Wednesday, 16 August 2017

ராகு, கேது தோஷம் நீக்கும் தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள்


பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் பல அவதாரங்கள் எடுத்து உலக மக்களுக்கு அருள்பாலித்து வருகிறான். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தீவனூரில் லட்சுமி நாராயண பெருமாள் என்ற பெயரில் அவதரித்து அருள்பாலித்து வரும் பெருமாளுக்கு பாண்டிய மன்னன் ஒருவன் மிகப்பெரிய கோயில் கட்டியிருக்கிறான். கோயில் கட்டப்பட்ட காலம் உறுதியாக கூற முடியவில்லை. முன்பு ஆதிநாராயண பெருமாள் என்றழைக்கப்பட்டது தற்போது லட்சுமி நாராயணபெருமாள் என்றே அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைக்கப்பட்டபோது ஆதிநாராயண பெருமாள் நின்ற கோலத்தில் உள்ள கற்சிலை சோழமன்னர்களின் கலைத்திறனையும், சுற்று பிரகாரங்கள் பல்லவர்களின் கலைத்திறனையும் கொண்டதாக இருந்தது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சுவாமியின் கர்ப்பகிரகத்தில் பிரெஞ்சு மன்னன் இரண்டாம் ஜான்பால் அடையாளம் பொறித்த டாலர் இருந்ததையும் பார்க்கும்போது பிரெஞ்சு படையெடுப்பின்போது இக்கோயில்  சிதிலப்படுத்தப்பட்டு சுவாமியின் விக்கிரகம் உடைக்கப்பட்டு கிராம மக்கள், முக்கியஸ்தர்கள் அதனை தடுத்ததாகவும் தெரியவருகிறது. தொடர்ந்து கிராம மக்கள் லட்சுமி நாராயண சுவாமியின் விக்கிரகத்தை வழிபட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் சிதிலமடைந்த கோயிலை புனரமைக்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் அவ்வூரைச்சேர்ந்த குப்பகவுண்டர் மனைவி குப்பம்மாள், தனது பேரன் உலகநாதன் மூலம் கோயில் கைங்கர்யம் செய்ய நியமித்தாராம். பின்னர் அவரது மகன் முனுசாமி என்பவர் முயற்சியால் ரூ.9 லட்சம் செலவில் கோயில் புனரமைக்கப்பட்டு 14-7-2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழைய கல்தூண்களை அதன் வடிவம் மாறாமல் பெரிய கோயிலாக கட்டியுள்ளனர். 

கோயிலில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது 21 அடி உயர கொடிமரம், அதன்முன்னே கருடாழ்வார் பெருமாளை வழிபடுவதுபோன்ற சிலை கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் பின்புறம் பலிபீடம், துளசிமாடம் உள்ளது. முதலில் மகாமண்டபத்தில் கலைநயத்துடன் கூடிய கல்தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேற்புறத்தில் மனித உடலின் மூல ஆதாரமாக விளங்கும் ஸ்ரீசக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. கருவறை வரை இவ்வாறு 6 ஸ்ரீசக்கரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அதன் உள்ளே அலங்கார மண்டப தூண்களில் பல கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வலம்புரி விநாயகர், சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டப சுவர்களில் நடனமாடும் லவகுசா உருவங்கள், அதன் அருகில் ஆஞ்சநேயர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வாயிலின் மேற்புறத்தில் மூன்று மீன்கள் ஒன்றாக சேர்ந்திருப்பதுபோன்றும், அதன் அருகில் தனியாக மீன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள். 

சொர்க்கவாசல் அருகில் உள்ள தூணில் மேலே ஸ்ரீசக்கரமும், நடுவில் சிவலிங்கமும், கீழே ஆஞ்சநேயர் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தூணில் மிருதங்கம் வாசிக்கும் பெருமாள், சிங்கம், நடுவில் ஸ்ரீசக்கரம், கீழே யானை ஆகிய வடிவங்கள் உள்ளன. முருகப்பெருமான் பெருமாளை வணங்குவது, ஆண்டாள் ஆகியவையும் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளது. உள்ளே அர்த்தமண்டபத்தில் ஆதிநாராயணபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக லட்சுமிநாராயண பெருமாள் அருள்பாலிக்கிறார். கோயில் எதிரேஉள்ள 32 அடி உயர கல் தூணில் மாதாமாதம் திருவோண நட்சத்திரத்தன்று சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. இக்கோயிலில் வைகாசி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தேரோட்டமும் நடைபெறுகிறது.  மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடத்தப்படுகிறது. 

தைப்பொங்கல் மறுநாள் கரிநாள் அன்று சிறப்பு அபிஷேகம், மாசி, பங்குனி சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 1ம் தேதி முதல் 12ம்தேதி வரை பெருமாள் மீது சூரியஒளி நேரடியாக விழும் காட்சி நம்மை பரவசம் அடைய வைக்கும். திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை ஆகியவற்றுக்காக இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக ராகு, கேது தோஷம் போக்கும் பரிகார தலமாக விளங்குகிறது. அதுவும் கோயில் முன்புறம் இயற்கையாகவே வளர்ந்துள்ள வேம்பு, அரச மரத்தை திருமணமான பெண்கள் சுற்றிவந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்ற ஐதீகம் உள்ளது. அதைவிட இக்கோயிலில் திருமணம் செய்தால் ஆண்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது. மாசி மக தீர்த்தவாரிக்காக இங்குள்ள லட்சுமி நாராயணபெருமாள் (உற்சவர்) புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரைக்கு சென்று நீராடி திரும்புகிறார். மேலும் வில்வமரம், வன்னிமரமும் கோயிலின் உள்ளே உள்ளது. 



No comments:

Post a Comment