை? என்று கேட்டான்.
அதற்கு அந்தச் சீடன், நாராயணனே மனிதன் முதலில் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் என்று அல்லவா குருநாதர் நமக்கு உபதேசித்தார். ஆகவே யானை நாராயணன் வந்தபோது அந்த இடத்தை விட்டு ஓடாமல் இருந்துவிட்டேன் என்றான்.
இதைக் கேட்ட குரு, மகனே, யானை நாராயணன் வந்தான் அது உண்மைதான். ஆனால் யானைப்பாகன் நாராயணன் உன்னை ஓடிவிடு என்று எச்சரித்தானே எல்லோரும் நாராயணன் என்றால், யானைப்பாகன் நாராயணனின் வார்த்தைகளையும் நீ மதித்திருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.
எதிலும் அரை குறை அறிவு பெற்றவன் எப்படிக் கஷ்டப்படுகிறான் பார்த்தீர்களா?என்று குருநாதர் கூறினார்.
சில தண்ணீர் வாய் கொப்பளிக்க, பாத்திரம் கழுவ, மட்டும் தான் உதவும். அதைக்குடிக்கவோ, பூஜைக்கோ பயன்படுத்த முடியாது. அதுபோலவே நல்லவன் கெட்டவன், பக்தன் - பக்தன் அல்லாதவன் என்று எல்லோரின் இதயத்திலும் இறைவன் இருப்பது உண்மை தான். ஆனாலும் தீயவர்கள், பக்தர்கள் அல்லாதவர்கள் துஷ்டர்கள் இவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.
No comments:
Post a Comment