
சூதாட்டம் குடியை கெடுக்கும் குடும்பத்தையும் சீரழிக்கும் என்பதை எடுத்துச்சொல்லி கணவன் மனைவி உறவின் வலிமையையும் உணர்த்திய இறைவன் திருவிளையாடலின் சுப முடிவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் நடந்தேறியது. அதனால் தான் இன்றும் கணவன் மனைவி ஒற்றுமைக்காக பிரார்த்தனை நடைபெறும் சிவத்தலமாக கடலூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. திருக்கயிலை மலையில் இறைவன் தன் பிராட்டியான உமையுடன் சூதாடினார். பல முறை ஆடியும் தோல்வியே கிட்டியது. ஆனால் அவரோ இறுதி ஆட்டத்தில் தான் வெற்றி பெற்றதாக சாதித்தார். விளையாட்டை ஆர்வமாக ரசித்துக்கொண்டிருந்த திருமால் உண்மையை சொன்னால் விபரீதமாகிவிடும் என கருதி இறுதியாட்டத்தை கவனிக்கவில்லை எனக்கூறி தப்பித்துக்கொண்டார்.
இதனால் கோபம் அடைந்த இறைவி பொய்யுரைத்திருந்தால் கண்கள் ஒளியிழக்கட்டும் என்று கூறி சிவபெருமானின் கண்களை மூடினார். இது கணநேரமே நிகழ்ந்தது என்றாலும் அண்டசராசரங்களும் பல யுகங்களுக்கு இருளில் மூழ்கி பேரழிவும் துயரமும் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் இறைவனிடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து இறைவி கைகளை அகற்ற இறைவன் கண் மலர்ந்தார். மீண்டும் ஒளி பரவியது. கோடானு கோடி உயிர்களின் துன்பத்திற்கு காரணமாகி விட்டோமே என அறிந்த உமையவள் தன் தவறுக்கு வருந்தினார். தவறுக்கு பிராயசித்தம் வேண்டினார். பூவுலகில் உள்ள 108 சிவத்தலங்களுக்கும் சென்று தரிசிக்குமாறும் எந்த தலத்தில் திருநீரின் நறுமணத்தின் ஊடே இடது தோளும், இடது கண்ணும் துடிக்கிறதோ அந்த தலத்தில் அருவமாய் தவமிருந்து தன்னை அடையுமாறும் இறைவன் அருளினார்.
அதன்படி கணவரை பிரிந்து சிவதலங்கள் தோறும் சென்று உமையாள் வழிபட்டார். கடலூர் பாடலீஸ்வரர் திருத்தலத்திற்கு வந்த போது திருநீறு மணம் எங்கும் வீசியது. உமையாளின் இடது தோளும், இடது கண்ணும் துடித்தது. இறைவனின் சமிக்ஞை கிடைத்ததும் இறைவி மனம் உருகினார். இறைவனை தொழுது அத்தலத்தில் உணவின்றி பாதங்கள் நிலத்தில் பதியாமல், அருவ திருமேனியுடன் தவமிருந்தார். (அவர் தவமிருந்த இடம் சிறு கோயிலாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு வெற்றிடமாகவே உள்ளது. காற்றின் வடிவத்தில் இருந்ததால் அந்த அம்மன் அருந்தவநாயகி என அழைக்கப்படுகிறார்.) திருப்பாதிரிப்புலியூரின் பெருமைகளை தேவி மூலமாக உலகம் அறிய வேண்டும் என்பதற்காக இறைவன் தூர்ச்சடி, பிரமசன்மன் என்ற சிவகணத்தவரை அனுப்பி வைத்தார். அவர்கள் மனித உருவில் குருவாகவும் சீடனாகவும் வந்து திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு வாய்ந்த சிவதலம் என்பதை மக்களிடையே எடுத்துரைத்தனர்.
இறைவியின் அன்பின் உயர்வையும் தவத்தின் பெருமையையும் உணர்ந்த இறைவனும் எழுந்தருளி இறைவியின் திருக்கை பற்றினார். இதன் காரணமாக இத்தலத்தில் வழிபடுவோர் கணவன், மனைவிக்கு இடையேயான பிணக்குகள் தீர்ந்து ஒன்று படுவர் என நம்பப்படுகிறது. இத்திருத்தலத்தில் இறைவன் பாடலீஸ்வரர் என்றும் இறைவி பெரியநாயகி என்றும் போற்றி வணங்கப்படுகின்றனர். சுக்கிர வாரங்களில் கோயில் திருக்குளத்திலும் (சிவகரத்தீர்த்தம்), கடலிலும் புனித நீராடி திருநீறும் அக்கமணியும், பூண்டு சக்தி பஞ்சாட்சரத்தை உச்சரித்து விரதமிருந்து பெரியநாயகி அம்மனை வணங்குவோருக்கு நினைத்ததெல்லாம் கை கூடும். அதுபோல் செவ்வாய் கிழமைகளில் நூற்றியெட்டு தாமரை மலர் கொண்டு நூற்றியெட்டு திருவிளக்கிட்டு இறைவனையும் இறைவியையும் வழிபடுவோருக்கு கர்மவினைகள் அனைத்தும் நீங்கப்பெறுவர் என சிவபுராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடல் பெற்ற தலம்:
மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்,சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.அப்பரடிகள் இத்தல இறைவனை தொழுது கல் தெப்பமாக கரை சேர்ந்த இடமான கரையேறவிட்ட குப்பமும் அருகே உள்ளது. நடுநாட்டு சிவத்தலங்கள் 22 ல் 18 வது சிவதலமாகும். பாதிரி மரத்தின் கீழ் எழுந்தருளியதால் இறைவன் பாடலேசன் என அழைக்கப்படுகிறார். சிதம்பரநாத முனிவர் இக்கோயில் தலபுராணத்தை பாடியுள்ளார். தொல்காப்பிய தேவரின் திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் புகழ்பெற்றது. கன்னிவனபுராணம், புலியூர் நாடகம் இத்தலத்திற்குரிய நூல்களாக குறிப்பிடப்படுகின்றன. உமாதேவியார், அக்னிதேவன், கங்கை கரத்திற்கண்ணுடையார், காலிற்கண்ணுடையார், வியாக்ரபாதர், உபமன்யு முனிவர், பதஞ்சலி முனிவர், மங்கணர், மதிராசன் முதலானோர் இத்தல இறைவனை வணங்கி பேறு பெற்றனர். இக்கோயில் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் மூலம் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோயில் என்பது தெரியவருகிறது.
கோயில் தீர்த்தங்கள்:
கடல்(பிரம்ம தீர்த்தம்), சிவகர தீர்த்தம்(கோயில் குளம்), பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணை நதி,திசைபாலர் தீர்த்தங்கள். கோயிலில் மேற்கு மதிலையொட்டி அமைந்துள்ள விநாயகரின் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர் கொத்துகள் காணப்படும்.அம்பிகை இறைவனை பூசித்த போது உதவி செய்த திருக்கோலம் என்பதால் அவர் கன்னி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
தலவிருட்சம்:
பாடலீஸ்வரர் கோயில் தல விருட்சம் பாதிரி மரமாகும். தம்பதியர் எவ்விதப் பிணக்கும் இன்றி ஒற்றுமையோடு வாழ கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரப் பெருமானையும், அம்பாளையும் மனமுருக வணங்கி அவர்களின் அருளைப்பெறலாம்.
No comments:
Post a Comment