Wednesday, 23 August 2017

த... த... த...



பருஹதாரண்யக உபநிஷதத்தில் சொல்லியுள்ளபடி, அக்காலத்தில் தேவர், மனிதர், அசுரர் ஆகிய அனைவருக்கும் பிரம்மாவைச் சந்திக்கும் சக்தி இருந்தது. ஒரு சமயம் தேவர்கள் பிரம்மாவைச் சந்தித்து தங்கள் நல்வாழ்க்கைக்கு ஏதேனும் <<உபதேசிக்கும்படி கேட்டனர்.

பிரம்மா அவர்களிடம் "த' என்றார். தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் எல்லாருமே அறிவில் சிறந்தவர்களாக விளங்கினர். ஒரு சிறு குறிப்பு கொடுத்தால் போதும். என்ன ஏதென்று புரிந்து கொள்வார்கள். தேவர்களுக்கு பிரம்மா சொன்ன "த' என்பதன் அர்த்தம் புரிந்துவிட்டது. அதாவது, "தாம்யத' என்ற சொல்லின் சுருக்கமாக "த' என்பதை மட்டும் பிரம்மா சொன்னார். இதற்கு "புலன்களை அடக்கு' என்று பொருள். புலன்கள் என்றால் நமது உடலிலுள்ள உறுப்புகள். குறிப்பாக மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. 

இவற்றை யார் ஒருவர் அடக்குகிறாரோ அவருக்கே முழுமையானபலன் கிடைக்கும். தேவர்கள் சுகவாசிகள். இந்திரலோகத்தில் சகல சுகங்களும் கிடைக் கும். அதிகமாக சுகம் அனுபவிக்கிறவனுக்கு தப்புசெய்யும் எண்ணம்தலை தூக்கும். அந்தத் தவறுகளே அவன் தண்டனை அடைய காரணமாகி விடும். எத்தனையோ தேவர்கள் தப்பு செய்து பூலோகத்தில் மானிடப்பிறவி எடுத்ததாகவும், விலங்குகளாக உருமாறியதாகவும் படிக்கிறோம். அகலிகைக்கு துரோகம் செய்த இந்திரன் கூட பூமிக்கு வந்து சிவபூஜை செய்தே விமோசனம் பெற வேண்டியதாயிற்று. எனவே, தேவராயினும் அடக்கம் வேண்டும் என்ற ரீதியில் பிரம்மா இப்படி உபதேசித்தார்.

அடுத்து மனிதர்கள் சென்றனர். ""எங்கள் நல்வாழ்வுக்கும் ஏதேனும் <<உபதேசியுங்கள்,'' என்றார்கள். அவர்களிடமும் அதே "த' வை உபதேசித்தார் பிரம்மா.

மனிதர்களுக்கும் அதன் அர்த்தம் <உடனடியாகப் புரிந்து விட்டது. ஏனெனில், அவர்கள் பூலோகத்தில் செய்ய மறந்த ஒன்றைப் பற்றி அவர் குறிப்பிட்டார். "தத்த' என்பதன் சுருக்கமே அது. "தத்த' என்றால் "தானம் கொடு' என்று பொருள். அன்றுமுதல் இன்றுவரை மனிதர்களிடம் இல்லாத குணம் இது. தானம் என்றால் ஏதோ பொருளை மட்டும் வாரிக்கொடுப்பதல்ல. அன்னதானம் செய்வது மட்டுமல்ல. நமக்குத் தெரிந்த ஒரு கலையை பிறருக்கு கற்றுக்கொடுத்தால் அது கூட தானம் தான். ஆனால், இன்று தெய்வீக விஷயங்களான தியானம், பிராணாயாமம் கூட காசாகிக் கொண்டிருப்பது தான் வேதனை. எனவே, மனிதர்களை நோக்கி "நீங்கள் தானம் செய்யுங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

விட்டார்களா அசுரர்கள். அவர்களும் பிரம்மாவின் முன்னால் போய் நின்றார்கள். 

""படைப்புக் கடவுளே! எங்களுக்கும் உபதேசம் செய்யுங்கள்'' என்றார்கள். அவர்களிடம் வழக்கமான "த' என்றே உ<பதேசித்தார் அவர். அவர்களும் விபரமானவர்கள். 

"தயத்வம்' என்பதிலுள்ளமுதல் எழுத்தை உபதேசித்துள்ளார் இவர். அதாவது 'தயையுடன் இரு, இரக்கம் கொள்' என்ற அர்த்தத்தில் இப்படி சொல்லியிருக்கிறார். அசுரர் களான நம்மிடம் இல்லாத ஒரே குணம் இதுதானே!'' என்று புரிந்து கொண்டனர். இதை அவர்கள் அதன்பிறகு கடைபிடித்தார்களா என்றால் இல்லை. எனவே பிரம்மா எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்த "த' வின் விளக்கம் சத்தமாக எல்லார் காதிலும் விழட்டும் என்பதற்காக இடியை உருவாக்கி அதன் சத்தமாக இதை உருவாக்கினார். இடியோசை நமது காதில் எப்படி விழுகிறதோ? ஆனால், அதன் உண்மையான ஒலி "ததத' என்பதாகும். அதாவது, புலன்களை அடக்கு, தானம் செய், கருணையுடன் இரு' என்று அது நமக்கு அறிவுறுத்துகிறதாம்.

இனி யாரைப் பார்த்தாலும் "ததத' என்று சொல்லி, விளக்கத்தையும் சொல்லுங்கள். கேட்பவர்கள் நற்கதி பெறட்டும்.

No comments:

Post a Comment