‘‘திரௌபதியை பார்த்துவிட்டு வெறுமே வந்திருக்கிறாய் பிரதிகாமா. இந்த கேள்வியை அவளே வந்து கேட்கட்டுமே. யுதிஷ்டிரர் நேரிடையாக அவளுக்கு பதில் சொல்லட்டுமே அவள் என்ன ஆள் அனுப்புவது? போய் விரைவில் அழைத்து வா’’ என்று துரத்தினார்கள். ‘‘ராஜகுமாரி, அவர்கள் தங்களை சபைக்கு அழைக்கிறார்கள். நீங்கள் வந்து அந்த கேள்வியைக் கேட்டு பதில் தெரிந்து கொள்ளச் சொல்கிறார்கள். கௌரவர்களுக்கு கேடுகாலம் வந்துவிட்டது. உங்களை சபைக்கு வரக் கட்டளையிடும் அளவுக்கு போன ஒரு குடும்பம் செல்வச் செழிப்பில் திளைக்காது அழியும்’’. ‘‘உண்மை மன்னவனே. கடவுளின் சட்டம் அப்படித்தான். தர்மம் அதைத்தான் ேபாதிக்கிறது. தர்மத்தை கடைப்பிடித்தால் அது உதவி செய்யும். எதிர்த்தால் நம்மை பங்கப்படுத்தும். இப்பொழுது என்னுடைய தர்மம் என்ன, நான் என்ன செய்ய வேண்டும்? துரியோதனனைக் கேட்க வேண்டாம். குருவம்சத்தில் சிறந்தவர்கள் அரசவையில் வீற்றிருக்கிறார்கள், அல்லவா? நீதி அறிந்தவர்கள், சிறந்தவர்கள், தர்மம் அறிந்தவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? நான் என்ன செய்ய வேண்டுமென்று அந்த மஹாபுருஷர்களிடம் கேள். அவர்கள் இடும் ஆணைப்படி நான் நடப்பேன்’’
பிரதிகாமன் அங்கு போய் இந்த விஷயத்தைச் சொல்ல, சபை மௌனமாக உட்கார்ந்திருந்தது. அங்குள்ள பெரியோர்கள் தலைகவிழ்ந்தபடி இருந்தார்கள். துரியோதனின் மனம் என்ன வேண்டும் என்று ஆசைப்படுகிறது என்பதை அறிந்திருந்தார்கள். ஆனால், இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். சபையில் உள்ளோர் சொல்லாது போனாலும் இந்த விஷயம் ஏதேனும் ஒரு திருப்பத்திற்கு நகர்ந்துதான் ஆக வேண்டும். இப்படியே வெறும் மௌனத்தோடு முடிந்துவிடக் கூடாது. முடிந்துவிடவும் முடியாது. எனவே, தருமபுத்திரரே மிருதுவான குரலில் அவருக்குத் தெரிந்த ஒருவரிடம் ேபசத் துவங்கினார்: ‘‘மாதவிலக்காக இருந்தாலும், ஒரே வஸ்திரம் அணிந்துள்ளாய் என்றாலும், அதே நிலையில் சபைக்கு வந்து உன்னுடைய மாமனார் முன்பு நில். உன்னைப் போன்ற அரசகுமாரி சபைக்கு வந்தால் அதைக் கண்டு துரியோதனனை சகலரும் நிந்திப்பார்கள். இதை நான் சொன்னதாகச் சொல்.’’ அந்த நபர் மிக வேகமாக திரௌபதியின் மாளிகைக்கு போய் தருமரின் கருத்தை தெரிவித்தான்.
