
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள திருக்கோஷ்டியூரில் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.
► இக்கோயில் 108 வைணவத் தலங்களில் ஒன்று. கோயிலின் கிழக்கு முகம் பார்த்து ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் காட்சியளித்து பக்தர்களை பரவசப்படுத்துகிறது. அருகில் சுயம்பு சிவலிங்கம், கண்ணன், தெற்கு பகுதியில் கிழக்கு முகமாக தாயார் திருமகள், வடக்கு பகுதியில் கிழக்கு முகமாக கோதை நாச்சியார் (ஆண்டாள்) ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
► தேவலோகத்தில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மூலவர் காட்சியளிக்கிறார். உற்சவர் சௌமிய நாராயணப் பெருமாளும் தேவி, பூதேவியுடன் மற்றொரு பக்கம் வீற்றிருக்கின்றனர். தேவியர்களுடன் நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். வைகுண்ட லோகத்தில் அமர்ந்த நாராயணப் பெருமான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.
► திருக்கோஷ்டியூர் பெயர் காரணம்: கதம்ப மகரிஷி இப்பகுதியில் தவம் செய்தார் என்று கூறப்படுகிறது. தன்னுடைய தவத்திற்கு மனிதர்களாலும், மிருகங்களாலும், அரக்கர்களாலும் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்று கேட்டுள்ளார். இப்பகுதி 60 கிமீ சுற்றளவுக்கு கதம்ப வனமாக இருந்தது. இங்கு இரணியாசுரன் என்ற அசுரன், முனிவர்கள் மற்றும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை வதம் செய்வது குறித்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், மற்றும் தேவர்கள் இங்கு ஆலோசனை செய்துள்ளனர். இதனாலேய இவ்வூருக்கு திருக்கோஷ்டியூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிருஷ்ணர் இங்கு நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியாசுரனை அழித்ததாக இப்பகுதி மக்கள் சிலாகிக்கின்றனர்.
► ஸ்ரீராமானுஜர் தனது 32வது வயதில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வந்து, தனது குருவான திருநம்பியிடம் உபதேசம் பெற்றார். திருநம்பிகள் ராமானுஜரிடம், ஸ்ரீதிருமந்திரத்தை மற்றவர்களுக்கு சொல்லக் கூடாது, அப்படி சொன்னால் நீ நரகம் செல்ல நேரிடும்’ என எச்சரித்துள்ளார். தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்று கருதி, சாதி, மத, இன வேறுபாடியின்றி அனைருக்கும் திருமந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததாக வரலாறு கூறுகிறது.
► இங்கு ராமானுஜரின் 1000வது பிறந்தநாளையொட்டி கடந்த செப்.30 முதல் அக்.12 வரை பெருநட்சத்திர பெருவிழா நடந்தது.
► இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி தெப்ப உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மாசி மாத பவுர்ணமியில் மகம் நட்சத்திரத்தன்று நடைபெறும் தெப்ப உற்சவ விழாவில் கோயில் குளத்தின் படிக்கட்டுகளிலும், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் தீபம் ஏற்றி வழிபடும் காட்சி, காண்போரை தெய்வீக பரவசத்துக்கு உள்ளாக்குகிறது.
No comments:
Post a Comment