Sunday, 6 August 2017

சுகமான வாழ்வருளும் சுருட்டு நிவேதன முருகன் : விராலிமலை


குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை. வெள்ளிக்கிழமைதோறும் முருகப் பெருமானை  தரிசித்தபின்பே உண்ணும் வழக்கம் உடையவர். வழக்கம்போல் முருகப் பெருமானை தரிசிக்க ஒருநாள் விராலிமலை வந்தார் அவர். வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கியது. ஒரு மேட்டுப் பாங்கான இடத்தில் சற்று ஒதுங்கிக்கொள்ள இடம் இருந்தது. அங்கே சென்றார். மழை விடுவதாக இல்லை. கனமழை கொட்டியது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவு வந்தும் மழை விட்டபாடில்லை. நீண்டநேரமாகக் காத்திருந்ததில் அவருக்குப் பசிக்கத் தொடங்கியது. கையில் உணவில்லை. முருகப் பெருமானையும் தரிசிக்க முடியவில்லை. அப்போதைய குளிருக்குப் புகைக்க ஒரு சுருட்டுகூட இல்லையே என வருந்தினார் அவர்.

பக்தனின் வேதனையை உணர்ந்த முருகன் அவர்முன் ஒரு வழிப்போக்கன்போலத் தோன்றினார். அவருக்கு சுருட்டும், நெருப்பும் கொடுத்து அவருடைய மனவேதனையை போக்கினார். கருப்ப முத்துப்பிள்ளைக்கு பெருமகிழ்ச்சி. வழிப்போக்கனாக வந்தவர் முருகன்தான் என்று புரிந்துகொண்டார். மறுநாள் வெள்ளம் வடிந்து விராலிமலை முருகன் ஆலயம் சென்ற அவர் அங்கு இருந்தவர்களிடம் முதல்நாள் நடந்த சம்பவத்தைக் கூறினார். அனைவருக்கும் வியப்பு. அத்துடன் முருகப்பெருமானுக்கு சுருட்டையே நிவேதனமாக வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது விருப்பப்படி அன்றுமுதல் மாலை பூஜையின்போது, அந்த முருகனுக்கு சுருட்டு நிவேதனமாக வைக்கப்படுகிறது. படைத்தபின் பக்தர்களுக்கு அதையே பிரசாதமாகத் தருகின்றனர்.  

சாலையை ஒட்டி அமைந்துள்ளது இந்த ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆலயம். படியேறி மலைமீது முருகப் பெருமானை தரிசனம்  செய்யும்போது நம் மனமும் உடம்பும் சிலிப்பது நிஜம். நடந்து போகும் வழியெல்லாம் வானரங்கள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடினாலும் அவைகள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை என்பது வியப்பான விஷயம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வள்ளி-தெய்வானையுடன் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விசுவநாதர், விசாலாட்சி, ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. பிராகாரத்தில் மூலகணபதி, சண்டிகேஸ்வரர், நவகிரக நாயகர்கள், வீரபாகு, காலபைரவர், அருணகிரிநாதர் சந்நதிகளைக் காணலாம். இங்குள்ள ஐந்தடி உயர வீரபாகுவின் திருமேனி, பிற எந்த முருகன் ஆலயத்திலும் காண இயலாத ஒன்றாகும். பாதி மலையேறியதும் இடும்பர், கடம்பர் சந்நதி உள்ளது. 

பொதுவாக ஆலயங்களில் பிரமோற்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. கந்த சஷ்டி இங்கு 6 நாட்கள் விழாவாக மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாத கார்த்திகைகள், பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு திருவிழா நாட்களே. ஜனவரி முதல்நாள் மற்றும் சித்திரை முதல்நாள் இங்கு திருப்புகழ் திருப்படித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார். இதன் காரணமாக பிரம்மாவின் புதல்வனான நாரதர் சிவபெருமான் மீது கோபம் கொண்டார். அதைக் கண்ட சிவன் நாரதருக்கு சாபமிட்டார். நாரதர் தன் தவறை உணர்ந்து வருந்த, ‘விராலிமலை சென்று முருகனை தரிசித்து சாப விமோசனம் பெறுவாய்’ என சிவன் கூற, நாரதர் இத்தலம் வந்து முருகனை வேண்டி அவ்வாறே பெற்றார். 

இதற்கு சாட்சியாக நாரதரின் ஐம்பொன் உற்சவர் சிலையை இந்த ஆலயத்தில் காணலாம். அருணகிரிநாதருக்கு மலைமீதுள்ள சந்தான கோட்டம் என்ற மண்டபத்தில் காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சக்திகளையும் அருளினார் முருகன். அருணகிரிநாதர் இத்தலத்தில் 16 திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார். தெற்கு குடகு சாமி என்ற சதாசிவ சுவாமிகள் மற்றும் எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் போன்ற சித்தர்கள் வாழ்ந்த தலம் இது. சுருட்டுடன் தொடர்புடைய இன்னொரு கதையும் உண்டு: புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒருமுறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய  மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. 

எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. ஒருநாள் அவர் கனவில் தோன்றிய முருகன் தனக்கு சுருட்டை நிவேதனமாக வைக்க வேண்டாம் என்று கூறியதால்தான் அவருக்கு வயிற்று வலியைத் தான் தோன்றச் செய்ததாகக் கூற மறுநாள் முதல் சுருட்டு நைவேத்யம் வைக்க, மன்னரின் வயிற்று வலி குணமானது. மலையில் நிறைய விராலி மரங்கள் காணப்பட்டதாலும் தலவிருட்சமாக விராலி மரம் உள்ளதாலும் இந்த ஊருக்கு விராலிமலை என்ற பெயர் வந்திருக்கலாம்  எனக்கூறுகின்றனர். இந்தக் குன்றின் மேல் வாசம் செய்யும் முருகன் தன் பக்தர்களை அரவணைத்து காப்பதில் நிகரற்றவன்.

விராலிமலை, திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. 

No comments:

Post a Comment