கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலும் ஒன்று. பண்ருட்டி அருகே உள்ள இந்தக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில் என்ற பெருமையும் இதற்குண்டு. அனைத்து மண்டபங்களிலும் கற்சிற்பங்கள் சிறப்பாக சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் தேர் திருவிழாவும், திரிபுர சம்ஹாரமும் நடைபெற்று வருகிறது. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவர் பெயர் வீரட்டானேஸ்வரர். தாயார் பெயர் பெரியநாயகி. திருவதிகைக்கு அதிகாபுரி, திருஅதிகை, வீரட்டானம் என்ற பெயர்களும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீரசைவக்கோயில்களில் இதுவும் ஒன்று. இதனால்தான் வீரட்டானேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் ஒவ்வொரு திருவிழாவும் நட்சத்திரங்களை கொண்டே நடைபெறுகிறது.
சுவாதி நட்சத்திரத்தில் இக்கோவிலில் சிவபெருமானை வழிபடுவதால் அனைத்து நலன்களும் பெறலாம் என்பது ஐதீகம். இக்கோவிலில் முதன்முதலாக திருத்தேர் உருவானதாம். அதேபோல் விநாயகருக்கு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் இங்குதான் துவங்கியது. இத்தலத்தில் சிவபெருமானை பணிவுடன் வணங்கினால் அவர் கனிவுடன் சகல செல்வங்களையும் அள்ளித்தருவார் என்பது ஐதீகம். சம்பந்தருக்கு திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோயை போக்கியதும், திலகவதியார் தொண்டாற்றியதும், திரிபுரத்தை எரித்ததும் இந்த தலத்தில்தான். திருமண விழாக்களில் மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியவர்கள் வாழ்த்துவது வழக்கம். அந்த பதினாறு செல்வங்கள் புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மைகள், பொன், தானியம், அழகு, இளமை, நல்வாழ்வு, அறிவு, பெருமை, துணிவு, நோயின்மை, நுகர்ச்சி, நீண்டவாழ்வு ஆகும். அந்த பதினாறு செல்வங்களையும் குறிக்கும் வகையில் இங்குள்ள சிவலிங்கம் 16 பட்டைகளுடன் வடிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தை மனமுருக வணங்கினால் 16 செல்வங்களையும் பெறலாம் என்பதும் ஐதீகம்.
மேலும் கிரிவலம் செல்லும்போதும் கோயிலை 16 முறை வலம் வர வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு. கோவிலின் தல விருட்சமான சரக்கொன்றை மரத்தை வழிபடுவதால் பல்வேறு நோய்கள் விடுபடுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் இத்தலத்தில் திருப்பணி செய்த திலகவதி அம்மையாருக்கும் இங்கு தனி சன்னதி உள்ளது. அதுபோல் அவரது சகோதரர் திருநாவுக்கரசருக்கும் தனி சன்னதி இருப்பது சிறப்பாகும். சிவபெருமான் தேரில் வந்ததால் இக்கோவிலின் கோபுரம் தேர் வடிவேலேயே அமைந்துள்ளதாக ஆன்மீக பெரியவர்கள் கூறுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள சூலை தீர்த்தத்தை அருந்தி, திருநீரு அணிந்தால் சூலை(நோய்) தீரும். இத்தலத்தில் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினால் கயிலாயத்தில் உள்ள சிவபெருமானை வணங்கியதற்கு சமம். வீரட்டானேஸ்வரரை வணங்கினால் எல்லாவித நோய்களும், பில்லி,சூன்யம் போன்றவையும் அகலும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால் மாநிலம் முழுவதும் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டுச்செல்கின்றனர்.
தேங்காய் உடைப்பது ஏன்?
மூன்று அசுரர்களை அழிப்பதற்காக கயிலாயத்திலிருந்து சூரியன், சந்திரன் 2 சக்கரங்களாகவும், 4 வேதங்கள் குதிரையாகவும் பிரம்மாவை சாரதியாகவும், வாசுகி பாம்பை வில்லாகவும், விஷ்ணு பெருமாளை சரமாகவும் கொண்டு, முப்பத்துமுக்கோடி தேவர்களை தேரில் அலங்கரித்து அதில் புறப்பட்டு வரும்போது முழுமுதல் கடவுளான கணபதியை வணங்காத காரணத்தினால் அச்சிறுபாக்கம் என்ற இடத்தில் அச்சு முறிந்து தேர் நின்றது. அதிர்ச்சி அடைந்த சிவபெருa காரணத்தை ஆராய்ந்தார். பின்னர் தேவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து விநாயகரை அணுகியபோது என்னை வணங்காத சிவபெருமானை பலிகொடுக்க வேண்டும் என கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தேவர்கள் சிவபெருமானுக்கு மூன்று கண், தேங்காய்க்கும் மூன்று கண் என்பதால் விநாயகருக்கு தேங்காய் உடைத்து வணங்கினர். அதன் பின்னர் தேர் புறப்பட்டு திருவதிகையை வந்தடைகிறது. இதனால் தேவர்கள் தங்கள் உதவியின்றி சிவபெருமான் அசுரர்களை அழிக்க முடியாது என ஆணவம் அடைகின்றனர். இதனையறிந்த சிவபெருமான் யாருடைய உதவியுமின்றி மூன்று அசுரர்களையும், தேவர்களின் ஆணவத்தையும் (ஆணவம், கன்மம், மாயை) ஒரே நேரத்தில் புன்னகை புரிந்தவாறே அழித்தாராம். இதுவே திரிபுர சம்ஹாரம் ஆகும்.
No comments:
Post a Comment