செவ்வாய் பகவான் வழிபட்ட தலங்களில் வைத்தீஸ்வரன் கோயிலும் ஒன்று. இங்கு வீற்றிருக்கும் இறைவன் அருள்மிகு வைத்தியநாத சுவாமி, இறைவி தையல்நாயகி. எவற்றாலும் தீர்க்க முடியாத நோய்களை இம்மூர்த்தியின் திருவருளால் தீர்த்துக்கொள்ள முடியும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானுக்கு பெருஞ்சிறப்பு உண்டு. இவருக்கு செல்வ முத்துக்குமாரசுவாமி என்று பெயர். பக்தர்கள் இந்த முருகனை முத்தைய்யா என்று செல்லமாக அழைக்கின்றனர். இத்தலத்தின் தலவிருட்சம் வேம்பு. தீர்த்தத்தின் பெயர் சித்தாமிர்த தீர்த்தம்.
இத்தீர்த்த தலத்தில் செவ்வாய்க்கிழமைகளில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அனைத்து குறைகளும் நீங்கும். இங்கு நீராடி ஈசனை வழிபட்டு அங்கார பகவான் பேறு பெற்றான் என்கிறது புராணம். இந்தக் கோயிலில் அங்காரகனுக்கு தனி சந்நதி உள்ளது. செவ்வாய்க்கு ஒரு சமயம் சரும நோய் ஏற்பட்டு அதனால் வாடினார். வைத்தீஸ்வரன் கோயிலிலுள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி ஒருமண்டலம் வைத்தியநாதசுவாமியை வழிபட்டு நோயிலிருந்து நிவர்த்தியாகி சுயரூபம் பெற்று பூரண நலம் பெற்றார். எனவே இது அங்கார ஷேத்திரம் என்று பெயர் பெற்றது. எந்த மருத்துவத்தாலும் தீர்க்க முடியாத நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்டது வைத்தீஸ்வரன் கோயில் என்பார்கள்.
No comments:
Post a Comment