Tuesday, 22 August 2017

காக்காவுக்கு ஒரு உருண்டை, குருவிக்கு ஒரு உருண்டை


பெங்களூரு பழைய ஏர்போர்ட் ரோட்டிலே கைலாச மலையில் இருக்கிற மாதிரி, ஒரு பெரிய சிவபெருமான் கண் எதிரே பிரமாண்டமாக காட்சி அளித்தார்.

மேலே சென்று பார்த்தால் கோயில் உள்ளே, பெரிய பிள்ளையார், சிவபெருமானுடன், 12 ஜோதிர் லிங்கங்களையும் (கேதார்நாத் லிங்கம் உட்பட) சேவித்தோம். அதிர்ஷ்டம் இருந்தால் நாம் கேதார்நாத் மற்ற இடங்களுக்கு சென்று சிவ பெருமானை தரிசித்து வரும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நான் எண்ணினேன்.

ஆனால், பகவான் வேறு ஒரு திட்டத்தை எனக்காக வைத்திருந்தார் என்பது பிறகு தான் எனக்குத்தெரிந்தது.

வீட்டிற்கு திரும்பி வந்தால், என்னுடைய மதனி ஹைதராபாத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றார்.

""மைத்துனரே, இந்த கணம் என்னை ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோயிலுக்கு அழைத்து செல்லுங்கள். உங்களைத்தான் ரொம்ப நம்பிக்கொண்டு வந்துட்டேன்,'' என்றார். 

""அது சரி மதனி; திடுதிப்புன்னு வந்திருக்கேளே? இவ்வளவு வருடங்களாக நான் பெங்களூர்லே இருப்பது உண்மை... .ஆனால் நீங்க சொல்கிற கோயில் எங்கே இருக்கிறது, எப்படி போவது என்று எனக்கு ஒன்றுமே தெரியாதே. அப்புறம் லக்கி இருக்கான், அவனை பாத்துக்கொள்ள ஆள் போடவேண்டும். செண்பகத்தின் சவுகர்யத்தை நான் ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா?'' என்றேன்.

"நீங்க அதெல்லாம் பற்றி ஏன் கவலைபடுறேள்? அதெல்லாம் "அவள்' (அன்னபூரணி) கையிலே விட்டுட்டு, .நீங்க கிளம்புங்கோ. செண்பகத்தையும் கூட்டிண்டே போகலாம்''. என்னை திரும்பி யோசிக்கக்கூட விடவில்லை. 

""சரி. நாளை விடிகாலையில் கிளம்புவோம். அந்தக் கோயிலைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோளேன்,'' என்று நான் மதனியை கேட்டுக் கொண்டேன்.
""ஸ்ரீ அம்மனின் சிலையை, ஹொரநாடுவில் நிறுவி வைத்தது ஆதி சங்கராசார்யார். பெங்களூருவில் இருந்து 330 கிலோமீட்டரில் இருக்கிறது நாம் போகும் இடமான ஹொரநாடு. ரயிலில் வந்தால், ஷிமோகா ரயில் நிலையத்தில் வந்து இறங்கலாம்''.

""ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோயில் விசேஷம் என்ன தெரியுமோ? அந்த அம்மனின் ஆசிர்வாதம் பெற்று, கோவிலிலே கொடுக்கும் சாப்பாட்டை ஒரு முறை சாப்பிட்டால் போதும், அப்புறம் வாழ்க்கை முழுக்க நமக்கு உணவுப் பற்றாக்குறை இருக்கவே இருக்காது. கோயிலிலே காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு எல்லாம், வரும் மக்களுக்கு சிரித்த முகத்துடன், மிக அன்புடன் தருகிறார்கள். 

கோயிலுக்குச் சென்றால், அங்கே சாப்பிடாமல் திரும்பி வர விடமாட்டார்கள். இன்னொரு முக்கிய விஷயம்: அன்னையின் சிலை தங்கத்தால் செய்யப்பட்டது. பார்ப்பதற்கு ரொம்ப நன்றாக இருக்கும். மிக லட்சணம்,'' என்று ஒரே மூச்சில் நிறுத்தாமல் சொல்லி முடித்தார் மதனி.

அப்படிதான் அந்த அன்னபூர்ணேஸ்வரி அம்மா என்னை இழுத்தாள். அடுத்த நாள் விடி காலையில், மதனியோட தோழி ஸ்வர்ணா ஒரு டாக்சியுடன் வர, நாங்கள் ஹொரநாடு கிளம்பினோம். 