தருமர் மெல்லிய குரலில் யாரிடமோ, எதையோ சொல்லி அனுப்பியது துரியோதனனுக்கு பதட்டமாக இருந்தது. திரௌபதி இங்கு வருவது அவன் கட்டளையாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். அவனுக்கு பயந்து இது நடைபெற வேண்டுமென்று விரும்பினான். சூரர்கள், வீரர்கள் என்று கொண்டாடப்பட்ட பஞ்சபாண்டவர்கள் இடிந்துபோய் உட்கார்ந்திருப்பது, அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. உண்மையிலேயே ஜெயித்துவிட்டோம் என்று பேரானந்தம் ஏற்பட்டது. அருகிலிருந்த ஒருவனை அழைத்து, ‘நீ போய் திரௌபதியை அழைத்து வா. இந்த இடத்திலேயே, கௌரவமான இந்த சபையில் அமர்ந்திருப்பார்கள் அவளுக்கு விடை சொல்வார்கள் என்று சொல். உடனே அழைத்து வா’’ என்று கட்டளையிட்டான். விடையளிக்க வேண்டியது சபை அல்லவா? எனவே, அவன் எழுந்து, பொதுவாக, ‘‘நான் திரௌபதியிடம் என்ன சொல்வது?’’ என்று கேட்டான்.
துரியோதனனுக்கு அவன் கட்டுப்பட்டவனாயினும் அந்த நேரத்தில் அவன் தர்மப்படி நடந்து கொண்டான். நாங்கள் யாரும் திரௌபதியை இங்கு வரச் சொல்லவில்லையே என்று சொன்னால் தான் என்னாவது என்று பயந்தான். தான் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று என்று துரியோதனனுக்கு தெரிந்துவிட்டது. எவன் தனக்கு எந்த நேரத்திலும் பணிவாக இருப்பானோ, தன் கட்டளை கேட்பானோ அவனிடம் அந்தப் பணியை ஒப்படைக்க நினைத்துத் திரும்பினான். ‘‘துச்சாதனா’’ என்று உரக்க அழைத்தான். ‘‘எனக்கு அடிமைப்பட்ட இந்த மனிதன் ஒரு முட்டாள். இந்த பாண்டவர்களுக்கு பயந்து நான் சொன்னபடி போகாதிருக்கிறான். நீ போய் அழைத்து வா. அவளை இங்கு பிடித்திழுத்து வா’’ என்று கட்டளையிட்டான். நல்ல மனிதர்களுக்கு நெருக்கமான மனிதர்கள் இருப்பது போல கெட்ட மனிதர்களுக்கும் நெருக்கமானவர்கள் இருப்பார்கள். துச்சாதனன் எந்த நேரமும் துரியோதனனை வியக்கிறவன். அண்ணனை நம்புகிறவன். அவனுக்கு தம்பியாய் இருப்பதில் பெருமை கொள்பவன்.
‘‘ஹே பாஞ்சாலி, வெளியே வா. நீ சூதில் வெல்லப்பட்டு விட்டாய். என்னைக் கண்டு ஒதுங்கிப் போவாயே. இப்பொழுது வெட்கத்தைவிட்டு எங்களைப் பார். எங்கள் தர்மத்தின்படி உன்னை அடைந்துவிட்டோம். வந்து எங்கள் அரசவையில் நின்று அங்கு வேலை செய். கௌரவர்களுக்கு சேவை செய்.’’ திரௌபதி எழுந்தாள். முகம் துடைத்துக் கொண்டாள். துச்சாதனனை பார்க்காதவாறு விலகிப்போய் படி இறங்கி சூது நடக்கும் சபை நோக்கி ஓடினாள். அங்கு பெண்களுக்கான திருதராஷ்டிரனின் மனைவி இருந்த இடத்திற்கு போக எத்தனித்தாள். ஆனால், துச்சாதனன் அவளை வழிமறித்து அவள் கூந்தலை இறுக பற்றினான். தரதரவென்று இழுத்தான். ‘‘கூப்பிட்ட என்னை புறக்கணித்துவிட்டு உன் இஷ்டம்போல் செயல்படுகிறாயா? அதற்கு உனக்கு உரிமை இல்லை, வா என்னோடு’’ என்று அவளை தெரு வாசல் வழியாக இழுத்துப் போனான். வீரதீரமிக்க புருஷர்கள் இருந்தாலும் திரௌபதி ஒரு அபலையாய் அவன் இழுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல் அவன் பின்னே ஓடினாள்.
