மேலகல்கண்டார் கோட்டை
பாலமுருகன் என்றால் குழந்தை முருகனையே குறிக்கும். குழந்தை என்றால் கூடவே தாயும் உண்டுதானே, இதுதானே நியதி? இந்த நியதிக்கு தெய்வங்களும் விதி விலக்கல்லவே! ஆம், பாலமுருகன் தன் அன்னையோடு அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயம் திருச்சிக்கருகே மேலகல்கண்டார் கோட்டை என்ற ஊரில் உள்ளது. ஆலயம் கிழக்கு திசைநோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்தடுக்கு ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான மகாமண்டபம். இதற்கு இடதுபுறம் துர்க்கையின் திருமேனி உள்ளது.
மகா மண்டபத்தின் நுழைவாயிலின் உட்புறத்தின் இடதுபுறம் நாகர் திருமேனியும் வலதுபுறம் ஆஞ்சநேயர் திருமேனியும் உள்ளன. கருவறை நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் ஐயப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையின் எதிரே பலிபீடமும் மயிலும் உள்ளன. கருவறையில் பாலமுருகன் நின்ற கோலத்தில் ஒரு கரத்தில் வேலை பிடித்தபடியும், இன்னொரு கரத்தைத் தனது இடது தொடையில் பதித்த நிலையிலும் அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பு மாரியம்மன் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் அமர்ந்திருக்கிறாள்.
அன்னைக்கு நான்கு கரங்கள். தனது வலது மேல் கரத்தில் உடுக்கையையும், இடது மேல் கரத்தில் கதையையும், வலது கீழ் கரத்தில் கத்தியையும், இடது கீழ் கரத்தில் குங்குமச் சிமிழையும் வைத்துக்கொண்டு, சாந்தமே உருவாய் அருள் பிரவகிக்கிறாள். அன்னை தனது ஒரு காலை மடித்தபடியும் இன்னொரு காலை தொங்கவிட்டபடியும் அமர்ந்திருக்கிறாள். இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் இப்படி அன்னையையும் பிள்ளையையும் ஒரு சேர தரிசனம் செய்யலாம்.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் மாலை போட்டுக்கொண்டு சபரிமலை செல்பவர்கள், இங்கிருந்தே பயணத்தைத் தொடங்குவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பங்குனி உத்திரத்தன்று இந்த ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். நூற்றுக்கணக்கில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை தரிசிக்க வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று நடைபெறும் தீமிதித் திருவிழாவில் கணிசமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
விழா நாட்களில் பாலமுருகனுக்கு வெள்ளிக் கவசம் சாற்றுவது வழக்கம். அந்தக் கவசத்தில் முருகனைப் பார்க்க கண்கோடி வேண்டும் என்பது அனுபவபூர்வமான சிலிர்ப்பு. கந்த சஷ்டி அன்று பாலமுருகனுக்கும், அன்னைக்கும் விசேஷமாக அலங்காரம் செய்து, பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்ய வழி செய்கிறார்கள்.
இந்த ஆலயத்திற்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. ‘வாத்தியார் குளம்’ பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிரிலேயே ஆலயம் கண்களுக்குத் தெரியும். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திற்கு தென்மேற்கே 12 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
No comments:
Post a Comment