Tuesday 22 August 2017

ஸ்ரீராமபிரான் ஜடாயுவிற்கு மோட்சம் அருளிய எட்டெழுத்துப் பெருமாள் திருக்கோவில்


வயல் வெளிகள் சூழ ரம்மியமான சூழ்நிலையின் நடுவில் அமையப்பெற்று ஊரின் எல்லையில் கோட்டை போல் உருவாகி இருக்கும் கோவில்தான் அருள்மிகு ஸ்ரீ எட்டெழுத்துப் பெருமாள் திருக்கோவில். பலநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் முழுக்க முழுக்க சித்தர்கள் வாழ்ந்த இடமாகவும், அச்சித்தர்களுக்கு ஸ்ரீ ராமர் காட்சியளித்த இடமாகவும், ராமரின் பாதம்பட்ட இடமாகவும், சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோவிலாகவும், பழைய ஏடுகள் மூலம் தெரியவருகிறது தருமபதி – இது திரேதாயுக காலத்தில் ஆதி நாராயண ஸ்தலமாக, மிகப் பெரிய ஆன்மீகக் கோட்டையாக, ஸ்ரீ ராமபிரான் தனது சக்திகளை ஆதி நாராயணர் சந்ததியில் அவதாரப் பெருக்கத்தோடு மஹாசக்தியாக உருவகித்துக் கொண்ட ஸ்தலமாக விளங்கி, பின், கால ஓட்டத்தில், பூமிக்கடியில் அமிழ்ந்து காணப்படுகிறது.

திருநெல்வேலி நகரில் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி என்னும் பொருணையாற்று நதிக் கரையில் அமைந்துள்ள இப்புண்ணிய பூமியில் தான் ஸ்ரீ ராமபிரான் ஜடாயுவிற்கு மோட்சம் அருளினார். பின், ஸ்ரீராமபிரான் சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவ பூஜை நிகழ்த்திய புண்ணிய பூமியும் இதுவே. ராமபிரான் ஈஸ்வரனை பூஜித்த ஸ்தலமாகையால், பழைய ராமேஸ்வரம் என்றும், சிவபெருமானும் ஸ்ரீ ராமபிரானும் சேர்ந்து அருளும் புண்ணிய பூமியாதலால், சேர்ந்த ஐயன் மங்கலம் என்று பெயர் பெற்ற இத்தலங்கள், காலப்போக்கில் மருவி தற்போது அருகன்குளம் மேலூர் என்றும் சேந்திமங்கலம் என்றும் அழைக்கப்படுகின்றன. பழைய ராமேஸ்வரம் என்னும் பழைய கிராமத்தில் அவதரித்த மாயாண்டிச்சித்தர் தனது 28ம் வயதில் திருநெல்வேலி அருகில் உள்ள வல்லநாட்டு மலையில் கடுந்தவம் புரிந்து வருகையில், அய்யா எட்டெழுத்துப் பெருமாள் ஒரு வயோதிகர் உருவில் பிரசன்னமாகி, பால்கஞ்சி கொடுத்து, ஊருக்குச் சென்று அய்யாவை வணங்குமாறு கூறி மறைந்து விடுகிறார். 

ஓர் ஓலைச்சுவடியும் கைவரப் பெற்றார் மாயாண்டிச்சித்தர். அய்யா எட்டெழுத்துப் பெருமாள் உத்தரவுப்படி ஊருக்குத் திரும்பிய மாயாண்டிச்சித்தர், வீட்டில் பெருமாள் சிலையை நிறுவி வழி படத்துவங்கினார். தீர்க்கதரிசியான மாயாண்டிச்சித்தரிடம் சுற்றுவட்டார மக்கள் தங்களின் குறைகளைச் சொல்லி, அய்யாவின் அருள்வாக்குப் பெற்றனர். சிறிது காலத்திற்குப் பின், அய்யாவின் அருளால், தற்போது கோவில் அமைந்துள்ள நிலம் கைவரப்பெற்று, அங்கு ஓர் ஓலைக் குடிசையில் அய்யா எட்டெழுத்துப் பெருமாள் கோவில் அமைந்தது. பின்பு, இரண்டு பிரகாரங்களோடு மண்சுவர்க் கட்டிடம் எழுப்பப்பட்டு தளம் போட்ட கோவிலாக உருவானது ஸ்ரீ எட்டெழுத்துப் பெருமாள் ஆலயம்

No comments:

Post a Comment