பேட்டைவாய்த்தலை
கருப்பை நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள் எல்லாம் தற்காலத்தில் பல பெண்களை வேதனைப்படுத்தும் உபாதைகளாக உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகளை தீர்த்து அருளும் ஆலயம் ஒன்று உள்ளது என்ற தகவல் தெரியுமா உங்களுக்கு? திருச்சி அருகேயுள்ள பேட்டைவாய்த்தலை ஆலயம்தான் அது.
இத்தல இறைவன் மத்யார்ஜுனேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பாலாம்பிகை. பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யவும், குழந்தை பேறினமையைத் தீர்க்கவும் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் விளைவுதான் இக்கோயிலும் அதனருகே உள்ள தீர்த்தமும். ஆலய கருவறை நிர்மாணம் நிறைவடையும் நேரத்தில் மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் முழுதும் நீங்கியது. நீண்ட நாட்களாக கிடைக்காதிருந்த குழந்தை பாக்கியமும் கிட்டியது.
இச்சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் கோயில் மண்டபத்தில் தென்பகுதியில் உள்ள தூணில் ‘பிரம்மஹத்தி’ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் வெட்டிய வாய்க்கால்தான் இப்போது உய்யக்கொண்டான் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இது திருச்சி விளைநிலங்களுக்கான பாசனத்துக்கு உதவுகிறது. இதே ஊரில் பொற்றாள பூவாய் சித்தர் என்பவர் வாழ்ந்துள்ளார். அவர் சித்த மருத்துவராகவும் இருந்துள்ளார். அக்காலத்தில் இங்குள்ள பெண்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களுக்கும் மேலாக மாதவிலக்கு ஏற்பட்டுள்ளதாம்.
வேதனையில் வருந்திய பெண்களுக்கு சித்தர் என்னென்னவோ மருந்து தந்தும் பயன் ஏற்படவில்லை. பிறகு இத்தலத்து இறைவி பாலாம் பிகையிடம் சித்தர் மனமுருகி முறையிட்டார். அந்த வேண்டுதலுக்குச் செவி சாய்த்தாள் அன்னை. அதன்படி தனக்காக விரதமிருந்து தன்னை வழிபடும் பெண்களின் பிரச்னைகளும் வேதனையும் தீரும்படியாக அருளினாள். மாதாந்திர சிக்கல் மட்டுமல்லாமல், கருப்பைக் கோளாறுகள் எல்லாமும் நிவர்த்தியாயின.
பொற்றாள பூவாய் சித்தர் இந்த ஆலயத்தில் இறைவனுடன் ஜோதி வடிவில் இணைந்துள்ளார். சித்தரின் உருவம் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வடபுற தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இறைவன், இறைவியை வழிபட்ட பின்பு பெண்கள் தங்களுக்கான பிரத்யேக பிரச்னைகளை (குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் பருவம் எய்தாத நிலை, மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பை உபாதைகள், குழந்தைபேறு இல்லாமை போன்றவை) பிரார்த்தனை சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி உள்ள தூணில் கட்டுகின்றனர்.
அதன் பிறகு இறைவன், இறைவி படத்தை பெற்று 7 முதல் 9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் உளமாற பூஜைகள் செய்து வருகிறார்கள். அவ்வாறு செய்வதால் தங்களுடைய அந்த வேதனைகள் தீருகின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். அவ்வாறு தீர்ந்து மகிழும் பெண்கள் தம் நன்றியைத் தெரிவிக்க இக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் இருக்கிறார்கள். திருச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது பேட்டைவாய்த்தலை.
சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. ரயில் வசதியும் உள்ளது. கரூர் செல்லும் பேருந்திலும் வரலாம். பேட்டைவாய்த்தலை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் ஊரினுள் உள்ளது இத்திருக்கோயில். கோயிலுக்கு செல்ல ஆட்டோ, கார் வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம். காலை 7 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
No comments:
Post a Comment