Thursday, 10 August 2017

கனவில் வந்து காத்த கருணாகரன் : ஸ்ரீமுஷ்ணம்


எத்தனையோ யுகங்களுக்கு முன்னால் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம், இந்த கலியுகத்திலும் மறுபடி அவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அன்று ஹிரண்யாட்சகன் என்ற அரக்கனிடமிருந்து பூமியை அவர் காத்தார்; இந்த யுகத்தில் ராஜபிளவை என்ற கொடுமையான ஒரு நோயிலிருந்து இஸ்லாமியர் ஒருவரை காத்திருக்கிறார். வராஹ அவதாரம், வித்தியாசமானது - பன்றி (வராஹம்) அவதாரம். அதாவது மூக்கு நுனியில் கொம்பு உள்ள பன்றி. இந்த அவதாரத்துக்குக் காரணம் என்ன? ஹிரண்யாட்சகன் என்னும் அசுரன், தன் கற்பனைக்கெட்டியபடி பலவித சித்திரவதை அட்டகாசங்களை நிகழ்த்தினான். தனிமனிதர், தேவர் என்று துன்புறுத்தி, துன்புறுத்தி சலிப்படைந்த அவன், மொத்தமாக பூமியையே பிரபஞ்சத்திலிருந்து பிடுங்கி எடுத்துப் போய் பெருங்கடலினுள் அமிழ்த்தி, ஒளித்து வைத்து சந்தோஷப்பட்டான். தேவர் உலகில் இந்த பாதிப்பு உடனே உணரப்பட்டது. வருணன், அக்னி, ஆதவன் போன்ற தேவர்கள் தம் அருளைப் பொழிய பூமியைத் தேடியபோது அது காணாமல் போயிருந்தது. 

யார் நலனுக்காக தாம் சேவை புரிய வேண்டுமோ அவர்களே இல்லாதபோது தம் பொறுப்புகளுக்குதான் என்ன மரியாதை என்று திகைத்தார்கள். ஆனாலும் அதை அப்படியே விட்டுவிட முடியாத அவசியத்தில் அவர்கள் மஹாவிஷ்ணுவை நாடிச் சென்றார்கள். விவரம் சொன்னார்கள். மஹாவிஷ்ணு அவர்களைக் கருணையுடன் பார்த்தார். தம் பொறுப்பின்மீது அவர்கள் காட்டும் அக்கறையைப் புரிந்து கொண்டார். மனிதர்கள் நிறைந்த பூமியே இல்லை என்றால் தேவருலகத்திற்கு வேலையே இல்லாமல் போய்விடுமே. குறிப்பாக பிரம்மனுக்கு தன் படைப்புகளை வாழச் செய்ய ஓரிடம் வேண்டுமே! அது பூமியாகத்தானே இருக்க வேண்டும்? அங்கே ஐம்பூதங்களும் தம் பணியை மேற்கொண்டு மக்கள் நல்வாழ்வுக்கு வழி காட்ட வேண்டுமே! பூமி ஆழ்கடலில் சிறைபட்டிருப்பதை அறிந்து கொண்ட அவர், அதை மீட்க புதியதோர் அவதாரம் எடுத்தார். அதுதான் வராக அவதாரம். 

அப்படியே கடலுக்குள் பாய்ந்தார். காவல் இருந்த ஹிரண்யாட்சகனை தன் மூக்குக் கொம்பால் குத்திக் கிழித்துக் கொன்றார். பிறகு பூமி உருண்டையை
மூக்குக்கொம்பு அடைப்புக்குள் நிறுத்தி மேலே கொண்டுவந்தார். பூமி உட்பட அனைத்து உலகங்களும் ஆனந்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பூமிதேவியின் வேண்டுகோளின்படி அவர் பூவராகனாக ஸ்ரீமுஷ்ணம் என்ற தலத்தில் கோயில் கொண்டார். இந்தத் தலத்திலும், இந்தக் கலியுகத்தில் ஏற்கெனவே செய்ததுபோலத் தன் வராக குணத்தைக் காட்டவேண்டும் என்பது அவருடைய சித்தம் போலும். இந்த ஊரில் உப்புராயர் என்று ஒரு பக்தர் வாழ்ந்துவந்தார். அவர், வராகப் பெருமாளின் தீவிர பக்தர். இஸ்லாமிய செல்வந்தர் ஒருவரிடம் அவர் பணிபுரிந்து வந்தார். செல்வந்தருக்கு முதுகில் சிறு உபாதை ஒன்று ஆரம்பித்தது. சிறு வலியாகத் தோன்றிய அந்த கோளாறு நாளாவட்டத்தில் பெரிய உபத்திரவமாக தொல்லை கொடுத்தது. தாங்கொணா வலியைத் தந்தது. தன்னை ஆதரிக்கும் செல்வந்தர் படும் வேதனையைக் கண்டு துடித்தார் உப்புராயர்.

