Monday, 14 August 2017

உடனடி பலன் கிடைக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வழிபாடு செய்தால் சகல உடல் உபாதைகள் மற்றும் நோய்களில் இருந்தும் விடுபடலாம். பெண்களின் சபரிமலை என்ற பெயருடன் சிறப்பு பெற்றத் தலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம். சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இருமுடி கட்டி பக்தர்கள் செல்வதைப் போலவே, இங்கும் பெண்கள் பலரும் மாசி மாதத்தில் அம்மனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி ஆலய தரிசனம் காணச் செல்கின்றனர். கோவில் கொடிமரத்துடன் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில், அம்மன் புற்று உருவத்தில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் கை, கால், தலை போன்ற உடல் உறுப்புகளை மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பனை செய் கிறார்கள். உடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பச்சரிசி மாவு, வெல்லம் கொண்டு மண்டைஅப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்தால் தலைவலி குணமாகும். பகவதி அம்மன் கோவிலின் தல விருட்சம் வேம்பு ஆகும். 41 நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு தீராத நோய்களும் தீர்ந்து விடும். சித்த பிரமை பிடித்தவர்களும் குணமடையும் அதிசயம் இங்கு நடைபெறுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், தோண்டியும் கயிறும் கோவில் தீர்த்த கிணற்றிற்கு நேர்த்திக் கடனாக செலுத்தி குணமடைகிறார்கள்.

மேலும் அம்மனுக்கு 27 நெய் தீபம் ஏற்றி வெள்ளியில் கை, கால் உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி, செவ்வரளி உதிரிப்பூக்கள், 9 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு செலுத்தி, 9 முறை கருவறையை வலம் வந்தால் சகல உடல் உபாதைகள் மற்றும் நோய்களில் இருந்தும் விடுபடலாம். இந்த நேர்த்திக்கடனை தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும். இங்குள்ள அம்மன் புற்று வடிவில் உள்ளது. புற்று, மணலால் ஆனது. மண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வீடு கட்டுவது, தடைபட்ட வீட்டு பணிகள் தொடர, நிலம் வாங்க, வாஸ்து கோளாறுகள் நீங்க இந்த தலத்தில் செவ்வாய் அன்று 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிறிது மண்ணை வீட்டில் வைத்து பூஜை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment