Saturday, 19 August 2017

வளையல் அலங்காரி வாழ்வில் ஒளி ஏற்றுவாள்


ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவதே ஆடிப்பூரம். இது, மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்காக உலகன்னை தோன்றிய உன்னத நாள்; தேவிக்குரிய திருநாள். இந்த நாளில்தான் ஆண்டாள் பிறந்தாள். உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குகின்றனர் என்கின்றன புராணங்கள். உலகத்தைக் காத்து ரட்சிக்கும், அகிலாண்ட கோடி அன்னைக்கு இத்திருநாளில் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்துவர். பார்வதி தேவி கருவுற்றிருந்தபோது ஆடிப்பூரம் அன்றுதான் வளைகாப்பு நடத்தியதாகவும் புராணங்கள் இயம்புகின்றன. ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபட்டால் மங்களம் பெருகும். நினைத்தது நடக்கும்.

தாய்மை, பெண்களுக்கே உரித்தான தனிச்சிறப்பு. உடலுக்குள் உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க தாயால்தான் முடியும். ஆடிப்பூர தினத்தில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அவற்றைப் பிரசாதமாக பெண்களுக்கு வழங்குவர். ஆடிப்பூரம் முளைப்பாலிகைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுவதுண்டு. ஒரு வாரம் முன்பே, அவரவர் இல்லங்களில் நவதானியங்களை விதைத்து முளைப்பாலிகை தயார் செய்கின்றனர். ஆடிப்பூரத்தில், அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து அந்த ஆண்டு எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். பல்வேறு கோயில்களில் ஆடிப்பூரம் அம்மன் பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் நடக்கின்றன. 

வைணவக் கோயில்களில் ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். அவள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவதுண்டு. அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தைத் தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். சூடிக் கலைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் பெற்றாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். இந்நாளில் ஆண்டாளைத் தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர். 

திருமணமாகாத வாலிபர்கள், கன்னிப்பெண்கள் வழிபட்டால், திருமணம் நிகழும் என்பது ஐதீகம் ஆடிப்பூரத்தன்று அம்மன் கோயில் செல்ல முடியாதவர்கள், வேப்பிலையை அம்மனாக பாவித்து செம்புக் குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாகச் செருகி, குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி, வாழை இலை விரித்து பச்சரிசி பரப்பி, அதன் மேல் இக்குடத்தை வைத்து, பூ மாலைகள் சூடி, வண்ண வளையல்கள் கோர்த்து மாலையாக சூடலாம். அம்மன் படம் வைத்து, நெய் தீபம் ஏற்றி, 108 அம்மன் போற்றி படித்து, நைவேத்தியம் காட்டி, நிவேதனம் வழங்கி, பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் உண்டாகும். ஆம். வளையல் அலங்காரி நம் வாழ்வில் ஒளி ஏற்றுவாள்.

கூழ் வார்த்தால் குளிர்வாள்

ஆடி மாதம் தட்சணாயன காலத்தின் துவக்கம். வடக்கு நோக்கி நகர்ந்த சூரியன், தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தட்சணாயன காலம். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால், தட்சணாயனம் அவரது மற்றொரு பாகமான அம்பிகைக்கு உரிய காலம். இதுவரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாக இருக்கும். வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று அன்னைக்கு கூழ்வார்க்கும் பழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தினர். கூழ் வார்த்தால் அம்மனும் குளிர்வாள். வெள்ளியன்று வரும் ஆடிப்பூரம் அற்புதமானது. நாகையில் நீலாயதாட்சியம்மனுக்கு, திருவாரூரில் கமலாம்பாளுக்கு,  திருக்கருகாவூரில் கர்ப்பரட்சகாம்பிகைக்கு, மயிலையில் கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம் நடைபெறும். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோயில்களே இல்லை.

No comments:

Post a Comment