Tuesday 22 August 2017

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தல பெருமைகள்


மக்களால் பொதுவாக இத்தலத்திற்கு வழங்கப்படும் பெயர் அய்யர்மலை என்பதாகும். இவ்வூரிலுள்ள கோயிலை வழிபட புதிதாகச் செல்பவர்கள் அய்யர்மலை என்று கேட்டால்தான் தெரியும். இம்மலைக்கும் சிவாயமலை, ரத்தினகிரி, ரத்தினாசாலம் ஐயர்மலை, மணிகிரி, வாட்போக்கி முதலிய பெயர்கள் வழங்குகின்றன. சிறந்த சிவன் கோயில் அமைந்திருக்கும் சிவாயம் என்னும் சிற்றூருக்கருகே இம்மலை இருப்பதால் சிவாயமலை என்றும், மலையேறி செல்லும்படி வழியும், மலை மேற்கோயிலுள்ள பிரகாரங்களும் ஓம் என்ற பிரணவ எழுத்து போலவும் சிவ மகாமந்திரமான ஐந்தெழுத்தின் வடிவமாகவும் அமைந்திருத்தலால் சிவாயமலை என்றும் அழைக்கப்பட்டதாக கூறுவர். மதுரையில் சொக்கலிங்கப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கர்ப்பக்கிரகம் சுற்றிலும் எட்டு யானைகள் தாங்குபடியாக இந்திரனால் அமைக்கப்பட்டதை அட்டகிரி விமானம் என்பர்.

அதே போல் சுற்றிலும் எட்டு பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புலிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் காரணத்தால் இந்த மலையை மாணிக்கமலை என்று கூறுகின்றனர். ஒன்பது பாறைகளும் நவரத்தினங்களைக் குறிக்கும். மலைக்கோயில் பிரகாரங்களைச் சுற்றி வரும்போது இப்பாறைகளைக் காணலாம். யாவருக்கும் மேலாகிய தலைவர் (ஐயர்) இங்கு கோயில் கொண்டிருப்பதால் ஐயர்மலை என்ற பெயர் எழுந்தது. பஞ்சபாண்டவர் வன வாசத்தின் போது இங்கு தங்கி இருந்தனர் என்றும், அதனால் இம்மலைக்கு ஐவர்மலை என்ற பெயர் உண்டாயிற்று என்றும் அப்பெயரே நாளடைவில் திரிந்து அய்யர்மலை என்றாயிற்று என்றும் சொல்கின்றனர். ஆராய்ந்து பார்த்தால் பஞ்சபாண்டவர் இத்தலத்திற்கு வந்தது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. தேவாரம், தல புராணம், கலம்பகம் இவைகளில் வாட்போக்கி என்றும், திருப்புகழ் சிவதைபுரி, ரத்தினவெற்பு என்றும் உலாவில் ரத்தினகிரி என்றும், கோயிலில் காணப்பெறும் பழங்கால கல்வெட்டுகளில் திருமாணிக்கமலை, திருவாட்போக்கி என்றும் கூறப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment