Tuesday, 8 August 2017

பகை விலக்கும் பவழ லிங்கம் : பெருவளநல்லூர்


சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயமே பெருவளநல்லூர்  பிரகதீஸ்வரர் கோயில். இந்த ஆலயம் தென்திசை நோக்கி அமைந்துள்ளது. பழமையின் நினைவுச் சின்னமாகத் திகழும் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தை கடந்ததும் விசாலமான மண்டபம் உள்ளது. அதற்கடுத்து அழகிய மகாமண்டபம். மண்டபத்தின் மேல் திசையில் அர்த்த மண்டபத்தைக் கடந்து இறைவன் பிரகதீஸ்வரர் கருவறையில் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கே சிவபெருமானின் லிங்கத் திருமேனி பவழ லிங்கமாய் காட்சி தருகின்றது. முழுவதும் பவழங்களால் ஆன இறைவனின் திருமேனி என பக்தர்கள் கூறுகின்றனர். தீபாரதனை காட்டும்போது லிங்கத்திலிருந்து மின்னலாய் ஒளிரும் ஒளியால் இந்த உண்மை நமக்குத் தெரியவர, மேனி சிலிர்க்கிறது. மகாமண்டபத்தின் எதிரே இறைவி பிரஹன்நாயகி நான்கு கரங்களுடன் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். 

மேலிரு கரங்களில் அங்குசமும் பாசமும் இருக்க, கீழிரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரைகளைக் காட்டி  அருள்பாலிக்கிறாள், அன்னை. திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் காட்சி தருகிறார். அடுத்து முருகன் சந்நதி உள்ளது. இங்கு முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகனாய் பன்னிரண்டு கரங்களுடன் மயில் வாகனத்தில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் அழகை காணக் கண்கோடி வேண்டும். திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் சண்டீஸ்வரர் சந்நதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்புரிகின்றனர். இந்த நவகிகரங்களின் அமைப்பு வித்தியாசமாக உள்ளது. சூரியன் துணைவியுடன் நடுவில் இருக்க பிற கிரக நாயகர்கள் சூரியனைப் பார்த்தபடி அருள்பாலிப்பதுதான் அந்தச் சிறப்பு. ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். 

பொதுவாக சூரியன், பைரவர் திருமேனிகள் ஆலயத்தின் கிழக்குப் பிராகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு ராஜகோபுரத்தின் உட்புறம் அழகான மாடத்தில் வலதுபுறம் பைரவரும் இடதுபுறம் சூரியனும் அருள்பாலிக்கின்றனர். பிரதோஷம் இங்கு வெகு சிறப்பாக நடை பெறுகிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டு பலன் பெறவேண்டிய ஆலயம் இது.  நாம் வணங்கும்போது பவழமாய் பளிச்சிட்டு நமக்கு அருள்புரியும் இத்தல இறைவன் நம் வாழ்க்கையிலும் பளீரென ஒளி விளக்கேற்றி பகை விலக்கி வாழ வைப்பார் என பக்தர்கள் நம்புவது உண்மையே.

திருச்சி-அன்பில் பேருந்து சாலையில் லால்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது பெருவள நல்லூர் என்ற இத்தலம்.

No comments:

Post a Comment