Saturday, 19 August 2017

வெட்டவெளியிலும் வரம் அருளும் பெருமாள் : ஒடிஷா


பொதுவாக வைணவ ஆலயங்களில் மகாவிஷ்ணுவை நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் நாம் தரிசிக்கலாம். திருமால் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களில் 24 தலங்களில் சயனக் கோலத்திலேயே மகாவிஷ்ணு சேவை சாதிக்கிறார். இத்தகைய சயனங்களில் ஜலசயனம், தலசயனம், புஜங்கசயனம், வீரசயனம் என்று 10 வகைக் கோலங்கள் உண்டு. இவற்றில் கோயில் என்று வைணவர்கள் போற்றும் திருவரங்கம், மகாவிஷ்ணுவின் சயன கோலத்திற்குரிய மிகப் பிரபலமான தலமாகத் திகழ்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு, திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம், திருச்செந்தூர் சுப்பிரமண்யர் ஆலயம் போன்றவற்றில் அனந்தசயனக் கோலத்தில் மிகப்பெரிய வடிவில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் சந்நதிகள் உள்ளன. 

ஒடிஷா மாநிலத்தில் வித்தியாசமான அனந்தசயனரை தரிசிக்கலாம். ஆமாம், வெட்ட வெளியில் பாறையில் பிரமாண்டமாக அந்த மூர்த்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். ஒடிஷா மாநிலம் தென்கானல் மாவட்டம், பிராமணி ஆற்றங்கரையில், சாரங்கா என்ற இடத்தில் 51 அடி நீளம், 23 அடி அகலம், இரண்டரை அடி கனமும் கொண்ட அனந்தசயன விஷ்ணு  இந்தியாவிலேயே மிக பிரமாண்டமானவராகக் கருதப்படுகிறார். கோயில் அமைப்பு ஏதும் இன்றி வெட்ட வெளியில் சயனித்திருக்கும் இந்த மூர்த்தியின் பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும், முன் இருகரங்களில் கதையும், தாமரை மலரும் காணப்படுகின்றன. 

இதே ஒடிஷா மாநிலம், ஆங்குல் மாவட்டத்தில் பீமகுண்ட் என்ற இடத்திலும் இன்னொரு மிகப் பெரிய அனந்தசயனப் பெருமாள் திருமேனி உள்ளது. 

இதுவும் பிராம்மாணி ஆற்றங்கரையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெட்ட வெளியில் காட்சி தரும்  42 அடி நீளமுள்ள இந்த விக்கிரகம் 8-9வது நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இங்கு ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க, அனந்தசயன மூர்த்தி சயனித்த நிலையில்  முன் இடக்கையை இடது தொடை மீது வைத்து, பின் இடக்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். வலப்பக்கக் கரங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. வலக்காலை இடக்காலின் மீது மடித்து வைத்திருக்கிறார். ஏகாதசி, பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் பீமகுண்ட் அனந்தசயனப் பெருமாளைத் தரிசிக்க வருகின்றனர். அனந்த சயனம் என்பது மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது, பாற்கடலில் பள்ளி கொண்ட காட்சியைக் காட்டுவதாகும். 

தண்ணீரில் எப்போதும் சயனத் திருக்கோலத்தில் திகழும் பெருமாள் ஜலசயனப் பெருமாளாகப் போற்றப் படுகிறார். இவ்வாறு ஜல சயனக் கோலத்தில் பக்தர்கள் தரிசிக்கின்ற வகையில் சிற்பிகள் ஆற்றைத் தொட்டவாறு சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வகையில் இச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன! மத்திய இப்பகுதியில் வைணவத்தை ஆதரித்து வந்த பௌமகார் மன்னர்கள் பீமகுண்ட் மற்றும் சாரங்கா அனந்த சயன பெருமாள் சிலைகளை உருவாக்கியிருக்கின்றனர். ஒடிஷா அந்த சயனர் சிலைகளைப் போன்றே நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் புதாநீல்கண்ட் என்ற இடத்தில் 17 அடி நீள ஜலசயன விஷ்ணு நாராயண் என்ற அனந்த சயனப் பெருமாளைத் தரிசிக்கலாம். 7-8 நூற்றாண்டுகளில் லிச்சாவி மன்னர்களால் அமைக்கப்பட்ட இந்த அற்புதமான திருஉருவம் 40 அடி நீளம் கொண்ட குளத்திற்குள் கலை நுணுக்கத்தோடு திகழ்கிறது.

No comments:

Post a Comment