பழைய விமான நிலையத்தை கடந்து செல்லும் பொழுது, அந்த பிரமாண்டமான சிவபெருமான் காட்சி அளித்தார். அவர் ஏதோ அர்த்தபுஷ்டியாக என்னைப் பார்த்து புன்முறுவல் செய்த மாதிரி தோன்றியது. ""நீ போய் அன்னையை தரிசித்து விட்டு வா. வயிறார உண்டு வா. தனக்காக மட்டும் வாழாமல், மற்றவர்களுடன் கலந்து, சேர்ந்து வாழ்ந்து, பகிர்ந்து உண்ணும் பக்குவம் உனக்கு வந்தவுடன், உனக்கு என்னை கேதார்நாத்தில் சேவிக்கும் வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும்,'' என்று சொல்லாமல் சொன்னதை என் காது நன்றாக கேட்டது.

வழியெல்லாம் ஒரே பச்சை, பசுமை. கையிலே வெண்ணையை வைத்துக்கொண்டு, இயற்கையின் அழகைப்பார்க்க உலகமெல்லாம் சுத்துகிறோமே என்று தோன்றியது.

ஆனந்தமாக குளித்து விட்டு, காலையில் அன்னையை தரிசனம் செய்யக்கிளம்பினால், எனக்கு ஒரே ஆச்சரியம். கோயிலுக்கு செல்லும் சாலை எல்லாம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. 

மனிதர்கள் நடமாட்டம் இருந்தும், ஒரு சத்தம் கிடையாது. எல்லோருமே மெதுவாக பேசுகிறார்கள். எங்கும் அமைதி... அமைதி...!

கோயிலுக்குள் நுழைந்தோம்; அங்கும் நிசப்தம். காச் மூச் என்று சத்தம் கிடையாது. வரிசையாக, எவரையும் அவசரப்படுத்தாமல், அன்னையை தரிசிக்க வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் நிற்கும் மக்களை பார்த்தாலே அந்த அன்னபூர்ணேஸ்வரியை நேரிலே பார்த்தது போல இருந்தது.

கிட்டத்தட்ட தாயாரின் கர்ப்பகிரகம் அருகே வந்து விட்டோம். எவருமே எங்களை அவசரப்படுத்தவில்லை. எந்த ஒரு மனிதரும், பின்னால் இருந்து "தலையைக் குனி, எனக்கு தெரியவில்லை'' என்றெல்லாம் சொல்லவில்லை. அமைதி, நிசப்தம், நிதானம் எங்கும் நிலவியது. 

என்ன ஆச்சர்யம்? சில கோயில்களில், கர்ப்பகிரகத்தின் வெளிச்சம் குறைவில் தாயாரின் சிலை உருவம் எப்படி இருக்கும் என்று சுத்தமாகத் தெரியாது. ஆகவே, வெளிலே இருக்கும் கடைகளில் பெரிய பெரிய படங்களைப் பார்த்துட்டு இந்த மாதிரித்தான் உள்ளே இருக்கிற பகவான் இருப்பார் என்று நாம் நினைத்துக்கொள்ளுவோம். அந்த நினைப்பு அன்னபூர்ணேஸ்வரி கோயிலுக்கு பொருந்தாது.

அங்கே நல்ல பிரகாசமா, ஒளி வீசிக்கொண்டு, அமைதியாக, எல்லோருக்கும் தாயாராக, மகாலட்சுமியாக, துர்கையாக, சரஸ்வதியாக, அழகா, புன்சிரிப்போட, அபய ஹஸ்தத்தோட,சந்தோஷமா, "இருந்து சாப்பிட்டு போடா கண்ணு" ன்னு சொல்ற அந்த அன்னையை ஒரே மனத்துடன் வணங்கும் போது, திடீர் என்று என் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் ஞாபகம் வந்தது. எல்லா ஜீவராசிகளுக்கும் தாயாரின் அருள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள மனம் நாடியது. 

""வாங்கோ.....வாங்கோ", ப்ரேக்பாஸ்ட், அம்மன் பிரசாதம் சாப்பிட்டு விட்டுத்தான் நீங்கள் போகவேண்டும்,'" என்று அவ்வளவு ஆசையோட, அன்போட பரிமாறுபவர் கூப்பிடும் பொழுது, நாம் ஏன் பிகு பண்ண வேண்டும்?
தாராளமாக ப்ளேட் நிறைய சோளம் செதில்கள் (corn flakes)மாதிரி காலை உணவு... கூடவே ஒரு கள்ளிச்சொட்டு காபி கொடுத்தார்கள். கீழே உட்கார முடியாதவர்களுக்கு, மேஜை நாற்காலி போட்டிருந்தார்கள். 

