
சந்திரனை தலையில் சூடியபடி அருள்பாலிக்கும் சிவபெருமான், மூலவராய் கருணை பொழியும் ஆலயம் ஒன்று முசிறியில் உள்ளது. அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் ஆலயமே அது. இறைவி கற்பூரவல்லி. ஆலயம் கிழக்குத்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட நடைபாதை, அடுத்து வாத்திய மண்டபம், கொலு மண்டபம், உற்சவ மண்டபம் அடுத்து மகா மண்டபம் என அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் ஒரு நீண்ட சுரங்கப்பாதை இருந்து, பின்னர் அதை அடைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்களின் சுதைவடிவ திருமேனிகள் அலங்கரிக்க, உள்ளே கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கீழ்த்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயத் திருச்சுற்றில் நால்வர், விநாயகர், முருகன்-வள்ளி-தெய்வானை, விசுவநாதர், விசாலாட்சி ஆகியோரின் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன. தேவக்கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருளாசி வழங்குகின்றனர்.
வடக்குப் பிராகாரத்தில் இறைவியின் ஆலயம் தனியாக உள்ளது. அன்னை கற்பூரவல்லி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். மேல் இரு கரங்களில் தாமரை மலரையும் கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் கீழ்த்திசை நோக்கிப் பேரருள் நல்குகிறாள். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த நட்சத்திரக்காரர்கள் பலன் பெறவும், பரிகாரம் பெறவும் அன்னையை வணங்க வேண்டிய முறை ஒன்று உள்ளது. அதாவது, தாமரைப் பூவில் அகல் வைத்து தீபமேற்றி ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். பின், அந்த அகல் விளக்கை அன்னை சந்நதியில் வைத்து வாசனை மலர்களால் அன்னையை அர்ச்சனை செய்து வணங்க, நல்ல பரிகாரம் பெற முடியும் என்கின்றனர் பக்தர்கள். இக்கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஒருமுறை சந்திரன் விநாயகரிடம் சாபம் பெற்றார். பிறகு இத்தல இறைவனை ஆராதித்து, தனது சாபம் நீங்கப் பெற்றார். சந்திரனுக்கு சாப விமோசனம் தந்ததால் இத்தல இறைவன் சந்திர மௌலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அதற்கு ஆதாரமாக மூன்றாம் பிறை சந்திரனை தனது தலையில் சூடியுள்ளார் இத்தல இறைவன். வைகாசி விசு, ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணி மூலம், சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி மகம் ஆகிய நாட்களில் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு. ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண இங்கே வருகை தருகின்றனர். இத்தல இறைவன் - இறைவியை ஆராதிப்பதால் கடன் நிவாரணம் பெறலாம் எனவும், புத்திர பாக்யம் கிடைக்கும் எனவும், தொழிலில் அபிவிருத்தி அடையலாம் என்பதெல்லாம் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் காலை 7 முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது முசிறி.
No comments:
Post a Comment