
ஆசியாவின் இரண்டாவது ராமேஸ்வரம் என அழைக்கப்படுகிறது பாபநாசம். ராமபிரான், சீதை, அனுமன், லட்சுமணர் ஆகிய நால்வரும் நிறுவிய 108 லிங்கங்கள் இந்த கோயிலில் உள்ளன. 108 லிங்கங்களையும் ஒரே கோயிலில் ஒரே சமயத்தில் தரிசிக்க முடியும் என்பது ஆன்மிக ஆச்சரியம்தானே! தஞ்சாவூரில் உள்ள பெரிய லிங்கத்திற்கு அடுத்த பெரிய லிங்கம் இந்த கோயிலில் உள்ளது. ராமேஸ் வரம் கோயில் மூலவருக்கு ராமநாதர் என்று பெயர். இங்குள்ள மூலவருக்கு ராமலிங்கம் என்று பெயர். அம்பாள் பெயர் பர்வதவர்த்தினி, அம்பாள் சந்நதியில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமையில், சிறப்பு பூஜை நடக்கிறது. குருவாயூர் போலவும், ஒப்பிலியப்பன் கோயில் போலவும், இங்கும் பக்தர்கள் துலாபாரம் கொடுக்கிறார்கள். ஐந்தடி உயரமுள்ள லிங்கம் அனுமந்தலிங்கம் என அழைக்கப்படுகிறது. கர்ப்பகிரக விமானம் காசி கோபுரங்களைப்போல அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். கோயில் வெளிப்பிராகாரத்தை 108 முறை வலம் வருவதை பக்தர்கள் பெரும் பாக்யமாக கருதுகிறார்கள்.
அனுமந்தலிங்க கோயிலை சேர்ந்தே வலம் வரவேண்டும். சாதாரண நாளிலும், பௌர்ணமி, அமாவாசை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் 108 முறை வலம் வருகிறார்கள். நாளுக்கு நாள் கோயிலை வலம் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இங்குள்ள சுப்பிரமணியர் 108 லிங்கங்கள் சந்நதிக்கு எதிரில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். அம்பாள் சந்நதி, சுவாமி சந்நதிக்கு நடுவில் இவர் வீற்றிருப்பதால் சோமாஸ்கந்தர் அம்சம் அங்கே விளங்குகிறது. 108 சிவலிங்கங்களும், 108 சிவ மந்திரங்களுக்கு உரியனவாக அமைக்கப்பட்டுள்ளன. 108 சிவலிங்கங்களும் 108 சிவக்ஷேத்திரங்களாகத் திகழ்கின்றன. இக்கோயிலை வணங்கினால் 108 சிவக்ஷேத்திரங்களை வணங்கிய பலன் கிடைக்கும். கோனார்க் போல, தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆறடி உயர சூரியனை கருங்கல்லில் அமைத்திருக்கிறார்கள். ராம பிரான் இந்தச் சூரியனின் முன்பாக ‘ஆதித்ய ஹிருதயம்’ என்ற மந்திரம் பாடி அருள் பெற்றதாக கூறப்படுகிறது.
உடல் ஆரோக்கியம், எதிரியை வெற்றி கொள்ளுதல் மற்றும் மனோபலம் பெற இவரை பக்தர்கள் வணங்குகிறார்கள். ஞாயிறன்று இந்தச் சூரிய பகவானுக்கு, அர்ச்சனை அபிஷேகம் என அமர்க்களப்படுகிறது. தாமரை மலர்களால் இவரை அர்ச்சித்து, பிறகு கோதுமை சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாகப் படைக்கிறார்கள். அன்னபூரணியை காசியில் மட்டுமே காண முடியும். ஆனால், இங்கு அன்னபூரணி மட்டுமல்லாமல் விசாலாட்சி-காசி விஸ்வநாதர் சந்நதியும் உள்ளது. துர்க்கை, தனிச் சந்நதி கொண்டு வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள். ராமேஸ்வரம் செல்பவர்கள் இங்கு வந்து தரிசிப்பதன் மூலம், தங்களுக்கான தெய்வ அனுக்ரகம் வலுப்பெறுகிறது என்ற நம்பிக்கை நிலவுவதால், ஏராளமான வட இந்தியர்களும் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.
பாபநாசம், தஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment