Friday, 25 August 2017

செல்வச் செழிப்பை வழங்கும் மீன்குளத்திப் பகவதி கோவில்

செல்வச் செழிப்பை வழங்கும் மீன்குளத்திப் பகவதி கோவில் 

பாலக்காட்டில் உள்ள மீன்குளத்திப் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

கேரள மாநிலம், பாலக்காடு அருகில் பல்லசேனா எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் மீன்குளத்திப் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மேலும், இங்கு வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைப்பதுடன் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

தல வரலாறு :

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் சிதம்பரம் பகுதியில் வைர வணிகம் செய்து வந்த வீரசைவ வேளாள (மன்னாடியார்) வகுப்பைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர், அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் தங்களது வணிகத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் அங்கிருந்து வெளியேறினர்.

சிதம்பரத்திலிருந்து வெளியேறிய அவர்கள், முதலில் அவர்களது குலதெய்வமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கினர். அவர்களில் இளம் வயதினராக இருந்த ஒருவன், கோவிலின் பொற்றாமரைக் குளத்திலிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

அக்குழுவினர் மதுரையிலிருந்து, தாங்கள் வாழ்வதற்கேற்ற ஒரு நல்ல இடத்தைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சில நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கேரள மாநிலம், பாலக்காடு அருகிலுள்ள பல்லசேனா என்னுமிடத்தைச் சென்றடைந்தனர். அந்த இடம் அதிக வளமுடையதாக இருந்ததால், அங்கேயே தங்கிக் கொள்வதென முடிவு செய்தனர். தொடக்கத்தில், அந்தப் பகுதியில் வைர வணிகத்தைச் செய்யத் தொடங்கிய அவர்கள், நாளடைவில், வெளியூர்களுக்கும் சென்று வைர வணிகம் செய்து வளமடைந்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குளத்திலிருந்து கல்லை எடுத்து வந்தவர், அருகிலுள்ள ஊர்களுக்கு வணிகம் செய்யச் செல்வதாக இருந்தால், அவர் எடுத்து வந்த கல்லை மதுரை மீனாட்சியம்மனாக நினைத்து வழிபட்டுக் கொள்வார், அதிகத் தொலைவிலிருக்கும் ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நேரடியாகச் சென்று வழிபட்ட பிறகு வணிகத்துக்குச் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவர் எப்போது வணிகத்துக்குச் சென்றாலும், அவர் கோவில் குளத்திலிருந்து எடுத்து வந்த சிறிய கல்லையும் எடுத்துக் கொண்டு செல்வார்.

இந்நிலையில் ஒருநாள், அவர் வணிகத்துக்காகத் தொலைவிலுள்ள வெளியூர் ஒன்றுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர் வணிகத்துக்குத் தேவையான பொருட்களை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு, கையில் பனை ஓலைக் குடை ஒன்றையும் பிடித்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டார்.

செல்லும் வழியில் ஊருக்கு வெளியிலிருந்த குளம் ஒன்றில் நீராடிவிட்டுச் செல்ல விரும்பிய அவர், பனை ஓலைக்குடையை விரித்து வைத்து, அதன் கீழ் அவர் கொண்டு வந்திருந்த மூட்டையையும் இறக்கி வைத்து விட்டுக் குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு, வயதான காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்ல முடியாதே என்று புதிய கவலை தோன்றியது. அந்தக் கவலையுடனேயே நீராடிவிட்டுக் கரைக்குத் திரும்பினார்.

குளக்கரையில் அவர் வைத்திருந்த மூட்டையையும், குடையையும் எடுக்க முயன்றார். அவர் பல முறை முயற்சித்தும் அதை எடுக்க முடியவில்லை. அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து, அங்கிருக்கும் குடையையும் மூட்டையையும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினர்களை அழைத்துக் கொண்டு திரும்பினார். அவர்களாலும், அவைகளை எடுக்க முடியவில்லை.

அப்போது அவர்களுக்குக் குடை இருந்த இடத்தில் சிறியதாக ஒரு ஒளிவட்டம் இருப்பது தெரிந்தது. அதனைக் கண்ட அவர்கள் ஜோதிடர் ஒருவரை அழைத்து வந்து, குடையையும் மூட்டையையும் எடுக்க முடியாமல் போனதையும், குடை இருக்குமிடத்தில் ஒளிவட்டம் தோன்றி மறைந்ததையும் தெரிவித்தனர்.

அந்தச் ஜோதிடர், அங்கேயேச் சிறிது நேரம் அமர்ந்து தியானித்து விட்டு, அந்தக் குடை இருக்குமிடத்தில் மதுரை மீனாட்சியம்மன் குடியேறி இருப்பது பற்றிச் சொன்னார். அந்தக் குடும்பத்தினர் அவ்விடத்தில் அம்மனுக்குப் புதிதாகக் கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அங்கிருக்கும் அம்மன் குடையில் குடியமர்ந்த காரணத்தால், அந்த இடம் குடைமன்னு (குடமந்து) என்று முதலில் அழைக்கப்பட்டது.

