பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்
சேலம் நகரிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இயற்கை எழில் கொஞ்சும் பேளூர். இங்குள்ள வசிஷ்டநதிக்கரையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோயில். தமிழகத்தின் தீர்த்தமலைக்கு வந்த அர்ச்சுணன், சிவபெருமான் மீது பக்தி கொண்டு சிவபூஜை செய்தான். அப்போது சிவன் ‘‘உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாக” என்று கட்டளையிட்டார். சிவனை நினைத்து அர்ச்சுணனும் பிறைவடிவத்தில் ஒரு பாணத்தை மலையடிவாரத்தில் செலுத்தினான். மகிழ்ச்சியில் திளைத்த சிவன், தன் கட்டுப்பாட்டில் உள்ள கங்கை நதியின் பத்தில் ஒரு பகுதியை அம்பு பாய்ந்த இடத்தில் பெருகச் செய்தார். வெண்மை பிரவாகமாக ஓடிய அந்த நதி வெள்ளாறு என்று அழைக்கப்பட்டது.
வசிஷ்டமுனி இங்கு நீராடி சிவனுக்கு வேள்விகள் நடத்தியதால் வசிஷ்டநதி என்றும் அழைக்கப்படுகிறது. வசிஷ்ட நதிக்கரையில் சுயம்புவாக தோன்றிய சிவனே, தான்தோன்றீஸ்வரன் என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பது தலவரலாறு. நாரதர், தூர்வாசர், இந்திரன், உரோமேசர், கபிலர், சுனந்தன், சம்புகன், சோமாவதி போன்றவர்கள் இங்கு தங்கி சிவனை வழிபட்டார்கள் என்றும் புராணக்குறிப்புகள் சொல்கிறது. மா, பலா, இலுப்பை மரங்கள் மூன்றும் ஒரே மரமாக இருப்பது தான்தோன்றீஸ்வரர் கோயிலின் அதிசயமாக கருதப்படுகிறது. கோயில் கட்டப்படும் காலத்திலேயே, இந்த மரத்திற்காக மூடுகற்களில் வளைவுகள் வெட்டி ஒதுக்கப்பட்டிருப்பதை காணலாம். இதனால் இந்த மரங்கள் கோயிலின் பெரும் புனிதமாக கருதப்படுகிறது. சித்திரை 3ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மூலவர் மீது சூரியனின் ஒளி படுவது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் சிவனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த பிரதோஷத்தில் சேலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சிவனருள் பெற்றுச் செல்கின்றனர். உத்தியோக உயர்வு, விவசாய செழிப்பு, கல்வி, செல்வம், ஞானம், அமைதி என்ற அனைத்தும் தான்தோன்றீஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் நம்பிக்கை. கோயிலில் உள்ளே வலது புறத்தில் விநாயகரும், அறுபத்து மூவர் கற்சிலையும் உள்ளது. இவர்களை கடந்து சென்றால் கல்யாண விநாயகர் சன்னதி உள்ளது. திருமண தோஷம் உள்ளவர்கள் இந்த கல்யாண விநாயகரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். கல்யாண விநாயகருக்கு மாலை, தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையைக் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியமும், புத்திர பாக்கியமும் கைகூடும் என்பது ஐதீகம். திருமணம் நடந்தவுடன் தம்பதி சகிதமாக வந்து கல்யாண விநாயகருக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
பாவம் போக்கும் வசிஷ்ட நதி
கோயிலை ஒட்டி ஓடும் வசிஷ்ட நதியில் நீராடினால் நோய்களும், பாவங்களும் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு நீராடி தான்தோன்றீஸ்வரரை வணங்கினால் மகப்பேறு கிடைக்கும். வசிஷ்ட நதியில் வசிஷ்ட முனிவர் யாகம் செய்தார். இந்த யாகம் நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட திருமண்ணே இன்று வரை விபூதி பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவனை வேண்டிக்கொண்டு விபூதியை நெற்றியில் இட்டால் அனைத்து பிரச்னைகளும் நீங்கிவிடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
No comments:
Post a Comment