புயல் காற்று அலைக்கழிக்கும் வாழைமரம் போல் இழுபட்டாள். ‘‘முட்டாளே, துச்சாதனா, நான் மாதவிலக்காக இருக்கிறேன். ஒற்றை ஆடை மட்டுமே அணிந்திருக்கிறேன். இந்த நிலையில் நான் சபைக்கு வர இயலாது. வரக் கூடாது’’ என்று கதறினாள். பல மன்னர்கள் பார்க்க, பெரியோர்கள் பார்க்க நீள நெடிய அவள் தலைமயிரை பிடித்து இழுத்துக் கொண்டு அந்தச் சபைக்கு துச்சாதனன் போனான். அவன் பிடியிலிருந்து தப்ப முடியாதவளாய் அவள் தடுமாறிக் கொண்டே அவன் பின்னே நடந்தாள். அவள் ஆடை குலைந்து கிடந்தது. தன் நிலையை எண்ணி கலவரப்பட்ட அவள் ஸ்ரீகிருஷ்ணனை மனதால் துதிக்கத் துவங்கினாள். ஆனாலும் அவளுக்கு சபை மீது நம்பிக்கை இருந்தது. இவர் என்னை ஜெயித்தது தர்மம்தானா, அதில் நியாயம் இருக்கிறதா, என்று மறுபடி மறுபடி அவர் சபையை கேட்டாள். பீஷ்மருக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
‘‘தர்மம் மிக சூட்சமமானது. அவர் தன்னை பணயம் வைத்தபிறகுதான், தன்னை தோற்றப் பிறகுதான் உன்னை பணயம் வைத்தார் என்பது உண்மையாயினும் தான் என்று அவர் சொல்வதில் நீயும் இருக்கிறாய். நான் என்னைத் தோற்றேன் என்றால் உன்னை மனைவி என அவர் ஏற்றுக் கொள்வாராயின் அவருக்கு உடைமையான நீயும் தோற்கப்பட்டதாகத்தான் அர்த்தம். ஆனால், இதை நான் சொல்வதைவிட அவரே சொல்லக் கேட்டுவிடு. நான் திரௌபதியை தோற்றேன் என்று யுதிஷ்டிரர் தன் வாயாலேயே சொல்லட்டும். அதுதான் சிறந்த முடிவாக இருக்க முடியும். இதுதான் உனக்கு சிறந்த விடையாக இருக்கும்’’ என்று பேசி உட்கார்ந்தார். அவர் என்ன செய்தாலும் நம்முடைய தமையனார். நம்முடைய தலைவர். நம்முடைய ஸ்வாமி. எனவே, இந்த இடத்தில் இந்த நேரத்தில் எதிர் பேச்சு பேசாதே. அது மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்று பீமனை அர்ஜுனன் அமைதிபடுத்தினான்.
துரியோதனனுக்கு விஷயம் இடதும், வலதுமாக புரண்டு போவது விரும்பவில்லை. அவன் இன்னும் அதிகமாக பாண்டவர்களை அவமானப்படுத்த விரும்பினான். ‘‘துச்சாதனா இந்த பாண்டவர்களுடைய திரௌபதியின் உடையைக் களைந்து போடு. யுதிஷ்டிரர் ஏன் சொல்ல வேண்டும் இங்கு நடந்த விஷயம் சரியா, தவறா? திரௌபதி தோற்கப்பட்டாளா இல்லையா என்பதை நகுல சகாதேவரும், அர்ஜுனனும், பீமனும் சொல்லட்டும். திரௌபதி எங்கள் மனைவி. யுதிஷ்டிரருக்கு அவளை பணயம் வைக்க அதிகாரம் இல்லை என்று இந்தச் சபையில் சொல்லட்டும். நால்வரும் ஒன்றுகூடி யுதிஷ்டிரர் பொய்யன் என்று சொல்லட்டும். அப்பொழுது வெகு எளிதாக உன்னை விடுவித்துவிடுகிறேன். உனக்காக இந்தச் சபை துயரப்படுகிறது. பலபேர் முகத்தை தொங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், உனக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் உன் புருஷர்கள். அவர்கள் ஏதும் சொல்லவில்லை. இது மிகமிக வருத்தத்திற்குரியது திரௌபதி’’ என்று பொய்யாக வருத்தம் தெரிவித்தான்.
