Tuesday 22 August 2017

எந்த நம்பிக்கையில் ஓட்டை விற்கிறீர்கள்?


பார்லிமென்ட் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள வேளை இது. இந்த தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும். ஆனால், ஆன்மிக தேர்தல்களம் தினமும் நம் வாழ்க்கையில் நடப்பது. கொஞ்சம், அந்த செய்திகளையும் தெரிந்து கொள்வோமே! 

தங்கள் ஓட்டை விலை பேசி, வாக்களிக்கிறார்கள் சிலர். அந்தப்பணம், தங்கள் ஆயுள்காலம் வரை பாதுகாக்கும் என்று நம்புகிறார்கள். இது, ""கடவுள் என்னைக் காப்பாற்றவில்லை, என்னை நானே காப்பாற்றிக் கொள்கிறேன்'' என்று சொன்ன ஒரு பக்தரின் கதை போல இருக்கிறது. "அப்படியா! அது என்ன கதை!' 

ஸ்ரீரங்கம் கோயிலின் அர்ச்சகர், பராசர பட்டர், தலை சிறந்த சொற்பொழிவாளராக இருந்தார். 

ஒருமுறை, "பகவான் தான் எல்லாரையும் காப்பாற்றுகிறான்' என்று பேசினார். 
அப்போது, ஒரு பக்தர் எழுந்து, ""பகவான் தான் எல்லாரையும் காப்பாற்றுகிறார் என்கிறீரே! என்னை நானே தான், காப்பாற்றிக் கொள்கிறேன்! இதில் பகவான் எங்கே இடைச்செருகலாக வந்தார்?'' என்றார். 

பட்டர் உடனடியாக பதில் சொல்லவில்லை. ""நாளை காலை என்னை வந்து பாரும்,'' என சொல்லிவிட்டார். 

அந்த நபரும் போனார். பட்டர் அவரிடம் கேள்விகளை அடுக்கினார். 

""நேற்றிரவு சாப்பிட்டீரா?'' 
""ஆம்''. 
""நன்றாகத் தூங்கினீரா?'' 
""ஓ! தூக்கத்துக்கென்ன குறைச்சல்!'' 
""எத்தனை மணிக்கு படுத்தீர்?''
""ஒன்பது மணிக்கு'' 
""எப்போது எழுந்தீர்?'' 
"" ஐந்து மணிக்கு''. 

""இந்த எட்டு மணி நேரமும் உம்மை நீர் தான் பாதுகாத்துக் கொண்டீரா?'' 
""அதெப்படி! தூக்கத்தில் யாருக்கு தான் உணர்விருக்கும்?'' 

""சரி...அந்த உணர்வில்லாத நேரத்தில், உம் வீட்டுச் சுவர் உம் மீது இடிந்து விழுந்திருக்கலாம். பாம்போ, விஷப்பூச்சியோ கடித்திருக்கலாம்! இதிலிருந்தெல்லாம் உம்மைக் காப்பாற்றியது யார் என்று நினைக்கிறீர்?'' என்று கேட்டார். வந்தவருக்கு, அப்போது தான் உரைத்தது. 

பார்த்தீர்களா! தன் மீதான நம்பிக்கை என்பது ஓரளவுக்கு தான்! அதுபோல் தான் வேட்பாளர்களிடம் வாங்கும் பணமும்! ஒரு மாத மளிகை சாமான் வேண்டுமானால், அதைக் கொண்டு வாங்கலாம். ஆனால், இதுபோன்று தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர்கள், செலவழித்ததைப் போல, பல மடங்கு சம்பாதிக்கத்தானே பார்ப்பார்கள்! 

ஒரு மாத இன்பத்திற்காக, காலம் முழுவதும் துன்பத்தை அனுபவிக்க நீங்கள் தயார் என்றால், ஓட்டுக்காக கை நீட்டலாம்.

No comments:

Post a Comment