திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில் உள்ளது. திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயில், மனநோயால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்தி அடைய வழிபட வேண்டிய திருத்தலமாகும். இதன் அருகிலேயே காவிரி ஆறு ஓடுகிறது. ஸ்ரீதலப்பிரியா என்ற முனிவரின் சீடரான குணசீலர் ஒருமுறை திருப்பதி சென்று வெங்கடாசலப் பெருமானை வணங்கிய பின், அதனால் ஏற்பட்ட மனநிறைவால் எம்பிரானை விட்டு நீங்காதிருக்க விரும்பினார். ஆயினும், குருவின் பணிவிடையை நிறுத்துவதையும் செய்யலாகாது என்பதால், வெங்கடாசலப் பெருமானைத் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், குபேரனிடம் கடனும், தனது பக்தர்களிடம் அன்பும் கொண்டிருந்த பெருமான், அவ்வாறு வர இயலாதெனக் கூறி, தமது ஆசிரமத்திலேயே தவம் இயற்றுமாறு அவரைப் பணித்தார்.
அவ்வாறு குணசீலர் தவம் புரிந்தபோது, புரட்டாசி திங்கள் திருவோண நட்சத்திரமன்று பெருமான் சுயம்புவாக அவரது ஆசிரமத்தில் தோன்றி அருள்புரியத் துவங்கினார். ஒருமுறை தவப் பயணம் மேற்கொள்ளும் தனது குருவுடன் செல்வதா அல்லது ஆசிரமத்தில் சுயம்புவான பெருமானுடன் இருப்பதா என்னும் குழப்பத்தில் குணசீலர் சிக்கித் தவிக்கையில், குரு சேவையே தலையாயது என பெருமான் உணர்த்தினார். குணசீலரின் குழப்பத்தை தீர்த்தமையால், மனக் குழப்பங்களை தீர்க்க வல்ல மாதவனாக பெருமான் விளங்கியதால், இத்தலத்தில் வழிபடுவோர் மனக்குழப்பங்கள் நீங்கப் பெறுவர் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இத்தலமும் குணசீலரின் பெயரைக் கொண்டே குணசீலம் என்று அழைக்கப்படுகிறது.
ஒருமுறை சோழ மன்னருக்குச் சொந்தமான பண்ணையில் இருந்த கறவைப் பசு, குணசீலரின் ஆசிரமத்தில் உள்ள புற்று ஒன்றின் மீது பால் சுரப்பதைக் கண்டு அங்கு சென்ற மன்னரிடம் ஓர் அந்தணர் புற்றின் மீது பால் பொழிந்தால், பெருமானின் தரிசனம் பெறலாம் என்று கூற, மன்னரும் அவ்வாறே செய்து தரிசனம் பெற்றார். மன்னருக்கும் பிரசன்னமான பெருமான் பிரசன்ன வெங்கடேசப் பெருமான் என வழங்கப்படலானார். குணசீலம் திருப்பாணாழ்வார் பிறந்த தலம். இது, திருமங்கையாழ்வார் போன்ற ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம். இத்தலப் பெருமானைத் தரிசிப்பது மனக் குழப்பங்களைத் தீர்க்கும் மாமருந்து என்னும் நம்பிக்கை நிலவுகிறது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதியும், பரிவார மூர்த்திகளும் கிடையாது. பெருமாளின் மார்பில் தாயார் அலமேலுமங்கை அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளக்கிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடைபெறும். மாதந்தோறும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு. சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபடுகள் நடக்கின்றன. மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. மன நோயாளிகள் இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று செயல்படுகிறது.
காலை, மாலையில் நடக்கும் பூஜையின் போது இவர்களுக்கு தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மன நோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள். கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியுள்ளான். பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக் கொள்கின்றனர். குணசீலப் பெருமானை திருப்பதி பெருமாளின் தமையன் என்று கருதுவோரும் உண்டு. திருப்பதிக்கு செல்லும் முன், குணசீலத்துப் பெருமாளை தரிசிப்பது மரபாக நிலவுகிறது. குணசீலம் தென்திருப்பதி என வழங்கப் பெறுகிறது.
No comments:
Post a Comment