நகுல, சகாதேவர்களும், பீமனும், அர்ஜுனனும் என்ன சொல்லப் போகிறார்கள் என்று மன்னர்கள் காத்திருந்தார்கள். ‘‘தன்னை வைக்கும் முன்பு இவர் என்னை வைத்ததினால் நான் தோற்றவனாகிவிட்டேன். என்னை சூதில் தருமபுத்திரர் இழந்துவிட்டார். பிறகு அபிப்ராயம் சொல்லுகின்ற நிலை எனக்கு இல்லை. அவரை விமர்சிக்கின்ற பாங்கு எனக்கு இல்லை. என்னை சூதில் தோற்காமல் இருந்திருந்தால் இந் நேரம் துரியோதனனை அடித்துத் துவைத்திருப்பேன். நூறு பேரையும் அடித்து சாகடித்திருப்பேன். இப்போதும் என் அண்ணன் எனக்கு ஆணையிடுவார் என்றால் உன்னை அடித்து நாசம் செய்து இங்கிருந்து திரௌபதியை தூக்கிக்கொண்டு போவேன். அண்ணன் ஆணை இடவில்லை. அர்ஜுனனும் அமைதியாக இருக்கச் சொல்கிறான். எனவே, நான் பேசாமல் இருப்பதே உத்தமம். நான் பந்தயப் பொருளாகத் தோற்றுப் போனதால் ஏதும் ெசய்ய முடியாமல் இருக்கிறேன். உங்களை அழிக்க முடியாமல் இருக்கிறேன்’’ என்று அலறினான் பீமன்.
விதுரர் எழுந்து அவன் தோள்தட்டி சமாதானம் செய்தார். ‘‘உன்னால் அடிக்க முடியும். உன்னால் இவர்களை கொல்ல முடியும். ஆனால், அமைதியாக இரு’’ என்று ஆசுவாசப்படுத்தினார். கர்ணன் எழுந்து கால்களை விரித்து திரௌபதி அருகே நின்று கொண்டான். இடுப்பில் கை வைத்துப் பேசினான். ‘‘நீ இப்பொது ஒரு அடிமையின் மனைவி. அடிமையின் மனைவியும் அடிமைக்கு எஜமானாக இருப்பவரின் அடிமைதான். துரியோதனனின் அத்தனை சகோதரர்களுக்கும் நீ சேவை செய்ய வேண்டும். இதுவொரு கட்டளை. தப்பித்துக்கொள்ள ஒரு உபாயம் சொல்கிறேன். உன்னுடைய கணவன்கள் உன்னை கைவிட்டு விட்டார்கள். இப்பொழுது குந்தியின் புதல்வர்கள் உனக்கு கணவர்கள் அல்ல. நீ வேறு ஒரு கணவனை, இன்னொரு வீரனை தேர்ந்தெடுத்துக் கொள். அந்த வீரனுக்கு நீ மனைவியானால் அப்பொழுது நீ அடிமையாக மாட்டாய். ஐந்து பேரை மணந்து கொண்ட உனக்கு ஆறாவதாக ஒரு கணவனை தேர்ந்தெடுப்பது கடினமா’’
விதுரருக்கு கர்ணனை கொன்றுவிட வேண்டும்போல் கோபம் வந்தது. அவர் தருமபுத்திரரை நோக்கி பேசலானார்: ‘‘கர்ணனுடைய பேச்சு எனக்கு கோபத்தை உண்டு பண்ணவில்லை. அதிலொரு நியாயம் இருக்கிறது. நீங்கள் திரௌபதியை வைத்து சூதாடாவிட்டால் இந்தப் பேச்சு கேட்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. நீங்கள் செய்தது தவறு. யுதிஷ்டிரரே, பீமனோ, அர்ஜுனனோ இதற்கு பதில் சொல்ல முடியாதவர்களாக இருப்பதை நான் உணர்கிறேன்.’’ துரியோதனன் திரௌபதியின் வனப்பை கவனித்தான். அந்த சபையில் தன் நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் இடது பக்க தொடை வஸ்திரத்தை விலக்கி திரௌபதியை பார்த்து சிரித்தான். அவள் பார்க்கும்படி தன் தொடையை ஆட்டினான். பீமனுக்கு ரெளத்திரம் பொங்கிற்று. ‘‘ஒரு பெரும் யுத்தத்தில் இந்தத் தொடைகளை அடித்து உதைத்து நான் ரத்தம் குடிப்பேன். என் கதையால் உன் கால்களை சிதைப்பேன்’’ என்று சபதம் செய்தான்.