எஜமானருக்கு எத்தனையோ விதமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் குணம் என்பது சிறிதும் கிட்டாததை வேதனையுடன் கவனித்து வந்தார். ஒருநாள் மிகுந்த தயக்கத்துடன் அவரிடம், சென்றார். ‘இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் வராகப் பெருமாள் மிகவும் வரப்பிரசாதி. அவர் அருளால் எல்லா துன்பங்களும் விலகும் என்பது என் போன்றவர்களின் அனுபவம். நீங்களும் அவருடைய அருளுக்கு பாத்திரமானால், உங்கள் நீடித்தத் துன்பமும் விலகும். அந்தக் கோயிலிலிருந்து பெருமாளின் தீர்த்த பிரசாதத்தை தினமும் அருந்தினால் உங்கள் நோய் குணமாகும் என்பது என் நம்பிக்கை’ என்றார். அதற்கு செல்வந்தரும் சம்மதித்தார். உடனே பூவராகன் ஆலயத்துக்குச் சென்ற உப்புராயர் தீர்த்த பிரசாதம் வாங்கி வந்தார். அடுத்தடுத்த நாட்களுக்கு அந்த பிரசாதத்தை எஜமானருக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து பருகிய பின்னும் அவர் உபாதையில் மாற்றம் எதுவும் தெரியவில்லை. உப்புராயருக்கு தன் நம்பிக்கை லேசாக ஆட்டம் காண்பதுபோலத் தோன்றியது. 

நேராக வராகர் சந்நதிக்குச் சென்றார். ‘என் நம்பிக்கையைப் பொய்த்துப் போகச் செய்துவிடாதே பெருமாளே. நான் உன் பெருமையை நிலைநாட்ட விரும்பவில்லை; ஆனால், என் எஜமானருக்கு எப்படியாவது குணமாக வேண்டும் என்ற விசுவாசத்தில்தான் உன்னை வேண்டுகிறேன். அவரை குணப்படுத்திவிடு’ என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டு தன் இருப்பிடம் திரும்பினார். அன்று இரவு இஸ்லாமியருக்கு ஒரு கனவு. குப்புறதான் படுத்திருக்கவேண்டும் என்ற நிலையில், அவர் முதுகில் ஒரு பன்றி ஏறுவது போலவும், தன் மூக்குக் கொம்பால் முதுகைக் குத்தி கட்டியை நெம்பி எடுத்துத் தூக்கி எறிவது போலவும் தோன்றியது அவருக்கு. அந்தக் காட்சி மறைந்த அதே கணம், அவருடைய கடுமையான வலியும் மறைந்துவிட்டது! உடனே உப்புராயரைக் கூப்பிட்டார். ‘உன் பெருமாள் என்னைக் காப்பாற்றிவிட்டார்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். 

தன் நோயைத் தீர்த்ததற்கு நன்றிக் காணிக்கையாக தனக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களை ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்கு பட்டயம் எழுதிக் கொடுத்தார். அதோடு, ஒவ்வொரு வருடமும்  மாசி மக உற்சவத்திற்கும் பொருளுதவி புரிந்து வந்தார். அப்போது வராக மூர்த்திக்கு சர்க்கரை நிவேதனம் செய்து இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது இன்றும் நடைமுறையில் வழக்கமாக உள்ளது. அந்த உற்சவத்தின்போது வராஹமூர்த்தி, ராவுத்தர் அடக்கம் செய்யப்பட்ட மசூதி அருகே எழுந்தருளி மேளதாளத்துடன் அவர்களுடைய பூஜையை ஏற்கிறார். பின் ராவுத்தரின் அரண்மனைவரை எம்பெருமான் செல்வதும் இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.  

கடலூர் மாவட்டம், விருத்தாசலம்-கும்பகோணம் சாலையில் ராஜேந்திரப் பட்டினத்திலிருந்து இடதுபுறம் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தத் திருக்கோயில்.

No comments:

Post a Comment