கோவை பேட்டை ராஜ வீதியில் உள்ளது ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில். 700 ஆண்டுகாலம் பழமையானது. இக்கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் தான் இவரை கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் என்று அழைக்கிறார்கள். இக்கோயில் இரண்டு விஷயங்களுக்கு பெயர்போனது ஒன்று திருமணம், மற்றொன்று தத்துக்கொடுத்தல்.
பெருமாள் எப்போதும் திருமண கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணம் தடை உள்ளவர்கள் இவரை வழிபடுவதால் திருமணம் விரைவில் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் புதன்கிழமைகளில் கோயிலில் நடக்கும் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்கிறார்கள்.
குடும்ப சூழ்நிலை சரியில்லை, குழந்தையை கோயிலுக்கு தத்துக்கொடுக்க வேண்டும் என்று சிலர் பரிகாரம் செய்கின்றனர். இங்கு குழந்தை தத்துக்கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தையை பெருமாளுக்கு தத்துக்கொடுத்துவிடுவார்கள். பின்னர், பூஜைகள், பரிகாரம் செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் பிள்ளையை தத்து எடுத்துக்கொள்வார்கள். இப்படி செய்வதால் பிரச்னைகள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நினைத்த காரியங்கள் வெற்றி பெற கோயிலில் உள்ள நாபிகமலம் என்னும் மயில் வாகனத்தை வணங்குகின்றனர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருமாளுக்கு பூஜை செய்யப்படுகிறது.
வரும் 2வது சனிக்கிழமை சந்தனகாப்பு அலங்காரம், 3வது சனிக்கிழமை தங்க கவசம் சிறப்பு அலங்காரம், 4வது சனிக்கிழமை ஸ்ரீகுருவாயூரப்பன் அலங்காரம், 5வது சனிக்கிழமை சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்படவுள்ளது. மார்கழி மாதம் பகல் பத்து, ரா பத்து உற்சவம் நடக்கிறது. 20 நாட்கள் நடக்கும் இந்த உற்சவத்தில் கலந்துகொள்வது மிகவும் நல்லது என்கிறார்கள். வைகுண்ட ஏகாதசியின் போது ரத்தினஅங்கியுடன் சொர்க்கவாசல் திறக்கும் போது பெருமாள் காட்சியளிக்கிறார்.
சாபத்தில் இருந்து விடுபட ஹோமம்
சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநோன்பு, வைகாசி, ஆவணி மற்றும் மாசி மாதங்கள் என வருடத்திற்கு மூன்று முறை விஷ்ணுபதி புண்ணிய ஹோமம் நடத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் சாபத்தில் இருந்து விடுபட இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆண்டாள் உற்சவம், ஆவணி மாதம் குழந்தை வரம் வேண்டி ஐம்பொன் விக்கிரகத்தில் உள்ள சந்தான கோபாலனுக்கு பூஜை செய்யப்படுகிறது. இக்கோயிலில் அய்யனார், அரசமர பிள்ளையார், ஆஞ்சநேயர், விசாலாட்சி விக்னேஷ்வரர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
No comments:
Post a Comment