Friday 25 August 2017

அவனும் பொய் சொன்னான்

 

இந்த உலகிலேயே பொய் சொல்லாதவன் யார் என்றால் "அரிச்சந்திரன்' என்று குழந்தை கூட பதில் சொல்லும்.  ஆனால், அவனும் பொய் சொன்னான் என்கிறார் ஒரு முனிவரின் சீடர். இதென்ன புதுக்கதை என்பவர்கள் கதையைத் தொடருங்கள்!     

விஸ்வாமித்திரர் ரொம்ப கோபக்காரர். கோபத்தாலேயே பலமுறை தன் தவசக்தியை இழந்திருக்கிறார். தாடகை என்ற அரக்கி, விஸ்வாமித்திரர் செய்த யாகத்துக்கு இடைஞ்சல் செய்ததால், அவளை வதம் செய்வதற்காக ராமபிரானை அழைக்க வந்தார். ராமனின் தந்தை தசரதர் மகனை அனுப்ப யோசித்தார். "அவனுக்குப் பதில் நான் வருகிறேனே, அவன் சின்னப் பையனாயிற்றே! அவ்வளவு பெரிய அரக்கியை அவனால் அழிக்க முடியாதே,'' என்றெல்லாம் பேசி இழுத்தடித்தார். விஸ்வாமித்திரருக்கு கோபம் வந்துவிட்டது.

அவரது கோபம் பற்றி விளக்க ஒரு வேடிக்கை கதை சொல்வார்கள். விஸ்வாமித்திரருக்கு நட்சத்திரேசன் என்ற சீடன் இருந்தான். அவனிடம் விஸ்வாமித்திரர், ""சீடனே! அரிச்சந்திரன் பொய்யே பேசமாட்டேன் என சத்தியம் செய்துள்ளான். அவனை எப்படியும் பொய் பேச வைப்பதென நான் சவால் விடுத்துள்ளேன். அவன் பொய் பேசுகிறானா இல்லையா என்பதை நீ கவனித்து எனக்கு அறிவிக்க வேண்டும்,'' என்று உத்தரவு போட்டார். சீடன் மிகவும் பவ்வியமாக, ""குருவே! அவன் தான் ஏற்கனவே பொய் சொல்லி விட்டானே,'' என்றதும் விஸ்வாமித்திரருக்கு அதிர்ச்சியும், ஆனந்தமும் ஏற்பட்டது.  தன் சவாலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற நினைப்பில்,""எப்போதடா அவன் பொய் சொன்னான்?'' என ஆவலும் அவசரமும் கலந்து கேட்டார்.""நீங்களும் நானும் அவனது அவைக்குச் சென்ற போது, தங்களை அவன் வரவேற்றானே! அப்போதே பொய் சொல்லிவிட்டானே,'' என்றான் சீடன்.விஸ்வாமித்திரர் கேள்விக்குறியுடன் அவனை நோக்கவே, ""சுவாமி! உங்களை அவன் வரவேற்கும் போது, தங்களைப் போன்ற "பரமசாது' எனது அவைக்கு எழுந்தருள நான் மிக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னானே...'' என்று சொல்லிவிட்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டான்.பார்த்தீர்களா! சில முசுடுகளை தட்டி வைக்க இப்படித்தான் சமயத்தில் பேச வேண்டிஇருக்கிறது! என்ன செய்வது! 

No comments:

Post a Comment