விதுரர் எழுந்தார். ‘‘என்ன ஒரு குரு வம்சம்இது! ஒரு பெண்ணை நடுசபையில் நிற்க வைத்து அவமானப்படுத்தி விவாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. நீ தோற்ற பிறகு அவர் திரௌபதியை தோற்றார். தன்னை தோற்ற பிறகு அவருக்கு மேலும் சூதாட எந்த உரிமையும் இல்லை. வேறு யாரையும் பணயம் வைக்கும் உரிமையும் இல்லை. எனவே, திரௌபதியை தோற்றவளாக கருதக் கூடாது’’ என்று உரக்கச் சொன்னார். ‘‘திரௌபதி, இதை நகுல, சகாதேவன், அர்ஜுனன், பீமன் சொல்லட்டும். உன்னை பணயம் வைத்துத் தோற்க தருமபுத்திரருக்கு உரிமை இல்லை என்று அவர்கள் சொல்லட்டும் நான் கேட்டுக் கொள்கிறேன். இவர் சொல்ல வேண்டாம்’’ என்று விதுரரை எள்ளி நகையாடினான் துரியோதனன். அர்ஜுனன் மெல்லிய குரலில் பேசினான். ‘‘தன்னைத் தோற்ற பிறகு அவர் வேறு யாரையும் பந்தயம் வைக்க முடியாது. வேறு யார் மீதும் அவருக்கு அதிகாரம் கிடையாது.
இதைக் கௌரவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.’’ சபை மௌனமாக நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து துரியோதனன் தம்பி விகர்ணன் என்பவன் எழுந்தான். ‘‘ஏன் திரௌபதி எழுப்பிய வினாவிற்கு யாரும் விடையளிக்காமல் மௌனமாக இருக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. பலமுறை அவள் கேட்டும் நீங்கள் மௌனமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஆலோசனை சொன்னாலும் சொல்லாமல் போனாலும் நான் வாய்மூடி மௌனமாக இருக்கப் போவதில்லை. பேசப் போகிறேன். மதுபானம், சூது, பெண், சிற்றின்பம் என்பதில் ஈடுபட்ட எந்த மனிதனும் மோசமான இடத்திற்குத்தான் போகிறான். சூது ஒரு கெட்ட பழக்கம் என்று தெரிந்ததே. தருமபுத்திரர் தருமம் அறிந்தவர் எப்படி இதில் ஈடுபட்டார் என்பது எனக்குப் புரியவில்லை. தன்னைத் தோற்றபிறகு திரௌபதியை தோற்கடிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் புரியவில்லை.
