சிவபூஜை என்பது மானிடர்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன? இல்லை என்பதற்கு புராணங்களில் பல ஆதாரங்கள் உள்ளன. நல்லூரில் சிங்கம், சாத்தமங்கையில் குதிரை, கருவுர் பட்டீஸ்வரத்தில் பசு, சிவபுரத்தில் பன்றி, குரங்காடுதுறையில் குரங்கு, சோலூரில் மீன், திருத்தேவன்குடியில் நண்டு, ஆனைக்கா மதுரையில் யானை, திருவெறும்புரில் எறும்பு இப்படி என்று பல தலங்களில் மிருகங்கள், நீர் வாழ்வன ஊர்வன என்று பல உயிர்கள் இறைவனை பூஜித்து பலன் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த வகையில் ஒரு யானையும், சிலந்தியும் சிவபெருமானை போட்டி போட்டுக் கொண்டு பூஜித்திருக்கின்றன! கயிலாயத்தில் சிவகணங்களான மாலியவான், புஷ்பதந்தன் இருவரும் சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். இரண்டும் ஒரு வனத்தில் வசித்து வந்தன. அங்கே மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது.
காய்ந்துபோன மரத்தின் சருகுகள் அந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதைக் கண்ட சிலந்தி பதறியது. சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா? உடனே, சிவபெருமானின் தலைக்கு மேலே சிலந்தி ஒரு வலையைப் பின்னியது. உதிரும் சருகுகள் அந்த வலையில் சிக்கிக் கொள்ள சிவபெருமானின் மேல் சருகுகள் விழாமல் சிலந்தியால் தவிர்க்கப்பட்டது. அதுமுதல் சிலந்தி சிவபெருமானை தினந்தினம் பூஜித்து வந்தது. ஒருநாள் அந்த வழியாக வந்த புஷ்பதந்தனான யானை அந்த சிவலிங்கத்தைக் கண்டது. சிவபூஜை செய்ய அந்த யானைக்கும் ஆசை வந்தது. சிவபெருமானின் மேலிருந்த சிலந்திக் கூட்டை கண்ட யானை அந்த கூட்டை, ஒட்டடையைப் பிய்த்து எறிந்தது. பின்னர் தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது. தினம் தினம் யானை இப்படி செய்யவே சிலந்திக்கு எதுவும் புரியவில்லை. நான் சிரமப்பட்டு தினம் கட்டும் கூட்டை யார் பிய்த்து எறிவது?
இதைக் கண்டுபிடிக்க ஒருநாள் மறைவில் காத்திருந்தது. வழக்கம்போல யானை வந்து சிலந்தியின் கூட்டைக் கலைத்து ஒதுக்கியது. பிறகு துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது. இறைவன் மீது சருகுகள் விழக்கூடாதேயென்று தான் அமைத்தப் பந்தலை தினம் தினம் கலைத்துப்போட்ட யானையின் மீது சிலந்திக்குக் கோபம் பொங்கியது. உடனே விறுவிறுவென ஊர்ந்து அதன் துதிக்கையின் உள்ளேபோய் கடித்தது. வலி தாங்க முடியாத யானை பிளிறியது. சிலந்தி மேலும் கடித்தது. உடனே தன் துதிக்கையை மூர்க்கத்தனமாக தரையில் அறைந்தது யானை. அந்த வேகத்தில் சிலந்தி இறந்தது. உடனே சிவபெருமான் தோன்றி இருவருக்கும் சாப விமோசனம் அளித்தார். யானையாய் இருந்த புஷ்பதந்தன் கயிலாயத்தை அடைந்து முன்பு மீண்டும் சிவகணமானான். சிலந்தியான மாலியவான் சோழர் குலத்தில் பிறந்து பல திருக்கோயில்களை கட்டி வழிபட்டு பின்னர் கயிலாயம் சென்றடைந்தான்.
இவ்வாறு சோழர் குலத்தின் பிறந்தவனே கோச்செங்கோட் சோழன். அவன் தனது ஆட்சிக் காலத்தில் 70 கோயில்களை கட்டினான். முற்பிறவியில் யானை மேல் ஏற்பட்ட சினம் காரணமாக யானை ஏற முடியாதபடி அனைத்து கோயில்களையும் அவன் மாடக் கோயில்களாகவே கட்டினான். அப்படி அவன் கட்டிய கோயில்களில் ஒன்று, சோழிய விளாகத்தில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வர சுவாமி ஆலயம். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிராகாரம். பலிபீடத்தைத் தொடர்ந்து நந்தி பகவான் தனி மண்டபத்தில் அருள் பாலிக்கிறார். அடுத்து, மகாமண்டபம். இதன் வலதுபுறம் இறைவி பிரஹன்நாயகி அம்பாள் சந்நதியும் சந்நதிக்கு முன்பு நந்தியும், பலிபீடமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் இரட்டை விநாயகரும், வலதுபுறம் சுப்பிரமணியரும் அருள்பாலிக்கிறார்கள். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமுண்டீஸ்வர சுவாமி லிங்கத் திருமேனியில் திகழ்கிறார்.
இறைவனின் தேவக்கோட்டத்தில் தென்திசையில் அர்த்தநாரீஸ்வரர், நர்த்தன கணபதி, கங்காள மூர்த்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோரும் மேல்திசையில் மகாவிஷ்ணுவும் வடதிசையில் பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆகியோரும் காட்சி தருகிறார்கள். நான்கு புறமும் அழகிய நெடிதுயர்ந்த திருமதிற் சுவர்கள் ஆலயத்திற்கு அழகு சேர்க்கின்றன. பிராகாரத்தின் வடக்கில் சண்டிகேஸ்வரர் சந்நதி உள்ளது. தென்பிராகாரத்தில் தீர்த்தங்கர சாஸ்தாவின் திருமேனி திறந்த வெளியில் அமைந்திருக்கிறது. இவருக்கு காப்பரிசி நிவேனம் செய்து அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால் மழை பொழியும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். மகாமண்டபத்தின் இடதுபுறமுள்ள இரட்டை விநாயகரிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்தால் களவுபோன பொருட்கள் திரும்பக் கிடைப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவதால் தாம் செய்த பாவங்கள் யாவும் கரையும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
சீர்காழி - திருப்பனந்தாள் பேருந்து தடத்திலுள்ள பந்தநல்லூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது சோழிய விளாகம்.
No comments:
Post a Comment