Thursday, 3 August 2017

நிலையான செல்வம் தரும் நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயில்


முருக பெருமான் அழகன், கந்தன், கார்த்திகேயன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள வேலுடையான்பட்டு முருகனை வில்லுடைய பெருமானாகவே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். முருகன் பெரும்பாலான கோயில்களில் கையில் வேலுடனேயே காட்சி தருகிறார். ஆனால் வேலுடையான்பட்டு முருகனோ வள்ளி, தெய்வானையுடன் கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தியவராக, இடுப்பில் சல்லடத்துடன் வேடர் கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

தல வரலாறு: முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொள்ள சென்றுவிடவே தேவர்களும், முனிவர்களும் பெருமானைத் தேடி அலைந்து உடல் தளர்ந்து சிதம்பரம் வருகின்றனர். ஆனால் அங்கேயும் முருகனை காணவில்லை. தங்களுக்கு முருகன் காட்சியளிக்காததை எண்ணி வருத்தமுற்று சிதம்பரம் நகரில் தங்கியிருந்த தேவர்களுக்கு அருவுருவமாக தோன்றி இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில் நாம் உங்களுக்கு காட்சி தருவோம் என்று கூறினார். உடனே இடும்பன், வீரன், ஐயனார் ஆகிய மூவரும் புறப்பட்டு வர ஒரு அழகிய சோலையின் நடுவே ஜோதி வடிவமாக முருகன் காட்சியளித்தார். இந்த ஜோதி வடிவத்தை சப்த கன்னிகளும், தேவர்களும், முனிவர்களும் வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் பச்சைவாழியம்மன் கோயில் உள்ள இடத்திலிருந்து கண்டுகளித்தனர்.

ஆனால் தேவர்களும், முனிவர்களும் முருகனின் அழகிய திருக்கோலத்தை காணவேண்டும் என்று அவரிடம் வேண்டினர். உடனே முருகன் வள்ளி தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததால் இத்தலம் “ வில்லுடையான்பட்டு” என பெயர் பெற்றது. பிறகு தமது வேலாயுதத்தை ஊன்றி நீரோடை ஒன்றை உருவாக்கி அதற்கு “சரவண தீர்த்தம்” என்று பெயரிட்டு இதில் நீராடி வரும் பக்தர்களுக்கு தீராத நோய் நீங்கப்பெறும், வாழ்வில் கஷ்டம் நீங்கி நிலையான செல்வத்தை பெறுவார்கள் எனக் கூறி மறைந்தார். இவ்வாறு முருகன் தனது வேலினையும் இங்கு ஊன்றியதால் இந்த ஊர் வேலுடையான்பட்டு எனவும் அழைக்கப்படுகின்றது. மேலும் முருகன் காட்சியளித்த இடத்தில் அப்படியே கல்லுருவமாய் மாறி பூமியில் மறைந்தார்.  

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ குலத்தை சேர்ந்த சித்ரகாடவப் பல்லவன் என்ற அரசன் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளார். இந்த அரசனின் கன்று ஈன்ற பசுக்கள் மாலையில் பால் கறக்காமல் போனதால் அரசன் அச்சமுற்றுள்ளான். இதற்கு என்ன காரணம் என கண்டறியுமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளான். மறுநாள் காவலர்கள் மாடுகள் செல்லும் வழியாக சென்றுள்ளனர். மாடுகள் நன்கு விளைந்த பசுமையான புற்களை மேய்ந்த பின்பு முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த இடத்திற்கு வந்தவுடன் மடியில் இருந்து தாமாக பால் சொறிவதைக் கண்ட காவலர்கள், மன்னருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடன் அந்த இடத்திற்கு வந்த மன்னன், இடத்தை தோண்ட உத்தரவிட்டுள்ளார். 

காவலர்கள் பூமியை தோண்டியபோது சதுரவடிவ கற்பலகையில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் கையில் வில், அம்பு தாங்கியவாறு சிற்பமாக காட்சியளித்துள்ளார்.  ஆனால் மண் தோண்டும் போது மண்வெட்டி முருகனின் தோளில் பட்டதால் அந்த இடத்தில் ரத்தம் கசிவதைக் கண்டு மன்னன் வேதனையுற்று முருகனை வேண்டி வணங்கியுள்ளான். உடன் ரத்தம் வழிவது நின்றுள்ளது. முருகனின் தோளில் காயம் பட்டதற்கு தாமே காரணம் என்பதால் இரவு முழுவதும் தூங்காமல் மன்னன் வேதனையுற்றுள்ளான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய முருகன் அனைவரும் வழிபடும் வகையில் கோயில் ஒன்றை கட்டினால் உனது நாடும், மக்களும் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வார்கள் என கூறி மறைந்துள்ளார். 

முருகனின் உத்தரவுப்படி சித்ரகாடவப் பல்லவன் தற்பொழுது உள்ள வேலுடையான்பட்டு முருகன் கோயிலை கட்டியுள்ளான். இந்தக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபட்டுச்செல்வார்கள். வேல் என்பது வெற்றியை குறிக்கும் சொல். அதேபோல் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் என்றும் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

எப்படி செல்வது? 

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 16 வது வட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது. மேலும் சென்னை கும்பகோணம் சாலையில் வடக்குத்து என்ற இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது. 

No comments:

Post a Comment