Sunday 20 August 2017

மேனி அழகு, தோற்றப்பொலிவு பெற அவளிவநல்லூர் சாட்சிநாதர் திருத்தலம்


கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்களும், மேனி அழகு, தோற்றப்பொலிவு இல்லாமல் இருப்பவர்களும் இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் நலம் பெறலாம் என்பது ஐதீகம். இந்தத் திருத்தலத்தில் சிவதொண்டையே பிறவிப் பயனாகக் கருதி செய்து வந்த சிவாச்சாரியார் ஒருவர் இருந்தார். அவருக்கு இல்லறத்தின் பயனாய் இரண்டு மகள்கள். மூத்தவள் சுசீலை; இளையவள் விசாலாட்சி. இந்த காலகட்டத்தில் பழையாறையை ஆண்ட சோழ மன்னனின் அவைக்களப் புலவராக காசிபர் என்பவர் இருந்தார். அவரது மகனான விஷ்ணுசருமருக்கு, சுசீலையை மணம் முடித்துக் கொடுத்தனர். சிலகாலம் இனிமையாக இல்லறம் நடத்தினார் விஷ்ணுசருமர். பின்னர் சுசீலையை அவளது பிறந்த வீட்டில் விட்டு விட்டு, சிவ தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரை புறப்பட்டுச் சென்றார். தல யாத்திரை முடிந்து வந்து மனைவியை பார்க்கும் ஆவலில் சிவாச்சாரியாரின் இல்லத்திற்கு விரைந்து சென்றார். 

ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. விஷ்ணு சருமர் சிவதல யாத்திரை சென்றிருந்த காலத்தில், அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள் சுசீலை. இந்த நோயின் காரணமாக அவளது உடல் முழுவதும் தழும்புகள் காணப்பட்டன. மேலும் கண்கள் குருடாகி, அழகையும், இளமையையும் இழந்து காணப்பட்டாள். இதனால் விஷ்ணு சருமரின் மனம், சுசீலையை ஏற்க மறுத்தது. அந்த சமயத்தில் சுசீலையின் தங்கையான விசாலாட்சி நன்றாக வளர்ந்து, முன்பிருந்த தனது அக்காள் போலவே, அழகும், இளமையும் கொண்ட தோன்றத்துடன் காணப்பட்டாள். அவளைப் பார்த்ததும் ‘இவள்தான் என்னுடைய மனைவி சுசீலை. அழகற்று இருக்கும் இந்தப் பெண் யாரோ எனக்குத் தெரியாது’ என்று வாதிட்டான் விஷ்ணு சருமன். மேலும் எப்படியும் தன்னுடன் விசாலாட்சியை கூட்டிக் கொண்டு போய்விடும் முனைப்பில் இருந்தான். இதனைப் பார்த்த சிவாச்சாரியார் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தார். 

தான் தினமும் வழிபடும் இறைவனின் முன்பு சென்று, இதற்கு ஒரு வழியைக் காட்டாவிட்டால் உன்னுடைய சன்னிதியிலேயே என்னுடைய உயிரை விட்டு விடுவேன்’ என்று கூறி கதறி அழுதார். இன்று இரவு சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய இறைவன், ‘நாளை அனைவரையும் அழைத்துக் கொண்டு என் ஆலயம் வந்து சேர்’ என்று கூறி மறைந்தார். இறைவனின் வாக்கை நிறைவேற்ற எண்ணிய சிவாச்சாரியார், தனது மகள் மற்றும் மருமகனுடன் இந்தத் திருத்தலத்திற்கு வந்தார். அப்போது முனிவர் வேடத்தில் அங்கு வந்து சேர்ந்தார் சிவபெருமான். முனிவர் வேடத்தில் இருந்த ஈசன், அனைவரையும் கோவிலின் எதிரே உள்ள சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தக் குளத்தில் மூழ்கி எழும்படி கூறினார். அனைவரும் அவ்வாறே செய்தனர். 

மூழ்கி எழுந்தபோது, அனைவரும் வியக்கும் வகையில் அழகற்று போய் இருந்த சுசீலை, தன்னுடைய திருமணத்தின்போது இருந்த அதே அழகிய தோற்றத்துடன் பொலிவாக காட்சியளித்தாள். அப்போது விஷ்ணு சருமரை நோக்கிய முனிவர், நீங்கள் அக்னி சாட்சியாக மணம் முடித்த ‘அவள் இவள் தான்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார். தன் பொருட்டு சிவபெருமானே வந்து சாட்சி சொன்னதை அறிந்த சிவாச்சாரியார் ஆனந்தக் கூத்தாடினார். அப்போது இந்தத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனும், இறைவியும், விண்ணில் ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சிக் கொடுத்து மறைந்தனர். முனிவர் வேடத்தில் சாட்சியாக வந்ததால், இத்தல இறைவன் ‘சாட்சிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். அதே போல் இந்தத் திருத்தலம் ‘அவள் இவள் நல்லூர்’ என்று பெயர் பெற்றது.

சாலையின் ஓரத்தில் கிழக்கு நோக்கி இருக்கும் தோரண வாசலைக் கடந்து உள்ளே சென்றால், பலிபீடமும், நந்திதேவர் சிலையும் காணப்படுகின்றன. வலதுபுறம் நோக்கினால் அம்பிகையானவள் நின்ற கோலத்தில், அழகு மிளிர ‘சவுந்திரநாயகி’ என்ற திருப்பெயருடன் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இதையடுத்து மூலவர் சாட்சிநாதர் சுயம்புலிங்கமாக தனிச் சன்னிதியில் காட்சி தர, அவருக்கு பின்புறத்தில், இத்தலத்தில் காட்சி கொடுத்த இறைவனும், இறைவியும் ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கும் சிலா ரூபம் உள்ளது. கோவிலின் உட்பிரகாரத்தில் விநாயகப்பெருமான், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, கோஷ்டத்தில் அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை காட்சி தருகின்றனர். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவகாமசுந்தரியுடன் எழுந்தருளியுள்ள நடராஜரின் விக்கிரகங்களும் உள்ளன. 

ஆலய சுற்றுப்பிரகாரத்தின் ஈசானிய மூலையில் நவக்கிரகங்கள் எழுந்தருளியிருக்கின்றன. மேலும் சமயக்குரவர்கள் நால்வர் மற்றும் கால பைரவர், சூரியன் ஆகியோரின் சிலை உருவங்களும் உள்ளன. திருக்கோவிலைச் சுற்றி நான்கு புறமும் ஓங்கி உயர்ந்த மதில் சுவற்களும், அருகே தல விருட்சமான பாதிரி மரங்களும் உள்ளன. பஞ்ச ஆரண்யத் தலங்களில் இரண்டவதாகவும், காலை நேரத்தில் வழிபடுவதற்கு ஏற்ற தாகவும் சனகாதி முனிவர்களால் சொல்லப்பட்ட சிறப்புமிக்க திருத்தலம் இந்த ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது. கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்களும், மேனி அழகு, தோற்றப்பொலிவு இல்லாமல் இருப்பவர்களும் இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் நலம் பெறலாம் என்பது ஐதீகம். வேண்டுதல் உள்ளவர்கள் ஆலயத்தின் எதிரில் உள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கு நெய் விளக்கேற்றி வைத்து அர்ச்சனை செய்து நம்பிக்கையுடன் வழிபட்டால் நல்லதே நடக்கும்.

காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது அம்மாபேட்டை என்ற ஊர். இங்கிருந்து வடக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் வயல்கள் சூழ்ந்த சிற்றூராக அமைந்துள்ளது அவளிவநல்லூர் திருத்தலம்.

No comments:

Post a Comment