அதன் பின்னர், நானூறு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்தக் கோவிலின் அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்மன், தனக்குப் புதிதாகப் பெரிய கோவில் ஒன்று கட்டி, அங்கு தன்னை இடமாற்றம் செய்யும்படிச் சொன்னார். அதன் பிறகு, ஊருக்கு நடுவில் பெரிய அளவிலான கோவில் கட்டப்பட்டது.

கோவில் அமைப்பு :

கேரள மாநிலக் கோவில்களைப் போன்று கட்டப்பட்டுள்ள இக்கோவிலுக்கு வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைச் செப்புத் தகடு கொண்டு அலங்கரித்துள்ளனர். கோவில் கருவறையில் அம்மன் பகவதியம்மனாகக் கோவில் கொண்டிருக்கிறார். மீன்கள் அதிகமாகக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த குளத்தினருகே இந்த அம்மன் தோன்றியதால், அம்மனுக்கு மீன்குளத்திப் பகவதி அம்மன் என்றே அழைக்கப்படுகிறார்.

இக்கோவில் வளாகத்தில், சப்த மாதர்கள், கணபதி, வீரபத்திரர், துர்க்கை, பரமேஸ்வரன், பைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா ஆகியோருக்குச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு வெளியே பெரியகுளம் ஒன்றும் இருக்கிறது.

மீன்குளத்திப் பகவதி அம்மன்

வழிபாடு :

தினமும் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வார நாட்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை யிலும் வழிபாட்டுக்குத் திறந்து வைக்கப்படுகிறது.

இத்தலத்தில் தினசரி வழிபாட்டில், மூன்று வேளை சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவை தவிர, நிறப்பற சாந்தாட்டம், சோறூட்டல், தங்கத்தாலி, சுயம்வர மலர் வழிபாடு, மலர் வழிபாடு, ஐக்கிய சூத்திரம், பாக்கிய சூத்திரம், சரஸ்வதி மந்திர பூஜை, சந்தனம் சார்த்தல், வெடி பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.

சிறப்பு விழாக்கள் :

இக்கோவிலில் கேரள நாட்காட்டியின்படி மேஷம் (சித்திரை) மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் இக்கோவில் அம்மன் நிறுவப்பட்டதால், அந்நாளை அம்மனின் பிறந்தநாளாகக் கருதிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. கேரள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதத்தில் எட்டு நாட்கள் வரை மாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாட்களில் ஓட்டன் துள்ளல், கதகளி போன்ற மலையாள ஆட்டங்களின் மூலம் புராணக் கதைகள் சொல்லும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவை தவிர, நவராத்திரி, திருக்கார்த்திகை, மண்டல விளக்குத் திருவிழா, பள்ளிசேட்டை, பைரவர் திருவிழா என்று பல சிறப்பு விழாக்கள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன.

வழிபாட்டுப் பலன்கள்:

இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைக்கும். மேலும், இங்கு வழிபடும் பக்தர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்கின்றனர். இக்கோவிலில் இருக்கும் அம்மன் வணிகம் செய்து வந்த குடும்பத்தினரின் வணிகத்தைச் செழிக்கச் செய்தவர் என்பதால், இங்கு வந்து வழிபடும் வணிகர்களின் வணிகம் பெருகிச் செல்வம் அதிகரிக்கும் என்கின்றனர்.

கோவிலுக்கு வெளியிலுள்ள குளத்தில் நீராடிவிட்டு வந்து, அம்மனை வழிபடும் பக்தர்களுக்குத் தீராத நோய்கள் தீர்ந்து போய்விடும் என்பதும் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அம்மன் ஊர்வலம்:

மீன்குளத்திப் பகவதி அம்மன் தோற்றத்திற்கு முன்பாக வைக்கப்பட்ட பனை ஓலைக் குடையையும், பொருட்களையும் எடுக்க முடியாமல் போன போது, அவைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மீன்குளத்திப் பகவதி அம்மன் ஊர்வலத்தில் அச்சிறுவர்களின் வழிவந்த குடும்பத்தினர் வீரவாள், திருவிளக்கு போன்றவைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமைவிடம் :

கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரிலிருந்து 70 கிலோமீட்ட தொலைவிலும் இருக்கும் பல்லசேனா எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்லப் பாலக்காடு நகரிலிருந்து அதிக அளவில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்தும் இக்கோவிலுக்குச் செல்லச் சில பேருந்துகள் இருக்கின்றன.

No comments:

Post a Comment