சக்கரத்தாழ்வார், சுதர்சனர், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழிஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள்.
திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழிஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.
பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம். பொதுவாக, 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார்.‘ஷட்கோண சக்கரம்’ என்னும் ஆறுகோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனரும், ‘திரிகோண சக்கரம்’ எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.
சுதர்சனர் தனது திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார்.சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாக கூறப்படுகிறது.
அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி.மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான்.
அவற்றை அழித்து மனஅமைதியை தருகிறார் சுதர்சன மூர்த்தி. கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்வார். கெட்ட கனவுகள், மன சஞ்சலம், சித்த பிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார்.
ஜாதகத்தில் 6, 8, 12-ம் அதிபதிகளின் திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் ஸ்ரீசுதர்சனரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
புதன், சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும்.
No comments:
Post a Comment