Tuesday, 15 August 2017

பிணி போக்கும் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் கோயில்


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட சூரனூரில் உள்ளது ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் ஆலயம். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுபாட்டிற்குள் வந்தது. அருகே திருச்சுழியில் உள்ள பூமிநாதர் கோயிலை மையமாக கொண்டு சூரனூர், முடுக்கன்குளம் சிவன் கோயில்களுடன், பாளையம்பட்டி பெருமாள் கோயிலும் இப்போது ராமநாதபுரம் தேவஸ்தான கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றன. சூரனூரில் உள்ள இந்த ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் மகாவிஷ்ணு, மகாலெட்சுமி சன்னிதானங்கள் உள்ளன. இந்த கோயில் குறித்த புராணக்கதை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சிவபக்தரான பத்மாசூரன் இவ்வூரில் பிறந்து வளர்ந்து, பின்னர் இப்பகுதியை ஆண்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இங்குள்ள ‘கைலாசநாதர் புஸ்ப கல ஊருணியில்’ நீராடி தினமும் அதிகாலையில் பத்மாசூரன் சிவனை வழிபட்டுள்ளார். 

இதைக் கண்டு மகிழ்ந்த சிவன், பத்மாசூரனுக்கு, ‘யார் தலை மீது நீ கை வைத்தாலும் அவர்கள் அழிந்து விடுவர்’ என்ற வரத்தைக் கொடுத்தார். ‘வரம் கொடுத்தவர் தலையிலேயே கை வைப்பது’ என்ற சொலவடைக்கேற்ப, பத்மாசூரன், சிவபெருமானின் தலையில் கையை வைத்து சோதிக்கலாம் என்றாராம். இதனால் சிவபெருமான் தனக்கு உகந்த ‘காசி அரளி பூவில்’ மறைந்து கொண்டார். இதையறிந்து அங்கு வந்த மகாவிஷ்ணு, மோகினி உருவம் தரித்து பத்மாசூரன் முன்பு காட்சியளித்தார். மோகினி மீது இச்சை கொண்ட பத்மாசூரன், அவரை அடைய விரும்பினார். ‘நீராடி வந்தால் தன்னை அடையலாம்’ என மோகினி அவதாரம் தெரிவித்திட, சிறிது தண்ணீரை எடுத்து, தனது தலையில் வைத்து பத்மாசூரன் தேய்க்க, தானே அழிந்து போனார். 

இந்த நிகழ்வு இத்தலத்தில்தான் நடந்தது என கூறப்படுகிறது. மேலும் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் இந்த சூரனூரில் இருந்தே திருச்செந்தூர் புறப்பட்டார் என்கின்றனர் இப்பகுதி மக்கள். சூரனை வென்ற பிறகு தேவர்களோடு மறுபடியும் இங்கு வந்து, இங்கிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் சென்று தெய்வானையை திருமணம் செய்து கொண்டார் என்ற புராணமும் இப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. எனவே இந்த ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. 

நோய் தீர்க்கும் கோயில் 

அசுர வம்சத்தின் சூரன் ஆண்ட ஊர் இது. அப்படி ஆண்ட அரக்கர்களை மகாவிஷ்ணு வென்ற இடம் இது என்பதால், எப்படிப் பட்ட நோய்கள் இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் தீர்ந்து விடும் என்கிற நம்பிக்கை தென் மாவட்ட மக்களுக்கு உள்ளது. தீராத நோய், பிணி பிடித்தவர்கள் இக்கோயிலை நாடி வருகின்றனர். கோயிலுக்கு முன்னும் பின்னும் தாமரைக்குளம் இருக்கிறது. இக்குளத்தில் இன்றும் ஆயிரக்கணக்கான தாமரைப் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. திருச்செந்தூரில் முருகன் சூரனை வென்று மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். தேவர்களை அழைத்துக் கொண்டு சேவலோடு சூரனூர் வந்துள்ளார். இரவானதால் சூரனூரில் இருந்து அரை கிமீ தொலைவில் உள்ள மண்டபத்தில் தூங்கியுள்ளனர். அதிகாலையில் சேவல் கூவி, அனைவரையும் எழுப்பியுள்ளது. அதனால் அந்த இடம் ‘கூவர்குளம்’ என்று பெயர் பெற்றது. இன்றும் இக்கிராமம் இதே பெயரில் இருக்கிறது. 

No comments:

Post a Comment