""இன்னும் கொஞ்சம் சாதிக்கிறேன். நீங்க சாப்பிடறதுக்குள்ளே மோர் கூட கொண்டு வருவோம்,'' என்று கன்னட பாஷையில் ஒருவர் சொல்வதைக் கேட்டு, பக்கத்துலே உட்கார்ந்திருந்த மனிதர் எங்களைப்பார்த்து, "அவலக்கா" ரொம்ப நன்றாக இருக்கறது, மோர் சேர்த்துக்கொண்டு சாப்பிடுங்கோ,'' என்று சொன்ன உடனே தான், அது சோளம் செதில்கள் இல்லை... "அவல்' என்று தெரிந்தது. அவலை இந்த மாதிரியும் செய்ய முடியுமா என்று யோசிக்கும் பொழுது, நாம் கேட்காமலே, இன்னும் கொஞ்சம் சாப்பாடு, காபி எல்லாம் சிரித்த முகத்தோடு "சாப்பிடுங்கோ, சாப்பிடுங்கோ" என்று சொல்லிகொண்டே ஸ்வாமி எங்களுக்கும், மற்றவர்களுக்கும் சிற்றுண்டி வினியோகித்தார். 

தங்கி இருந்த இடத்திற்கு திரும்பி வந்தோம். மனசு எப்படித்தான் இவ்வளவு வேகமா ஓடுமோ, இல்லை, பறக்குமோ தெரியவில்லை. நான் ரொம்ப தூரம் சென்று விட்டேன்.

ஒரு ஆசையான, அமைதியான அம்மா. கையிலே வெள்ளிக்கிண்ணம் வைத்திருக்கிறார். அதில் பால் சோறு இருக்கிறது. மேலே வெளிச்சமா, பிரகாசமா வெள்ளி நிலா; காரணமே இல்லாமல் அழுது கொண்டிருக்கும் அம்மாவின் இடுப்பில் இருக்கிற குழந்தை. அட....அது நான் தான்... என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு ஊட்டிவிடுவது என்னுடைய தாய் தான். 

"காக்காக்கு ஒரு உருண்டை... குருவிக்கு ஒரு உருண்டை.... கல்கத்தாலே இருக்கிற மாமாவுக்கு ஒரு உருண்டை... கூட படிக்கிற வைத்யநாதனுக்கு ஒரு உருண்டை....' கொஞ்சி கொஞ்சி ஊட்டி கொண்டிருக்கிற அம்மா; கொஞ்சம் கொஞ்சமா எதிரே இல்லாதவர்களுக்கு கொடுப்பது போல பாவனை செய்து, ஒவ்வொரு வாயா எனக்கு ஊட்டி விட, பால் சோறு கொஞ்சம் கொஞ்சமாக காலி ஆகிக்கொண்டு இருக்கிறது.

பக்கத்திலே இருந்த செண்பகம்...""இதுக்கு தான் திருப்பி திருப்பிச் சொன்னேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்கோ என்று. என்ன அரை தூக்கத்துலே, ""லக்கிக்கு(எங்க வீட்டு நாயின் பெயர்) ஒரு உருண்டை, மற்றும் எவர் எவரோ பேரை சொல்லி, ஒரு உருண்டை என்றெல்லாம் பேத்திண்டிருக்கேள். முழிச்சுக்கோங்கோ,'' என்று சொன்னவுடன், கண்களைத்தடவிக்கொண்டு, "எங்கே என் அம்மா?' என்று தேடினால், அங்கே ஒளிப்பிழம்பாக சுவரில் பெரிய போட்டோவில் அன்னபூர்ணேஸ்வரி தாய்.

""எல்லோருக்கும் கொடுத்து வாழு'' என்று சொன்னது என் காதில் ஒலித்தது. ஒரு வினாடியில் அந்தப்படம் மாறியது. 

என்னுடைய அம்மாவைப் பார்க்கிறேன். அதோ, அவள் இடையில் நானே! அதே வெள்ளிக்கிண்ணம்.

அடுத்த வினாடி, நான் அன்னபூர்ணேஸ்வரி தாயைப் பார்க்கிறேன்.. இப்பொழுது அந்தத் தாயின் எதிரே நான் குழந்தை இல்லை...ஒரு யுவன்...வேஷ்டி கட்டி நிற்கிறேன்...அதே பாட்டு...

""காக்கைக்கு ஒரு உருண்டை... குருவிக்கு ஒரு உருண்டை...கல்கத்தாவிலே இருக்கும் மாமாவிற்கு ஒரு உருண்டை... ஆம்...அதை அந்த அன்னபூர்ணேஸ்வரியே பாடியது போல் இருந்தது. கொடுத்து வாழவேண்டும் என்ற வேதவாக்கு மாறவே மாறாது.... எல்லோருக்கும், எப்பொழுதும் கேட்கும்.

No comments:

Post a Comment