பிரணவத்தின் வடிவமாக விளங்கும் கந்தன் எல்லாம் அறிந்த, அந்த ஈஸ்வரருக்கே பிரணவத்தின் உட்பொருள் உறைத்த தலம் திருவேரகம் என்னும் சுவாமிமலை. சகல செயல்களுக்கும் காரணமாகத் திகழும் பரப்பிரம்மமான பரமேஸ்வரன் தனது தீராத திருவிளையாட்டின் பொருட்டு பிரணவத்தின் உட்பொருளை செவிமடுத்துக் கேட்டுக் கொண்டார் செந்தில்நாதனிடம். தந்தைக்கு உபதேசம் செய்ததோடு, பிரணவப் பொருள் அறியாத பிரம்மனையும் சிறையில் அடைத்தான், அந்த சிங்காரவேலன். மூத்தோர்களை நிந்தித்ததன் விளைவு, மூகத்துவம் (ஊமைத்தன்மை) அடைந்தான் முருகன். இதனால் மூவுலகங்களிலும் சஞ்சலத்தோடு சஞ்சாரம் செய்தான். இதையறிந்த மாமன் மகாவிஷ்ணு கந்தனை அழைத்து, ‘குற்றங்களையெல்லாம் மன்னித்து, அருளுபவர் மகாதேவரே! எனவே, மண்ணுலகில் மகேசனை பூசனைப் புரிவாய்’ என்று அறிவுரை வழங்கினார்.
அதன்படி, காவிரியின் கிளை நதியான அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றங்கரையின் தென்புறம் வன்னி மரத்தின் கீழே சிவலிங்கம் ஸ்தாபித்து, முறைப்படி பூஜைகளை செய்தான் முத்துக்குமரன். பின்னர், பரமேஸ்வரரின் பெருங்கருணையினால் பேசும் திறன் பெற்றான், சஞ்சலம் நீங்கி, சந்தோஷம் அடைந்தான்.
இந்த மகிமையை ஒட்டியே பேச்சிழந்த பல பக்தர்கள் இங்கே வந்து வழிபட்டுத் தம் பேச்சாற்றலை மீண்டும் பெறுகின்றனர். திக்குவாய் குறை உள்ளவர்கள் திருந்தப் பேசுகின்றனர். கந்தன் மட்டுமல்லாது அம்பிகை மற்றும் பிரம்மனும் இங்கே பரமனைப் பூஜித்துள்ளனர். அவதுர்ம மாமுனிகள் தம் தொழுநோய் நிவர்த்திக்காக மங்கள தீர்த்தத்தில் நீராடி, இத்தல ஈசனை வணங்கி, நோய் நீங்கப்பெற்று, சின்மயானந்த வடிவம் அடைந்ததால், ஸ்வாமிக்கு சின்மயானந்த மூர்த்தி என்கிற பெயரும் உண்டானது. மங்கள தீர்த்தமும் சின்மயானந்த தீர்த்தம் என்று போற்றப்பட்டது.
கந்தனின் மறுவடிவான திருஞானசம்பந்தர் இத்தலத்தின் மீது ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார். முன்பு பேணுப்பெருந்துறை என்று அழைக்கப்பட்ட இப்பதி, காவிரித்தென்கரையின் 64வது தலமாகப் போற்றப்படுகின்றது. வாழைமரங்களும், தென்னந்தோப்புகளும், நெற்கழனிகளும் சூழ்ந்த அமைதியான சிறு கிராமம் திருப்பந்துறை. பேருந்து சாலையை ஒட்டினாற்போல் அழகிய ஆலயம் கிழக்கு முகமாக எழிலுற அமையப்பெற்றுள்ளது. ஆலயத்தின் முன்னே அல்லியும், தாமரையும் பூத்துக் குலுங்கும் அழகிய திருக்குளமுள்ளது. இதுவே மங்கள தீர்த்தம். தீர்த்தக்கரை மீது குஹவிநாயகர், சாட்சி விநாயகர் என இரட்டை பிள்ளையார்கள் ஒரே சந்நதியில் அருள்புரிகின்றனர். பின் சிறிய வாயில் வழியே உள்ளே சென்று ராஜகோபுரத்தின் முன் நிற்கிறோம். அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து செல்ல ஒரே பிராகாரத்தினைக் கொண்டு திகழ்கின்றன சுவாமி மற்றும் அம்பாள் சந்நதிகள்.