பந்தயம் அத்தோடு முடிகிறது. அதற்குப் பிறகு சகுனி எழுந்து பந்தயம் வைக்க திரௌபதி இருக்கிறாளே என்று ஞாபகப்படுத்த, இவரும் ஞாபகம் வந்ததுபோல் திரௌபதியை பந்தயம் வைக்கிறார். முடிந்து போன விளையாட்டு மறுபடியும் துவங்குகிறது. அந்த ஆலோசனை தவறானது. குரூரமானது. கபடமானது. இது ஒரு ஏமாற்று வேலை. ஏன் நீங்கள் ஆட்சேபிக்கவில்லை’’ என்று உரக்க கத்தினான். ‘‘விகர்ணா... விகர்ணா... இது உன் வேலை அல்ல’’ கர்ணன் வேகமாக எழுந்தான். ‘‘உன் கையில் இருக்கின்ற கோடாரியால் காலை வெட்டாதே. அரணிக்கட்டையிலிருந்து தோன்றிய தீ அந்த அரணிக்கட்டையையே எரித்துவிடும். அதுபோல் நடந்து கொள்ளாதே. பூமியிலுள்ள புற்களை தின்கின்ற பசு தன் குளம்புகளால் புற்களை நசுக்குவதுபோல் உன்னுடைய கௌரவ குலத்தை நீ இழிவுபடுத்தத்தானே, வெல்லப்பட்ட திரௌபதியை வெல்லப்படாதவள் என்கிறாய்? தருமபுத்திரர்தான் தன்னுடைய எல்லாவற்றையும் சூதில் பணயம் வைத்துவிட்டாரே, அப்பொழுது இவள் எப்படி அந்நியமாவாள்? எனக்கு இருக்கின்ற அத்தனையும் வைக்கிறேன் என்று சொன்ன பிறகு இவள் எப்படி நகர்ந்து போவாள்?
எல்லாம் என்று சொல்லுகிறபோது அதில் திரௌபதியும் அடக்கம்தானே? எப்படி அவளை வெல்லப்படாதவள் என்று சொல்கிறாய்? ஒற்றை ஆடையுடன் திரௌபதியை இழுத்து வந்துவிட்டான், மாதவிலக்கானவளை கொடுமைப்படுத்துகிறான் என்று பேசுகிறாயே. அவள் யார், ஒரே ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டவளா? இல்லையே! ஐந்து பேருக்கு மனைவியானவள். ஐந்து பேருக்கு மனைவியானவளை பத்தினி என்று அழைப்பதில்லை. வேசி என்றுதான் சொல்கிறார்கள். ஒற்றை ஆடையோடு மட்டுமல்ல. நிர்வாணமாகவே அவள் இங்கு கொண்டு வரப்படலாம். ‘‘எல்லோரும் பார்க்க நடந்த ஒரு சூதில் சூது தர்மப்படி சகுனி திரௌபதியை வென்று விட்டான். துச்சாதனா, இந்த விகர்ணன் ஒரு நிர்மூடன். பெரிய பண்டிதனைப் போன்று பேசுகிறான். நீ பாண்டவர்களுடைய ஆடையை ஏன், திரௌபதியின் ஆடையையும் அவிழ்த்து எறி.’’ என்று கர்ணன் கட்டளையிட்டான். பாண்டவர்கள் வஸ்திரங்களை தாமாகக் கழற்றினார்கள். துச்சாதனன் பெரியோர்கள் அமர்ந்திருந்த அந்த சபையில் திரௌபதியின் வஸ்திரத்தை பலமாக பற்றி இழுக்கத் துவங்கினான்.
வஸ்திரம் இழுக்கப்பட துவங்கியதும் உரத்த குரலில் திரௌபதி கிருஷ்ணனை நோக்கி அலறினாள். ‘‘கோவிந்தா, கோபாலா, துவாரகாவாசியே, ஆபத்பாந்தவா, அநாத ரட்சகா, சங்கடம் போக்கும் ஜனார்த்தனா, என்னை காப்பாற்றுங்கள். என்னை காப்பாற்றுங்கள்..’’ என்று பெரிதாக வாய்விட்டு அலறினாள். துவாரகாபுரியில் மனைவியோடு அமர்ந்திருந்த கிருஷ்ணருக்கு திரௌபதியின் பேரழுகை கேட்டது. அவர் தெருவில் இறங்கி ஓடலானார். தன்னை வஸ்திரமாக மாற்றிக் கொண்டு திரௌபதியின் புடவை தலைப்புக்குள் புகுந்துகொண்டார். அந்தப் புடவை தலைப்பை துச்சாதனன் பிடித்துக் கொண்டிருந்தான். இழுக்க இழுக்க அந்தப் புடவை வளர்ந்தது. பல்வேறு வர்ணங்களாக எவ்வளவு இழுத்தாலும் மேலும்மேலும் வளர்ந்தது. திரௌபதியினுடைய மானத்தை மறைத்தது. எத்தனை வேகமாக இழுத்தாலும் மிகப் பெரிய குவியலாக புடவை இருந்ததே தவிர சற்றும் குறையவில்லை. துச்சாதனன் கைக்கு வருவது நிற்கவில்லை.
