Monday, 7 August 2017

குழந்தைவரம் அளிக்கும் வேம்படி இசக்கியம்மன்


விபத்துக்களில் இருந்தும் காப்பாற்றுகிறாள்!

தூத்துக்குடி நகரின் மேற்கு பகுதியில், பாளையங்கோட்டை சாலையில் உள்ள வஉசி கல்லூரி அருகே உள்ளது வேம்படி இசக்கியம்மன் கோயில். இந்த இசக்கியம்மன் வரலாற்றை ஸ்ரீபுராணம் விரிவாக விளக்குகிறது. இதன் விபரம் வருமாறு: அந்தணர் குலத்தில் பிறந்து, சோமவர்மன் என்பவரை மணந்து 2 ஆண் மகவிற்கு தாயாகி இல்லற வாழ்க்கை நடத்தி வந்தார் அம்பிகை. ஒரு நாள் கணவரின் வேண்டுகோளின்படி, இறந்த முன்னோர்களுக்கு படையலிட்டு பலவகையான உணவு சமைத்திருந்தார். படையலிட்டபின் நீராடி வருவதற்காக சோமவர்மன் தன் வீட்டிற்கு வந்த சுற்றத்தாருடன் ஆற்றுக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்த நேரத்தில் வந்த சமண துறவி உணவு வேண்டி நிற்க, அம்பிகையும் படையலில் இருந்து ஒரு பகுதியை எடுத்து துறவிக்கு உணவு அளித்தார். நீராடிவிட்டு வந்த சோமசர்மனும், சுற்றத்தாரும் படையலுக்கு இருந்த உணவு எச்சில்பட்டு விட்டதே என்று கோபமுற்றனர். சோமவர்மன் அம்பிகையை வீட்டை விட்டு துரத்தினார். 

அம்பிகை தன்னிடம் உணவு கேட்டு பெற்ற சமணத்துறவியை சந்தித்து தன் குறையை முறையிட்டார். மனம் கலங்கி நின்ற அம்பிகை முன்பு கற்பக விருட்சம் தோன்றி அவருக்கு வேண்டியவற்றை அளித்துவர அந்த மரத்தடியிலேயே  தன் குழந்தைகள் மற்றும் சேடிப் பெண்ணுடன்  தங்கினார். சோமவர்மன் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்த எண்ணி அவள் இருக்குமிடம் நோக்கி சென்றார். தூரத்தில் சோமவர்மன் வந்துகொண்டிருப்பதை அம்பிகை பார்த்துவிட்டார். தன் கணவன் மேலும் தன்னை துன்புறுத்த வருவதாக எண்ணி வெடிகுண்டு மலையில் இருந்து குதித்து தற்கொலை புரிந்துகொண்டார். 
அதன் பின்னர் பொன்மயமான உடலெடுத்து இசக்கியாக இறைநிலையடைந்தாள். பிறகு மானிட உருவில் அம்பிகை தன் விருப்பப்படியே கணவனோடும் குழந்தைகளோடும் இல்லற வாழ்வு நடத்தினார். ஒருநாள் அவள் கணவன் அவளது தெய்வ சக்தியை நேரில் காண விரும்பி பொன்மயமான இசக்கி வடிவினை காட்டுமாறு கேட்க அம்பிகையும் தன் இசக்கி வடிவினை எடுக்க அதனை கண்ட சோமவர்மன் அத்தெய்வ உருவை நினைத்து மருண்டு வீட்டைவிட்டு வெளியே சென்று தற்ெகாலை புரிந்துகொண்டார். 

மறுபிறவியில் சிம்மமாக பிறந்து தனது மனைவியான அம்பிகைக்கே வாகனமாக விளங்கும் நிலையடைந்தார். இதனால் வாகனங்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் காவல் தெய்வமாக இசக்கியம்பிகை அருள்புரிகிறார். அம்பாளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு சிலநிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி அம்பாளுக்கு காணிக்கையிட்டு வணங்கி செல்கின்றனர். வாகனங்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் தலமாகவும் குழந்தைபேறு அருளும் தலமாகவும் விளங்குகிறது. பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு கொடைவிழா நடைபெறுகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். இது தவிர விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, மார்கழி திருப்பள்ளி எழுச்சி, தை, ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. இக்கோயிலில் தினமும் மதியம் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இக்கோயில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தங்குவதற்கு தூத்துக்குடியில் ஏராளமான விடுதிகள் உள்ளன. 

No comments:

Post a Comment