வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் பாலாற்றின் ஓரம் உள்ள உத்திர ரங்கநாதர் கோயில். இத்தலம் பற்றி ‘பிரம்மாண்ட புராணம்’ என்ற தலைப்பில் பிருகு மகரிஷிக்கு இரண்டு அத்தியாயங்களை நாரதர் கூறியுள்ளார். பள்ளிகொண்டா ரங்கநாதரை தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். அதற்கான இடத்தை தேடினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதைவிட, சத்யவிரத ஷேத்திரம் எனும் காஞ்சிபுரத்தில் செய்வதே சாலச் சிறந்தது என்று தீர்மானித்தார்.
இந்த நிலையில் சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் தங்களுள் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா, லட்சுமியே உயர்ந்தவள் என்று கூறினார். கோபம் கொண்ட சரஸ்வதி அங்கிருந்து, மேற்கேயுள்ள நந்திதுர்க்க மலைக்குச் சென்றாள்.ஆனால் காஞ்சிபுரத்தில் தான் செய்யவிருக்கும் யாகத்திற்கு, தம்பதி சமேதராய் செல்ல வேண்டும் என்பதால் சரஸ்வதியை அழைத்தார் பிரம்மா. ஆனால் அவர் உடன் வர சம்மதிக்கவில்லை.
எனவே, சாவித்திரி என்ற பெண்ணை உருவாக்கி, அவளை மணம்புரிந்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. இதைக் கேள்வியுற்ற சரஸ்வதி, பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, ‘ஷீரநதி’ அல்லது ‘பத்மினி’ எனும் பாலாற்றில் பாய்ந்து, யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதையறிந்த பிரம்மா, ஸ்ரீமன் நாராயணனிடம் தஞ்சம் புகுந்தார். அவரது வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெருமாள், பள்ளிகொண்டா, திருப்பாற்கடல், காஞ்சிபுரம் என மூன்று இடங்களில் பாலாற்றை வழிமறித்து வெள்ளத்தைத் தடுத்து, பிரம்மாவின் யாகத்தைக் காத்தருளினார் என தல புராணம் கூறுகிறது.
பிரம்மோற்சவம் அறிமுகம்: பிரம்மன் செய்த யாகம் இனிதே முடிந்தபோது நாராயணன், வரதராஜராக தோன்றினார். பிரம்மா வரதராஜனுக்கு பத்து நாட்கள் உற்சவம் கண்டருளினார். இந்த உற்சவமே பிரம் மோற்சவம் ஆகும். முதலில் பிரம்மோற்சவம் தொடங்கியது பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் என்பதும், முதல் பிரம்மோற்சவம் நடத்தியது பிரம்மா என்றும் வரலாறுகள் கூறுகின்றன.
பிரம்மஹத்தி தோஷம்: திரேதாயுகத்தில் தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியோடு வனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது கிளி வடிவில் கூடியிருந்த ரிஷிகளை கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் வேண்டி நின்ற இந்திரன், காச்சயப்ப முனிவர் அறிவுரைப்படி, பள்ளிகொண்டா தலத்து வியாச புஷ்கரணியில் நீராடி, ஓராண்டு காலம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதரை தரிசித்து, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.
பள்ளிகொண்டா கோயிலில் மூலவர் பள்ளிகொண்ட பெருமாள், தெற்கே தலை வைத்து, வடக்கே தன் திருப்பாதங்களைக் காட்டி, பாம்பணையின் மீது எழிலாக பள்ளிகொண்டுள்ளார். அவரின் திருமார்பில் திருமகளும், கொப்பூழ் தாமரையில் நான்முகனும், அருகே ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்துள்ளனர்.
எம்பெருமானின் திருக்கரம் பக்தர்களை ‘வா’ என்று அன்போடு அழைக்கும் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதேப் பொலிவுடன் எம்பெருமான் காட்சி தருகிறார். தாயார் ரங்கநாயகி தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அழகுற அருளாசி வழங்குகிறாள்.
பரிகாரத்தலம் :
இத்தலம் பதினாறு வகை செல்வங்களையும் அள்ளித்தரும் தலமாக போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமணப்பேறு வழங்கும் தலமாக திகழ்வதால், இங்கே திருமண வைபவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நீண்டகாலம் திருமணம் தடைபட்டவர்கள், இங்கு வந்து வேண்டிசென்றால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இங்கு சித்திரையில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம், வைகாசியில் விசாக கருட சேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம், ஆடியில் பூரம், நான்காம் வெள்ளி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபத் திருவிழா, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தனுர் மாத பூஜை, தை மாதத்தில் கிரிவலம், மாசியில் தெப்பல் உற்சவம், பங்குனியில் உத்திரம், பெரியபிராட்டியார் உற்சவம் போன்றவை நடைபெறுகிறது.
கோயிலுக்கு செல்லும் வழி: சென்னையில் இருந்து 150 கிமீ, வேலூரில் இருந்து 23 கிமீ, ஆம்பூரில் இருந்து 25 கிமீ, குடியாத்தத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.
No comments:
Post a Comment