எவருக்கும் தெரியவில்லை. முற்றிலும் அது மூடியவாறு இருந்தது. துச்சாதனன் களைப்படைந்து விழுந்தான். மனிதருக்கு மிஞ்சிய காரியத்தில் நடந்த இந்த அதிசயம் கண்டு சுற்றியுள்ளோர் கை கூப்பி வியந்தனர். சகுனியையும், துச்சாதனையும் நிந்தித்தார்கள். விகர்ணனைப் புகழ்ந்தார்கள். ‘‘சபையில் இருக்கும் மன்னர்களே, என் பேச்சைக் கேளுங்கள். இதற்கு முன் நான் இப்படி பேசியதில்லை. இப்பொழுது சொல்கிறேன். என்னுடைய மனைவியின் புடவையை இழுத்த இந்த துச்சாதனனின் மார்பைப் பிளந்து இவன் ரத்தத்தை குடிப்பேன். இது சத்தியம். இந்த சொல்லை, இந்தச் செயலை செய்ய முடிக்காதுவிடின் என் மூத்தோர்களுக்கு கிடைத்த உத்தம கதி எனக்கு கிடைக்காமல் போகட்டும்.’’ அதிசயம் நடந்த பிறகு எல்லோருடைய கவனமும் திருதராஷ்டிரன் மீது போயிற்று. திருதராஷ்டிரனுக்கு இந்த அதிசயம் சொல்லப்பட்டது. அவன் திகைத்துப் போனான். சுயம் வந்தவனாய் விழித்துக் கொண்டான். மன்னர்கள் அவனை ஏசுவதை காது கொடுத்து கேட்டான்.
இப்படி ஒரு செயல் நடக்க தடுக்காமல் இருக்கிறீரே என்று அவனை இகழ்வதை கண்டு உள்ளம் நடுங்கினான். ‘‘சிறிய பிள்ளை விகர்ணன் எழுந்து பேசிவிட்டான். ஆனால், இந்தச் சபை மௌனமாக இருக்கிறது. இங்குள்ள மன்னர்கள் அமைதியாக இருக்கிறார்கள். எதற்கு பயந்து என்று தெரியவில்லை. திரௌபதி தோற்கப்பட்டாளா, தயவு செய்து சொல்லுங்கள்’’ என்று கத்தினான். ‘‘துரியோதனா...’’ கர்ணன் எழுந்து தன் குரலை உயர்த்தினான். ‘‘இந்த அடிமை திரௌபதியை உன்னுடைய வீட்டிற்கு அழைத்துப் போ. இவள் இங்கிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி அவள் பேச்சு பொருள் அல்ல. இந்த விஷயம் முடிந்துவிட்டது’’ என்று உத்தரவிட்டான். துச்சாதனனால் திரௌபதி இழுக்கப்பட்டாள். அவளோ தரையில் விழுந்துவிட்டாள். தரையில் விழுந்தவளையும் அவன் தலைமுடி பற்றி இழுத்துப் போனான். மிகக் கேவலமான ஒரு காரியமாக அது இருந்தது. எந்தச் சபையிலும் நடக்கக் கூடாத ஒரு காரியமாக அது இருந்தது. எல்லா நாகரிகத்தையும் தவிடு பொடியாய் உடைத்த காரியமாக அது இருந்தது.
