அருள்புரிவார் முருகப்பெருமான்
திருச்சி அடுத்த வயலூரில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது. உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்களால் கட்டப்பட்டது. ஆதி வயலூர், குமார வயலூர், வன்னி வயலூர், அக்னீஸ்வரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோயிலில் சிவன், நடராஜர், பொய்யா கணபதி, வள்ளி, தெய்வானை உள்பட பல சன்னதிகள் உள்ளன. திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் ‘முத்தைத்தரு’ எனத் துவங்கும் திருப்புகழ் பாடினார். பின்னர், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒரு சமயம் அவர் முருகனை தரிசித்தபோது ஒலித்த அசரீரி, ‘வயலூருக்கு வா’ என்றது. மகிழ்ந்த அருணகிரியார் வயலூருக்கு வந்தார். ஆனால், முருகன் காட்சி தரவில்லை. தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர், ‘அசரீரி பொய்யோ?’ என உரக்கக் கத்தினார். அவர் முன் விநாயகர் தோன்றி ‘அசரீரி உண்மையே’ எனச் சொல்லி, இங்கிருந்த சுப்ரமணியரைக் காட்டினார். முருகன் தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார்.
அதன்பின், இத்தல முருகனைப் போற்றி 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். எழுத்தாளர் கோயில்: சிவன் சன்னதிக்கு பின்புறம் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். கந்த சஷ்டியின் போது முருகன் - தெய்வானை, பங்குனி உத்திர விழாவில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின் போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாக காட்சி தருவர். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்து மற்றும் கலைத் துறையில் உள்ளவர்கள், இங்கு வேண்டிக்கொள்ள சிறப்பிடம் பெறலாம்.
வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும், கோலத்தில் காட்சி தரும் நடராஜரை, இங்கு காலை தூக்காத கோலத்தில் தரிசிக்கலாம். இது நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். இவரது ஜடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு ‘சதுரதாண்டவ நடராஜர்’ என்று பெயர். மார்கழி திருவாதிரை திருநாள் இவருக்கு விசேஷமாக நடக்கும். வயலூரில் குடிகொண்டு இருக்கும் முருகப் பெருமான் ஓர் உண்மையை விளக்குகிறார். முருகப்பெருமான் தந்தையையும், தாயையும் முன்னிறுத்தி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட அன்றாடம் தாய் தந்தையர் காலில் பணிந்து பூஜை புரிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி தருகிறார். அருணகிரி நாதருக்கு காட்சி தந்த பொய்யா கணபதி விசேஷமான மூர்த்தியாவார். அருணகிரியார் இவரைப் போற்றி திருப்புகழில் காப்புச் செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ. அந்த அளவிற்கு இவர் பொருளை சீராகக் கொடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார். சிவனுக்குரிய வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். திருமுருக கிருபானந்த வாரியார் இக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். சோழர்கள் இப்பகுதிக்கு வந்து வேட்டையாடும் போது தாகம் எடுக்க மூன்று கிளைகளாக அமைந்து வளர்ந்திருந்த ஒரு கரும்பினை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி ஒடித்த போது கரும்பிலிருந்து உதிரம் கசிய அவ்விடத்தை தோண்டிய போது கரும்பு வளர்ந்த அடிப்பகுதியில் சிவலிங்கம் தென்பட்டது. உடனே மன்னர் கோயிலை அமைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார். இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. சித்தர்கள் தேடிவந்து முக்தி அடையும் இடம் வயலூர் முருகன் சன்னதியாகும். சிறிய சட்டத் தேர் உள்ளது. வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று இத் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6 முதல் மதியம் 1 வரை, மாலை 3.30 முதல் 9 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
குழந்தைகள் தோஷம் நீங்கும்
வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும். முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் என்ற அழகு நிறைந்த தீர்த்தக்குளம் கோயில் முன்புறம் உள்ளது. கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது.முடி இறக்கி காது குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டம், அடிப்பிரதட்ணம் நிறைவேற்றுகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கின்றனர். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.
அருமை அற்புதம் டெலிபதி கிரிதர் பாபா கோயம்புத்தூர் ஃபேஸ்புக் லிங்
ReplyDelete