உலகத்தில் புதுமை என்று எதுவும் இருப்பதில்லை. மனிதன் தான் புதுமையானவன் . அவனுக்குத் தெரிய வரும் விஷயங்கள் அவனைப் பொறுத்தவரை புதுனம் . ஆனால் அது முன்னால் எங்கோ ஓரிடத்தில் ஒரு காலத்தில் இருந்திருக்கும் . தொழில்நுட்பம் பலவித மாற்றங்களைத் தரும் அவ்வளவுதான்.
சமீப காலமாக பிள்ளைப் பேறு வேண்டுவோர் நம் முன்னோர் காட்டியப் பாதையில் அரச மரம், ஆல மரம் எல்லாம் சுற்றுவதில்லை. காலம் கடந்து போகிறது உடனடியாக பிள்ளைப் பேறு வாய்த்தேத் தீர வேண்டும் என்கின்றனர்.
ரத்தத்திற்கு வங்கி இருப்பது போல் விந்தணுக்கள் வங்கியும் சில மருத்துவமனைகளில் செயல்படத் துவங்கி விட்டதால் நேராக அந்த மருந்துவமனைக்குச் சென்று தன் வசதிக்கேற்ப கருத்தரிக்கத் தொடங்கி விட்டனர்.
ஒரு சிலர் இதை வெறுக்கவும் செய்கின்றனர். நம் நாட்டின் கலாச்சாரம் என்னவாயிற்று ? இதெல்லாம் சரியா ? என்றெல்லாம் பல கேள்வி கணைகள் .நம் முன்னோர்கள் காட்டிய பாதையில் போகாமல் தொழில்நுட்பம் சொல்லிவிட்டால் அப்படியே கடைப்பிடிப்பதா? எல்லாம் கலியுகம் என்று சலித்துக் கொள்வோரும் உண்டு.
அவர்கள் சொல்லும் முன்னோர்கள் காட்டிய வழி தான் இன்று நவீனத்துவம் பெற்றுள்ளது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது மஹாபாரதத்தில் ஒரு காட்சி.
மஹாபாரதத்தில் பரீக்ஷித்து மன்னனின் மகன் ஜனமேஜயன் வைசம்பாயனர் என்பவரிடம் “முனிவரே என் முன்னோர் பற்றியும், அப்போதிருந்த மன்னர்கள் வரலாறுகளையும் எனக்கு தெளிவாகத் தெரிவியுங்கள்” என்று கேட்கிறார்.
அதற்கு வைசம்பாயனர் “மன்னா இது மிகவும் ரகசியமானது. பிரும்மாவை வணங்கி இதைத் தெரிவிக்கிறேன். ஜமதக்னியின் மகன் பரசுராமரால் அரசர்கள் வம்சம் 21 தலைமுறை அழிந்து விட்டது. அந்த குலத்துப் பெண்கள் மட்டும் மிஞ்சினர். இதனால் அரச வம்சம் இல்லாமல் போய்விடுமே என்ற அச்சம் அந்த குலத்துப் பெண்களுக்கு ஏற்பட்டது.
நாட்டை யாளவும், மக்களை நல்வழி படுத்தவும், தர்மத்தை நிலைநாட்டவும், வாரிசு இல்லாததால் அந்தக் குலப் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.
தங்களது அரச குலத்தை மீண்டும் நிர்மாணிக்க முடிவெடுத்த அந்தக் குலப் பெண்கள், தாங்கள் குழந்தைப் பேறைப் பெற அந்தணர்களையும், முனிவர்களையும், சரணடைந்தனர். அவர்கள் கடுமையான விரதமிருந்து ருது காலத்தில் மட்டும் அவர்களோடு சேர்ந்தனர். காம வசப்பட்டோ, ருது காலமில்லாமலோ சேரவில்லை. அதன்படியே க்ஷத்திரிய வாரிசுகள் தோன்றி பெருகியது,” என்ற செய்தியை தருகிறார். அந்த ஒரு குறிப்பிட்ட சந்ததியினர் ஆதிகாலத்திலேயே வேறொருவரின் விந்தணுவைப் பெற்று குழந்தைப் பேறை பெற்றதாக மஹாபாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதே மஹாபாரதத்தில் பகவத் கீதையில் அர்ஜூனன் நான் போர் செய்ய மாட்டேன் போர் செய்தால். அதர்மம் பரவும் , அதனால் வர்ணக் கலப்பும் ஏற்ப்படும் என்று முதல் அத்தியாயத்தில் 40,41,42, சுலோகங்களில் தெரிவிக்கும் செய்தியை பார்க்கவும்.
புதுமை புதுமை என்று பேசி பேசி பழமையை மறந்தே போனோம். நம் புராணங்களில் , காவியங்களில் , இலக்கியங்களில் இல்லாத எதுவும் இன்று புதிதாக தலைத் தூக்கி விடவில்லை. நவீனத்தின் மீது நாட்டம் தேவைதான். அதோடு புராணத்தின் மீது நாட்டம் சேர்ந்திருந்தால் நாம் இந்த கலாச்சாரத்தை மதித்தவராவோம்.
No comments:
Post a Comment