Friday 4 May 2018

பிறவித் துயர் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் - விழுப்புரம்

பிறவித் துயர் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் - விழுப்புரம்

எத்தனையோ அவதாரங்கள், எத்தனையோ திருவிளையாடல்கள் மூலமாக நாயன்மார்களையும், பல சிவனடியார்களையும், தன்னை வணங்கும்பக்தர்களையும், ஏன்... உமையவளான அன்னை பார்வதியையே பல முறை சோதனைக்குள்ளாக்கி இருக்கிறார் சிவபெருமான்.

அப்படி ஈசனின் பெரும் சோதனையில் சிக்கியவர்கள் அனைவருமே தங்களின் வேதனை தீர்ந்து, பெரும் புகழையும், முக்தியையும் அடைந்திருக்கிறார்கள் என்பதை பல புராணங்களும், கோவில் தல வரலாறுகளும் நமக்கு எடுத்துரைக்கும் சான்றாகும்.

திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் சிவன் ஆலயத்தில் அருள்புரியும் பிரம்மபுரீஸ்வரரைப் போல, விழுப்புரத்திற்கு அருகே உள்ள பிரம்மதேசம் என்ற திருத்தலத்திலும் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவன் வழிபட்டதால் இத்தலம் ‘பிரம்மதேசம்’ என்றும், இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர மன்னர்கள் என பலரும் போற்றி வணங்கிய திருத்தலம் இந்த பிரம்மதேசம். வேதம் கற்றுத் தெளிந்தவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்ட ஊர் இது என்று கூறப்படுகிறது. இங்கு பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என்ற இரண்டு சிவாலயங்கள் இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். பிரம்மதேசம் ஊரின் மையப்பகுதியில் பாதாளீஸ்வரர் ஆலயமும், ஊரின் வடக்கு திசையில் ஏரிக் கரையின் அருகில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன.

இதில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையில் வீற்றிருக்கும் விநாயகரின் திருநாமம் ‘தேரடி விநாயகர்’ என்பதாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டின்படி, இந்த ஆலயம் சோழ மன்னர்களின் காலத்தவை என்றும், ஆராய்ச்சியின் போது இந்தப் பகுதியில் கிடைத்த துர்க்கை சிலையை வைத்துப் பார்க்கும் போது இந்த ஆலயம் பல்லவர் காலத்திலும் இருந்திருக்கலாம் என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது. 

ஆலயத்திற்குள் நுழைந்ததும் நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். நந்திக்கு வலது புறம் பெரிய மண்டபம் உள்ளது. இது அன்னையின் சன்னிதியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேற்கு நோக்கி உள்ளே நுழைந்தால், பிரமாண்டமான திருச்சுற்று மாளிகையைக் காணலாம். இதில் இரட்டைப் பிரகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உருண்டை வடிவ கல்லால் ஆன தூண்கள், அற்புதமாக வடிவமைக்கப்பட்டு நான்கு புறமும் கல் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. அந்த காலத்தில் இந்த மண்டபத்தில் கல்விச்சாலை செயல்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பிரம்மபுரீஸ்வரர், பெரியநாயகி

இறைவனின் கருவறையானது, கிழக்கு நோக்கி சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே வட்ட வடிவிலான ஆவுடையாரோடு, உயரமான பாணலிங்கத் திருமேனி கொண்டு பிரம்மபுரீஸ்வரர் அருட்காட்சி தருகிறார். முகப்பு மண்டபத்தின் வடக்கில், தெற்கு நோக்கி அமைந்துள்ள சன்னிதியில் அன்னை பெரியநாயகி என்ற திருநாமத்தோடு, பெயருக்கேற்றாற்போல் பெரிய திருவுருவத்தோடு நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். 

அன்னையின் மேல் வலது கரத்தில் அல்லி மலரும், மேல் இடது கரத்தில் தாமரையும் தாங்கியிருக்கிறார். கீழ் வலது கரத்தில் அபய முத்திரையோடும், கீழ் இடது கரத்தில் வரத முத்திரையோடும் அழகுற ஆனந்த தரிசனம் தருகின்றாள். தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே பிரம்மன் அருள்கின்றனர். மேலும் பிரகாரத்தில் விநாயகர், நின்ற கோல விநாயகர், வள்ளி-தெய்வானையோடு வஜ்ஜிரப்படை மற்றும் சக்திப்படை ஏந்திய முருகப்பெருமான், துர்க்கையம்மன், காலபைரவர் ஆகியோரது சன்னிதிகளும், வடதிசையில் சண்டிகேஸ்வரர், அருகில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றனர்.

இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சிறந்த குரு பரி காரத் தலமாக விளங்குகிறது. குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மதேவன். எனவே இத்தலத்தில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும். மேலும் திங்கட்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்ம நட்சத்திர நாட்களில் பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரரை வணங்குவது பலன்கள் பலவற்றை தரும். 

மேலும் முற்பிறவி மற்றும் இப்பிறவி பாவங்களைப் போக்கும் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு மாசி மகம், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும். மாசி மகத்தன்று, இத்தலத்திற்கு வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மனேரி சாஸ்தா ஆலயத்திற்குச் சென்று தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆலயம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பூஜை செய்பவர்கள் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. இருப்பினும் கிராமத்தில் உள்ள ஒருவர் பூஜை செய்கிறார்.

கல்வெட்டுச் சிறப்பு

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் 1918-ம் ஆண்டு நடந்த ஆய்வின்படி இந்தப் பகுதியில் 34 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அந்த கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் என பலரும் இந்த பிரம்மதேசத்தின் மீது அதிகமாக பற்றுகொண்டிருந்ததை அறிய முடிகிறது.

தவிர இந்த கல்வெட்டுகளின் மூலமாக முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழதேவன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், பிற்கால பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெரும்சிங்கன், ஜடாவர்ம சுந்தரபாண்டியன், சாளுக்கிய மன்னனான நரசிங்க மகாராஜன், விஜயநகர மன்னர்களான வீரப்பிரதாப தேவராய மகாராயர், வீரப்புக்கண்ணுடையார் என பலரும் இத்தலத்திற்கு திருப்பணி செய்திருப்பது உறுதியாகிறது. 

விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் 16 கிலோமீட்டர் தொலைவில் நேம்பூர் என்ற ஊர் வரும். இந்த ஊரில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் பிரம்மதேசத்தை அடையலாம். நேம்பூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 

No comments:

Post a Comment