ஆதிசேஷன் பூமியில் பதஞ்சலி என்ற முனிவராக பிறவி எடுத்தது பற்றி பலரும் அறிந்து இருக்க மாட்டார்கள். ஆமாம் விஷ்ணுவின் படுக்கையாக கடலில் உள்ள சேஷ நாகமே சிவபெருமானின் நடனத்தைக் காண ஒரு மனிதப் பிறவியாக அவதாரம் எடுத்தது. அப்படி அவர் பதஞ்சலி என்ற பெயரில் மனிதப் பிறவி எடுக்க அவரை முனிவர் என்கிறார்கள், ரிஷியே என்றும் கூறுகிறார்கள். அவர் ஐந்து அல்லது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த முனிவர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் உண்மையாக வாழ்ந்து இருந்த காலத்தைப் பற்றியோ, அவர் யாருக்குப் பிறந்தார் அல்லது எப்படி அவதரித்தார் என்பதற்கு சரித்திரப் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றாலும் வாய்மொழிக் கதைகளே அவரைப் பற்றிய செய்தியை நமக்குத் தருகின்றது. அவர் மகாவிஷ்ணுவின் நாகமாக ஆதிசேஷனின் அவதாரம் என்பதை மட்டும் அனைவருமே ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். காரணம் அவர்ருடைய சிலை சில ஆலயங்களில் உள்ளது. நாக வடிவில் மனிதத் தலையுடன் காட்சி தருகின்றார்.
முதலில் பதஞ்சலி முனிவரைப் பற்றி சிறு செய்தி. அவரே யோகக் கலைக்கு ஒரு சூத்திரத்தை உருவாக்கியவர். அதாவது யோகக் கலை மூலம் எப்படி ஒருவன் சமாதி நிலையை - ஞானத்தை- அடைய முடியும் என்பதை ஒரு மொழி இலக்கணத்தை தந்தவர். அவர் அதை அஷ்டாங்க யோகக் கலை அதாவது மனதில் பரிபூரண ஆனந்த நிலையை அடைய ஒருவர் எட்டு படிகளைக் கடக்க வேண்டும் என்று கூறி அந்த எட்டு வழிகளை இப்படியாக விளக்கினார்.
1. யம
தன்னை அஹிம்சைவாதியாக ,அன்புள்ளவனாக, உண்மையானவனாக மாற்றிக் கொள்ள வேண்டும் . ( முன்னர் எப்படி இருந்தாலும் சமாதி நிலை அடைய முடிவு செய்தவுடன் இதை கடைபிடிக்க வேண்டும் என்பது கருத்து)
2. நியம
தன்னை தூய்மை உள்ளவனாக, போதும் என்ற மனதுடையவனாக, பொறுமை உள்ளவனாக மாற்றிக் கொள்ள வேண்டும்
3. ஆசனா
மனதை கட்டுப்படுத்திக் கொண்டு ஒரே இடத்தில் நிலையாக பல மணி நேரம் அமர்ந்து இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும்
4. பிரணாயா
மூச்சை அடக்கி வைத்துக் கொண்டு மனத்தையும் கட்டுப்படுத்தும் இந்த முறையை முறையாக பயின்று கடை பிடிக்க வேண்டும். இது ரத்தத்தின் காரத் தன்மையை அடக்குகின்றது.
5. பிரத்யாஹரா
நம்மை சுற்றி உள்ள நடப்புக்களை மன ஓட்டத்தின் எண்ணத்தில் இருந்து அகற்றும் முறை. இதை பயின்று கடைபிடிப்பத்தின் மூலம் நம் மனதை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
6. தாரணா
ஒரே குறிகோளுடன் அமர்வது. அதாவது எப்படி ஒரு பூதக்கண்ணாடி மூலம் சூரிய ஒளியை ஒரு மையத்தில் சிறு பொட்டுப் போல காட்ட முடிகின்றதோ அது போல மனதில் ஒரு வடிவத்தை நினைத்துக் கொண்டு அதுவே மனதில் நிலையாக தோன்றுமாறு செய்து கொள்ளும் நிலை.
7. த்யானம்
மேலே உள்ளத்தின் அடுத்தக் கட்டம். நம்மை சுற்றி என்ன நடந்தாலும் அது காதில் விழக் கூடாது. மனது அந்த பொட்டையே பார்த்தவாறு இருக்க வேண்டும். அந்தப் பொட்டு ஒரு குறிப்பிட்ட அசையாத வடிவமாகக் கூட இருக்கலாம். அதைத் தவிர வேறு எதுவுமே மனதில் தோன்றக் கூடாது.
8. சமாதி
மனதையும் எண்ணங்களையும் அடக்கத் தெரிந்தவுடனேயே உங்கள் உள்ளத்தில் அனைத்தைப் பற்றிய உண்மைகளும் புரிய ஆரம்பிக்கும். மனதில் விருப்பு வெறுப்பு தோன்றாது. மனித எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைக் காண இயலும். மனதில் அசாத்தியமான அமைதியும் ஆனந்தமும் ஏற்படும். இறைவனுடன் கலந்து விட்ட நிலை தோன்றும்.
இவற்றை அனைவரும் செய்ய முடியுமா? முடியாது. ஆனால் உண்மையாக யோகியாக நினைப்பவர் இவற்றை நிச்சயமாக செய்ய முடியும். யோகக் கலையை கற்கும் மற்றவர்கள் ஓரளவிற்கு மன அமைதியைப் பெரும் வகையில் இந்த கலையைக் கற்க முடியும் .
No comments:
Post a Comment