தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக விளங்குகிறது கருங்குளம் வெங்கடாஜலபதி திருக்கோயில். மூலவர் வெங்கடாஜலபதி தனித் தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக, சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தினை பொறுத்தவரை மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். சைவ-வைணவ இணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது இத்தலம். சப்த ரிஷிகளும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து வேத வேள்வி புரிந்து வந்தனர். வேதவதி எனும் தீர்த்தத்தில் தங்கியிருந்தனர். அப்போது, ஸ்வேத முனிவரிடம் வகுளகிரி மலையானாகிய வைகுண்டநாதரின் புகழை கூறுமாறு பிற முனிவர்கள் வேண்டிக் கொண்டனர். அவர் விரிவாகக் கூறினார். பாஞ்சல நாட்டை சித்ராங்கதன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கிருதமாலா. சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த அவனுக்கு தன் முப்பதாவது வயதில் வயிற்று வலி ஏற்பட்டது. ராஜ வைத்தியம் தோற்றுப் போனது.
நீங்காத வலியால் அவதிப்பட்டான். இதற்கு மரணமே தேவலாமோ என்று எரிச்சலுற்றான். அப்போது நாரதர் அங்கே வந்தார். அவனுடைய வேதனையை கண்டார். ‘‘உன் முன் ஜென்ம வினை உன்னை சுடுகிறதப்பா’’ என்றார். ஒன்றும் புரியாமல் விழித்தான் சித்ராங்கதன். விளக்கினார் நாரதர். “முன்னொரு ஜென்மத்தில் கார்முகன் என்ற வேடர் தலைவனாக நீ இருந்தாய். வேட்டையை முடித்துக் கொண்டு ஒரு குளக்கரையில் அமர்ந்தபோது தொலைவில் இரு மான்களை பார்த்தாய். அவ்விரு மான்களும் சேர்ந்திருந்தன. அவற்றின் நிலையை உணராத நீ, கேவலம் மான்தானே என்ற அலட்சியத்தில் அம்பு தொடுத்தாய். ஆண் மான் உன் அம்புக்கு இரையானது. உண்மையில் தர்ப்யர் என்ற முனிவரும், அவர் மனைவியும்தான் அவ்வாறு மான் உருவெடுத்து சேர்ந்திருந்தனர். அடிபட்ட தர்ப்யர் சுய உருவெடுத்து உனக்கு சாபமிட்டு, அப்படியே வீழ்ந்து இறந்து போனார். நீ எவ்வளவோ மன்னிப்பு கோரியும் அதை முனிவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவே பல ஜென்மங்களாக வந்த இந்த வயிற்று வலி இப்போதும் வந்துள்ளது. உன் வயிற்று வலி தீர ஒரே ஒரு வழிதான் உண்டு. தாமிரபரணியின் தென்கரையில் புளிய மரத்தோடு கூடியவராக ஸ்ரீநிவாசர் உறைந்துள்ளார்.
மலையடிவாரத்தில் மார்த்தாண்டேஸ்வரரும், குலசேகரநாயகியும் அருளாட்சி செய்யும் அந்தத் தலத்திற்குச் சென்று ஈசனையும் அடுத்து விஷ்ணுவையும் வழிபட்டுவா, உன் நோய் நீங்கும்” என்றார். இத்தலத்தில் முதலில் சிவ தரிசனமும், பின்பு விஷ்ணு தரிசனமும் செய்ய வேண்டும் என்பார்கள். வெங்கடாஜலபதி சந்தனக் கட்டை வடிவில் விளங்குகிறார். அது என்ன விசித்திரம்? பாஹ்வீகம் என்ற பெயருடைய தேசம் ஒன்று இருந்தது. அதில் கல்ஹாரம் என்ற நகரம் உண்டு. இங்கு சுபகண்டன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு கண்டமாலை என்னும் கழுத்து பிளவை நோய் ஏற்பட்டது. பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. இது தீர திருவேங்கட மலைக்கு பாதயாத்திரையாக வந்தான். வெங்கடேசரை தரிசித்து பல நாட்கள் விரதமிருந்தான். ஒருநாள் பெருமாள் சுபகண்டன் கனவில் தோன்றினார். ‘அரசனே நல்ல மணம் பொருந்திய சந்தனக் கட்டைகளை வைத்து அழகிய தேர் ஒன்றை உருவாக்கு. அந்தத் தேரை எனக்கு அர்ப்பணம் செய்.