ஏன் இந்த சபை மௌனமாக இருக்கிறது? ஏன் இந்த சபை என்னை காப்பாற்ற முன் வரமாட்டேன் என்கிறது? எதனால் என் அவஸ்தையை பார்த்துக் கொண்டு நீங்கள் எல்லோரும் அமைதியாக இருக்கிறீர்கள்? அரசர்களின் தர்மம் எங்கே போய்விட்டது? திருஷ்டதுய்மன் சகோதரி, பாண்டவர்களின் பத்தினி, கிருஷ்ணருடைய பக்தை இப்படிப்பட்டவளை எப்படி ஒரு சபையில் எப்படி அலங்கோலப்படுத்த முடியும்? அப்பொழுது பீஷ்மர் எழுந்து தர்மம் சூட்சமமான விஷயம் என்று பதில் சொல்லத் துவங்கினார். அப்போது அஸ்தினாபுர யாக சாலையில் ஒரு நரி புகுந்து பெரிதாய் ஊளையிட்டது. நரியின் ஊளை சத்தத்தை கேட்டு யாக சாலையை சுற்றியிருந்த கோவேறு கழுதைகள் பயத்தால் அலறத் துவங்கின. கழுதை கத்தலும், நரியின் ஊளையுமாக ஒரு மோசமான சப்தம் அங்குள்ள அனைவருக்கும் கேட்டது. அது நல்ல சகுனம் அல்ல என்பது எல்லோருக்கும் புரிந்தது. திருதராஷ்டிரன் கவலையானான். சுற்றியுள்ள மன்னர்கள் நிந்திப்பதை காது கொடுத்துக் கேட்டான்.
மன்னர்கள் பேச்சால் கலக்கமடைந் திருந்தவன் மனதிற்குள் நரியின் ஊளையும், கழுதையின் ஓலமும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. இப்பொழுது, தான் பேச வேண்டிய நேரம் என்று திருதராஷ்டிரன் உணர்ந்து கொண்டான். தாமதமானாலும் மிகச் சரியான வார்த்தைகளை பேசத் துவங்கினான். ‘‘ துரியோதனா, முட்டாளே! குரு குலத்திற்கு நன்மை தராத விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாய். நான் எப்படிச் சொன்னாலும் உன்னிடம் எடுபடமாட்டேன் என்கிறது. தவறான வழிகாட்டுதலில் நடந்து கொண்டிருக்கிறாய். சொந்த சகோதரர்களின் மனைவியை இழுத்து வந்து அசிங்கம் செய்கிறாய். ஆபாசமாய் பேசுகிறாய். திரௌபதி... மகளே, என் மருமகளில் நீ சிறந்தவள். என்னிடம் ஏதாவது வரம் கேட்கவேண்டுமென்று இருந்தால் கேள். நான் நிச்சயம் செய்கிறேன்.’’ என்று கை உயர்த்தி சத்தியம் செய்தான்.
‘‘புருஷன் அடிமையானதால் அவர் மூலம் எனக்கு பிறந்த குழந்தைகளும் அடிமையாகிவிட்டனர். பெற்ற மகன் அடிமையாக இருப்பது என்பது ஒரு தாய்க்கு சிறப்பு அல்ல. எனவே என்னுடைய புருஷனை அவருடைய அடிமைத் தளத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அவர் யாருக்கும் தாஸனல்ல என்று நீங்கள் சொல்ல வேண்டும்’’ என்று சொல்ல, அவன் சரி என்று சத்தியம் செய்தான். கோவிந்தா, கோபாலா, துவாரகாவாசியே, ஆபத்பாந்தவா, அநாத ரட்சகா, சங்கடம் போக்கும் ஜனார்த்தனா, என்னை காப்பாற்றுங்கள். என்னை காப்பாற்றுங்கள்..’’ என்று பெரிதாக வாய்விட்டு அலறினாள். துவாரகாபுரியில் மனைவியோடு அமர்ந்திருந்த கிருஷ்ணருக்கு திரௌபதியின் பேரழுகை கேட்டது. அவர் தெருவில் இறங்கி ஓடலானார். தன்னை வஸ்திரமாக மாற்றிக் கொண்டு திரௌபதியின் புடவை தலைப்புக்குள் புகுந்து கொண்டார் என்று வரலாறு கூறுகின்றது.
No comments:
Post a Comment