முதலில் முன்மண்டபம், அங்கு அம்பாள் சந்நதி தென்முகம் பார்த்தவாறு அமைந்திருக்கிறது. மங்களாம்பிகை என்கிற மலையரசியம்மை அழகே வடிவாய் அருள்பாலிக்கின்றாள். அம்மையை வணங்கி, வெளியே வந்து சற்றே நகர அங்கே தண்டபாணி சுவாமி வடக்கு முகமாக நின்ற வண்ணம், குடுமியுடன், சின்முத்திரை காட்டி, கண்கள் மூடிய தியான நிலையில் அதியுன்னதத் தோற்றத்தில் அருட்காட்சியளிக்கின்றார். இத்தலத்தின் பிரதான மூர்த்தியான இவர் தவக்கோலத்தில் சோமாஸ்கந்த அமைப்பினில் வீற்றிருக்கிறார். பின், கருவறையை அடைகிறோம். இங்கே சிவானந்தேஸ்வரர் அற்புத சுயம்புலிங்க வடிவில் அருள்மழை பொழிகின்றார். சற்றே இடப்புறம் சாய்ந்த நிலையில் உள்ளார். பிரணவேஸ்வரர் என்றும் சின்மயானந்த மூர்த்தியென்றும் போற்றப்படுகின்றார்.
நாள்தோறும் இங்கே சூரிய கிரணங்கள் ஸ்வாமி மீது படர்கின்றன. இது இங்கு மட்டுமே நடக்கும் அதிசயமாகும். மகேசரை மனங்குளிர வணங்கி, ஆலய வலம் வருகையில் முதலில் வடக்கு முகமாக கணபதி மற்றும் நால்வர் காட்சி தருகின்றனர். கரிகாலச் சோழனை அரசியாரோடு இருக்கும் காட்சியையும் காணலாம். கஜலட்சுமியும் தனிச் சந்நதியில் தரிசனம் தருகிறார். இங்கு துர்க்கை, விஷ்ணு துர்க்கையாக வீற்றிருக்கிறாள். கிழக்குச் சுற்றில் நவகிரகங்கள் சந்நதியுள்ளது. ஏனைய சிவகோஷ்டங்களும் முறையே ஆலயத்தை அலங்கரிக்கின்றன. ஆதியில் செங்கற்தளியாக இருந்த இக்கோயில் கரிகாலச்சோழன் காலத்தில் கற்கோயிலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் இவ்வூர் திருநரையூர் நாட்டு கிராமமான பேணுப்பெருந்துறை எனவும், இப்பதி ஈசனின் பெயர் ‘பேணுப்பெருந்துறை மகாதேவர்’ எனவும் குறிக்கப்பெற்றுள்ளன.
முற்காலத்தில் மங்கள தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடந்ததாகவும் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. ராஜராஜசோழன் மற்றும் வீரபாண்டியன் கால சாசனக் கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. மாத பிரதோஷங்கள், சஷ்டி, கிருத்திகை ஆகியனவும் சிவராத்திரி, நவராத்திரி, ஆருத்ரா, அன்னாபிஷேகம் போன்றவையும் இங்கு விசேஷங்களாக அனுசரிக்கப்படுகின்றன. பிக்ஷாடனருக்கு சித்திரைப் பரணியில் அமுது படையல் நடைபெறுகிறது. தினசரி இரண்டுகால பூஜைகள். தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சம், வன்னிமரம்.
இத்தலத்தின் விசேட மூர்த்தியான தண்டபாணி ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனை தொடர்ந்து 45 நாட்கள் பருகி வர திக்குவாய் மற்றும் வாய் பேசாத குறைபாடுகள் நீங்குகின்றன; நல்ல வாக்கு வன்மையும், படிப்பில் கவன மிகுதியும் ஏற்படும் என்கிறார்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களது குழந்தை நன்றாகப் பேச வேண்டுமென வேண்டிச் செல்கின்றனர். பின்னர் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வியாழக்கிழமையன்று இத்தல தீர்த்தத்தில் நீராடி, தல கணபதி, ஸ்வாமி-அம்பாள் மற்றும் கந்தனை வழிபட, குஷ்டரோகம் முதலான சரும நோய்கள் யாவும் நீங்குகின்றன.
கும்பகோணம் - திருவாரூர் பேருந்து சாலையில் உள்ள நாச்சியார் கோயிலிலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில், நாச்சியார் கோயிலுக்கு 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பந்துறை.
No comments:
Post a Comment