தேர் வடிவமைக்கப்பட்ட பிறகும் இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்கும். அவற்றில் நான் வந்தமர்வேன். அவ்விரு சந்தனக் கட்டைகளையும் எடுத்துக் கொண்டு வகுளகிரி சென்று பிரதிஷ்டை செய். கண்டமாலை நோய் காணாது போகும்’ என்றார் பெருமாள். சுபகண்டன் தேரை நிர்மாணித்து திருப்பதி பெருமாளுக்கு அர்ப்பணித்தான். கனவில் கூறிய வண்ணம் இரு சந்தனக் கட்டைகள் மீதமிருந்தன. அதில் வெங்கடாஜலபதியின் தெய்வத் தன்மை பரிபூரணமாக மணம் வீசியது. அரசனும் தென் திசை சென்று வகுளகிரிமலை ஏறி உறங்காப்புளியின் வடப்புறம் ஒரு கோயிலைக் கட்டி இரு சந்தனக் கட்டைகளுள் அருள்பாலிக்கும் வெங்கடாஜலபதியை பிரதிஷ்டை செய்தான். அக்கணமே அவனது கண்டமாலை நோய் அறவே நீங்கியது. தாமிரபரணி நதிக்கரையில் திருப்பேரை என்ற ஒரு நகரம் உண்டு. அதில் கேதாரன் என்ற அந்தணர் வசித்து வந்தார். அவன் மனைவி மாலதி. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் வகுளகிரி நாதனான பகவானை வேண்டி நின்றனர்.
ஒருநாள் அந்தணர் வேடத்தில் பகவான் தோன்றி அவர் வீட்டிற்குச் சென்றார். ‘ஆயிரம் ஏழைகளுக்கு அன்னம் அளித்தால் உனக்கு குழந்தைப் பேறு கிடைக்கும்’ என்று அருளாசி வழங்கினார். அதன்படியே அன்னமளித்து குழந்தைப் பேறு பெற்றனர். வகுளகிரி பகவானை வணங்கி ஆனந்தமுற்றனர். கோயிலின் மூலவர் உருவமற்ற சந்தனக் கட்டையில் வெங்கடாஜலபதியாகவும், ஸ்ரீதேவி-பூதேவி சமேத உற்சவ ஸ்ரீநிவாசப் பெருமாளாகவும் எழுந்தருளியிருக்கிறார். புத்திர பாக்கியம் வேண்டுவோர் திருவோணத்தன்று திருக்கண்ணமுது எனும் பாயசத்தை நிவேதனம் செய்து பலன் பெறுகின்றனர். நினைத்த காரியம் கைகூட திருமஞ்சனம் செய்து மகிழ்கின்றனர். திருமணங்கள் எளிய முறையில் இக்கோயிலில் நடந்தேறுகின்றன. திருமணங்களுக்கு முன்பு ஸ்ரீநிவாச கல்யாணம் வைபவம் பிரார்த்தனையாக நிறைவேற்றப்படுகிறது. அடிவாரத்திலுள்ள சிவாலயம் மார்த்தாண்டேஸ்வரர் என்ற அரசனால் கட்டப்பட்டதாகும். அதனாலேயே இக்கோயிலில் உறையும் சிவனுக்கு ‘மார்த்தாண்டேஸ்வரர்’ என திருப்பெயர் ஏற்பட்டது. இவ்வூரையும் ‘மார்த்தாண்டேஸ்வரர் கருங்குளம்’ என்றே அழைக்கிறார்கள்.
சிவன் கோயிலில் நவகிரகங்கள் தத்தமது தேவியருடன் சேர்ந்து காணப்படுகிறார்கள். சந்திர கிரகணமும், சித்ரா பௌர்ணமியும் இணைந்து வரும் காலங்களில் பகல் வேளைகளிலேயே உற்சவர் ஸ்ரீநிவாசர் மலையை விட்டு கீழே இறங்குவார். இந்த அபூர்வ நிகழ்ச்சி 15 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். சித்ரா பௌர்ணமியன்று உற்சவர் ஸ்ரீநிவாசர் மலையிலிருந்து கீழே இறங்கி பொன்நிற சப்பரத்தில் ஊர்வலம் வந்து, இரவு தாமிரபரணி கரையில் தங்கி மறுநாள் காலையில் வெள்ளை சாத்தி, மீன் விளையாட்டு விளையாடி, பின் பச்சை சாத்தி வகுளகிரி மலையில் ஏறும் காட்சிகள் காணக்காண களிப்பூட்டுபவை. திருப்பதியில் நேர்ந்து வேண்டிக் கொண்டதை தென் திருப்பதியில் நிறைவேற்றலாம் என்கிறார்கள். ஆனால், தென் திருப்பதியாம் கருங்குளத்தில் வேண்டிக் கொண்டதை கருங்குளத்தில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்பது நடைமுறை.
திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் 15-வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து டவுன் பஸ் வசதி உண்டு.
No comments:
Post a Comment