Sunday, 6 August 2017

திருமணத் தடை நீக்கும் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்


அகத்திய முனிவர் தலைமையில் முனிவர்கள் இங்கு சிவபூஜை செய்து, மதுரை மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்திற்கு,  திருமாங்கல்யம் செய்துள்ளனர். இதனால் இவ்வூர் திருமாங்கல்யபுரம் என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி திருமங்கலம் என்றானது. 

இக்கோயிலின் தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் ஆகாய கங்கை. கோயிலின் நுழைவு பகுதியில் சுந்தரவிநாயகர் காட்சி தருகிறார். மேற்கு நோக்கி உஷாதேவி, சயாதேவியுடன் சூரியனும் அவருக்கு அருகே நாகதேவனும் காட்சி தருகின்றனர். தொடர்ந்து ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார்.

கன்னி மூலையில் ஸ்ரீமகா கணபதியும் தெற்கு நோக்கி மங்கள தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். அருகே வில்வவிநாயகரும், சண்டிகேஸ்வரரும் அமர்ந்துள்ளனர். யோகசனீஸ்வரர், அடுத்து நவகிரகங்களும், நவகிரகங்களை நோக்கி கால பைரவரும் காட்சி தருகின்றனர். காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அருகே சந்திர பகவானும்,  அஷ்டபுஜ துர்க்கையும் உள்ளனர்.

எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கையாக காட்சி தருவது திருமங்கலத்தில் மட்டுமே. இவரை வழிபட்டால் அஷ்ட சாம்ராஜ்யத்தை அடைந்த மகராஜாக்கள் பெற்ற பலனை பக்தர்கள் அடையலாம். கன்னி பெண்களுக்கு திருமண தடை நீங்கும், வாலிபர்களுக்கு விரும்பிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.  

கருவறையில் லிங்க வடிவிலான சொக்கநாதர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். சுவாமி சன்னதிக்கு வெளியே மீனாட்சியம்மன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் தெற்கு நோக்கி உள்ளதால், மரண பயத்தை போக்கும் வல்லமையும், நீண்ட ஆயுளையும் தரும் வல்லமையும் உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் திருமணத் தடை நீக்கி, தீர்க்கசுமங்கலி வரமருளும் தெய்வமாக மீனாட்சியம்மன் திகழ்வதால் பெண்கள் அதிகளவில் இக்கோயிலுக்கு வருகின்றனர்.

திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. சித்திரையில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறுகளை மாற்றி கொள்கின்றனர். ேமலும் மாசியில் மகா சிவராத்திரி, ஆனி திருமஞ்சனம் முக்கனி அபிஷேகம், கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம், ஐப்பசி பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி கந்தசஷ்டி திருவிழா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி விழா, மார்கழியில் அனுமன் ஜெயந்தி, சித்திரையில் அப்பர், திருநாவுக்கரசர் சதயம், வைகாசியில் திருஞானசம்பந்தர் குருபூஜை உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் இங்கு களை கட்டுகின்றன. 

அதிகாலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் 9 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கிறது. தினசரி அன்னதானமும் நடைபெறுகிறது. 

No comments:

Post a Comment