Monday, 21 August 2017

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில்


பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை சிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது குமாரர்களான விநாயகனுக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். 

விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு 'பழம் நீ ' (பழனி) என அழைக்கப்படுகிறது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சமீப காலம் வரை இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் அந்த சந்தனம் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

மலைக் கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்துள்ளார். அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. போகரின் சமாதி இங்கு அமைந்துள்ளது. முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment