Thursday, 10 August 2017

கற்கோயில் கட்டி வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்


தேவர்பெட்டா மல்லேஸ்வரர் மகிமை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படுவது தளி பகுதி. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேவர் பெட்டா மலை கிராமம் உள்ளது. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியை ஒட்டியுள்ள, இந்த மலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து 1,100 அடி உயரம் கொண்டது. வருடத்தில் 8 மாதங்கள் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையுடன் காணப்படும் தேவர்பெட்டா மலையில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மல்லேஸ்வரர் கோயில் உள்ளது. ஆதியில் வனத்தில் தங்கியிருந்த சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும் வழிபட்ட சிறப்புக்குரியது மல்லேஸ்வரர் கோயில் என்று அதன் தலவரலாறு கூறுகிறது. தேவர்பெட்டா மலையிலிருந்து உற்பத்தியாகும் சுனையிலிருந்து சனத்குமார நதி உற்பத்தியாகி தளி ஏரிக்கு செல்கிறது. அங்கிருந்து தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் வழியாக பேவநத்தம் காட்டுப்பகுதிக்குள் நுழைந்து தர்மபுரி மாவட்டத்தின் பஞ்சப்பள்ளி அணையை சென்றடைவது இந்த மலைக்கு மேலும் ஒரு சிறப்பு.

தேவர் பெட்டா மலை மல்லேஸ்வரர் கோயிலில் திங்கள் கிழமை, வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க சுற்றுப்புறங்களை சேர்ந்த ஒட்டுமொத்த கிராம மக்களும் திரண்டு வருவர். வழக்கமாக கோயில்களில் காதுகுத்து, முடிகாணிக்கை, அலகு குத்துதல் என்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் தேவர் பெட்டா கோயிலில் மட்டும் சிவனுக்கு பக்தர்கள் கோயில் கட்டி நூதன நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் கட்டி நேர்த்திக்கடன் என்றவுடன் இது சாத்தியமா? என்ற கேள்வி மனதுக்குள் வந்து போவது இயல்பு தான். மலை மீதுள்ள கற்களை எடுத்து அதை கோயில் கோபுரம் போல் அடுக்கி வைத்து, சிவனை நினைத்து மனமுருக வேண்டுவது தான், கோயில் கட்டும் நேர்த்திக்கடனாகும். 

இப்படி சிவனை வழிபட்டு கோயில் கட்டி ேநர்த்திக்கடன் செலுத்துவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். புதிய வீடுகட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிதாக துவங்கும் தொழில் நல்ல முறையில் நடக்கும் என்பது ஆண்டாண்டு காலமாய் சிவனை வழிபடும் பக்தர்களிடம் உள்ள நம்பிக்கை. இதேபோல் ஒரு சில பக்தர்கள், கோயில் கட்டி வழிபடும் கற்களை வீட்டுக்கும் எடுத்துச் சென்று வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்த கற்கள் வீட்டில் இருந்தால் குழந்தைகளை நோய்நொடிகள், துஷ்டசக்திகள் அண்டாது என்பதும் ஐதீகமாக கருதப்படுகிறது. இதே போல் தேன்கனிக்கோட்டை பேவநத்தம் மலையில் உள்ள சிவநஞ்சுண்டேஸ்வரர் மலைக்கோயில், குந்துகோட்டையில் உள்ள மல்லிகார்ஜூணா சுவாமி மலைகோயில்களிலும், சிவனுக்கு கற்கோயில்கள் கட்டி வழிபடுவது தலைமுறைகள் கடந்தும் தொடரும் வழக்கமாக உள்ளது.

மழைக்காக 1008 குடம் தண்ணீரால் அபிஷேகம்

தளி சுற்றுப்புறங்கள் வனங்களும், விளைநிலங்களும் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாசனம் நடக்கிறது. பக்தர்கள் கற்கோயில் கட்டி மல்லேஸ்வரனை வழிபட்டு வாழ்வில் நலம் பெறுவது போல், விவசாயிகள் மழை வேண்டி 1008 குடம் தண்ணீரால் அபிஷேகம் செய்யும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. எங்கள் பகுதியை பொறுத்தவரை வறட்சியால் பெரிய அளவிலான பாதிப்புகள் இதுவரை வந்ததில்லை. மழையும் பொய்த்ததில்லை. மகா சிவராத்திரி நாளில் 1008 குடம் தண்ணீர் கொண்டு, மல்லேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்வதும் ஒரு காரணம் என்கின்றனர் விவசாயிகள்.

1 comment: