Sunday 20 August 2017

சீரடி சாய்பாபாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்கள்


சாய்பாபா சர்வசக்தி வாய்ந்தவர். பஞ்ச பூதங்களும் அவர் காலடி சுண்டு விரலில் கட்டுப்பட்டுக் கிடந்தன. அவர் பார்த்த பார்வையிலேயே பலரும் பரிசுத்தம் ஆனார்கள். அவர் எல்லை இல்லா ஆற்றல் பெற்றவர். அப்படிப்பட்டவர் ஒரு சாதாரண விஷயத்தில் தோல்வி அடைய நேரிட்டது. சாய்பாபா மீண்டும் சீரடிக்கு வந்து, நிறைய பேரை தன் அருள்பார்வைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்த காலக் கட்டத்தில் அவர் வாலிபப் பருவத்தின் உச்சத்தில் இருந்தார். நல்ல முறுக்கேறிய உடல் கட்டுடன், ஒரு விளையாட்டு வீரனைப் போல திகழ்ந்தார். நீண்ட தலைமுடி வளர்த்திருந்த பாபா, அக்காலக்கட்டத்தில் பக்சீர்கள் அணியும் சல்லடைத் துணியை அணிந்து வந்தார். மல்யுத்தம் தெரிந்தவர்களும், மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்பவர்களும் அத்தகைய சல்லடைத் துணியையே அணிந்து வந்தனர். 

பாபா அத்தகைய சல்லடைத் துணியை அணிவது சீரடியில் உள்ள மல்யுத்த வீரனான மொஹித்தீன் தாம்போலி என்பவனுக்குப் பிடிக்கவில்லை. சீரடியில் வெற்றிலைப் பாக்கு கடை வைத்திருந்த அவன் ஊரில் தான் மட்டுமே மல்யுத்த சாம்பியனாக, ஊரே போற்றும் வகையில் திகழ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்தான். எனவே அவனுக்கு சாய்பாபா மல்யுத்த வீரன் போல சல்லடைத் துணி அணிவது பிடிக்கவில்லை. ஒருநாள் திடீரென அவன் பாபாவிடம் வந்தான். வந்த வேகத்தில் பாபாவிடம் ஆவேசமாக பேசத் தொடங்கினான். “நீ சாதுவா அல்லது மல்யுத்த வீரனா? சாது என்று சொல்லிக் கொள்ளும் நீ அதற்கேற்ப உடை அணிவதில்லை. என்னைப் போல மல்யுத்த வீரன் மாதிரி உடை அணிகிறாய். இந்த வேஷத்தை கலைத்து விடு. 

இல்லையெனில் என்னோடு மல்யுத்தம் செய்வதற்கு வா. என்னை ஜெயித்து விட்டு, உன் இஷ்டப்படி ஆடை அணிந்து கொள்” என்றான். அவன் பேச்சில் அகங்காரம் தெரிந்தது. ஆனால் பாபா அவன் மீது கோபம் கொள்ளவில்லை. அதற்கு மாறாக அவனை சமரசம் செய்யும் வகையில் பேசினார். “நான் சிறு வயதில் முஸ்லிம் பக்கீர் ஒருவரால் வளர்க்கப்பட்டேன். அதனால்தான் எனக்கு இத்தகைய உடை அணியும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி நான் யாருக்கும் சவால் விடும் வகையில் இந்த உடையை அணியவில்லை” என்றார். அவர் விளக்கத்தை மல்யுத்த வீரன் மொஹித்தீன் தாம்போலி ஏற்கவில்லை. அவன் பாபாவை பிடித்து கீழே தள்ளி விட்டான். சுற்றி நின்றவர்கள் பாபாவை தாங்கிப் பிடித்துக் கொண்டனர். பாபாவுக்கும் அந்த மல்யுத்த வீரனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதற்கிடையே பாபாவுடன் மல்யுத்த வீரன் மோத போகும் தகவல் பரவி, அங்கு கிராம மக்கள் அனைவரும் திரண்டு விட்டனர்.

பாபா.... அந்த மல்யுத்த வீரனைப் பார்த்தார். அவனிடம், “இன்று நீ விரும்பியதை நான் தர வேண்டும். யாருக்கும் இல்லை என்று ஒரு போதும் என்னால் சொல்ல இயலாது. என் உடல் சக்திக்கு ஏற்ப அனுசரித்து உன்னுடன் போர் புரிகிறேன் என்றார். பாபா மல்யுத்தம் செய்ய தயார் என்று சொன்னதை கேட்டதும் சீரடி ஊர் மக்களுக்கு கடும் ஆச்சரியம் ஏற்பட்டது. பாபா உக்கிரமாக ஒரு பார்வை பார்த்தாலே மல்யுத்த வீரனை சுருண்டு விழ வைத்து விடும் ஆற்றல் கொண்டவர். அவர் எப்படி இவனிடம் சண்டை போட வருகிறேன் என சொன்னார் என்று ஆச்சரியப்பட்டனர். மல்யுத்தம் தொடங்கியது. முரடனான மொஹித்தீன் தாம்போலி வேண்டும் என்றே பாபா மீது அசுரத்தனமாக தாக்குதல்களைத் தொடுத்தான். சற்று நேரமே அந்த மல்யுத்தம் நீடித்தது. மொஹித்தீனுக்கு வெற்றியை வழங்கி விட்டு பாபா தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

பாபா தோற்று விட்டார் என்றதும் சீரடி மக்களில் பெரும்பாலானவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். சிலர் வேதனையில் கண்ணீர் விட்டனர். ஆனால் சாய்பாபா கவலைப்படவில்லை. வேதனைப்படவுமில்லை. மாறாக புன்னகைத்தார். அப்போதே, அந்த வினாடியே அவர் ஒரு முடிவு எடுத்தார். “இந்த சல்லடைத் துணி துறவிகளுக்கு ஏற்றது அல்ல. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார். பிறகு தான் அணிந்திருந்த சல்லடைத் துணியை முழுமையாக கழற்றி வீசினார். வெள்ளை உடையை கொண்டு வரச் சொன்னார். நீண்ட அங்கியான கஃப்னி எனும் வகை உடையை வாங்கி அணிந்து கொண்டார். ஒரு துண்டு துணியை தலையைச் சுற்றி முக்காடிட்டு கட்டிக் கொண்டார். இதனால் பாபாவின் தோற்றமே மாறிப் போனது. இதைக் கண்டதும் மல்யுத்த வீரன் மொஹித்தின் தாம்போலி அளவற்ற ஆனந்தம் கொண்டான். பாபாவை வீழ்த்தி விட்டோம் என்ற மமதை அவன் மனதில் தோன்றி இருந்தது.

பாபா அதை அறிந்திருந்தாலும் அவனிடம் துளி அளவு கூட வெறுப்பைக் காட்டவில்லை. மாறாக மொஹித்தீனுக்கு நிறைய ஆசி கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதை கண்டதும் பாபா மீது மிகுந்த பற்று வைத்திருந்த சீரடி மக்கள் ஆதங்கப்பட்டனர். “பாபா.... நீங்கள் அவனுக்கு ஆசி வழங்குகிறீர்கள். ஆனால் அவன் எவ்வளவு கர்வத்தோடு போகிறான் பாருங்கள்” என்றனர். அதற்கு பாபா, “கவலைப்படாதீர்கள். இன்று என்னோடு மல்யுத்த போர் செய்ய வந்தவன் விரைவில் என் பணியாளர்களில் ஒருவனாக மாறப் போகிறான்” என்றார். பாபா சொன்னது போலவே, மல்யுத்த வீரன் மொஹித்தீன் தாம்போலி அடுத்த சில மாதங்களில் பாபாவின் பணியாளனாக மாறினான். அவனுக்கு பாபாவின் உடைகளை துவைத்து சுத்தம் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. பாபாவின் உடையை மாற்ற மற்போர் புரிந்த அவன், கடைசியில் அந்த உடையை சுத்தம் செய்து கொடுக்கும் பணிக்கே வந்தது பாபாவின் அருளாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்த மல்யுத்த சண்டை சம்பவத்துக்குப் பிறகு சாய்பாபாவின் நடை, உடை, பழக்க - வழக்கங்கள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. காலணி அணிவதை கைவிட்டார். கிழிந்த கந்தல் துணிகளை அணிவதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் இரு சாக்குத் துணி வைத்திருந்தார். ஒரு சாக்குத் துணியை தான் அமர்வதற்கு பயன்படுத்திக் கொண்டார். மற்றொரு சாக்குத் துணியை படுப்பதற்கு வைத்துக் கொண்டார். இத்தகைய வாழ்க்கையை தொடங்கிய பிறகு அவர் தன்னை நாடி வரும் பக்தர்களிடம், “இறைமையை விட ஏழ்மைதான் உயர்ந்தது. ஆட்சி அதிகாரங்களில் இருப்பதை விட ஏழையாக இருப்பதுதான் உன்னதம்” என்றார்.

உண்மையான துறவிகள் தங்களுடைய உணவு, உடை, உறைவிடம் பற்றித் தனிக் கவனம் செலுத்துவது இல்லை. கிடைத்ததை உண்டு கிழிசலும் உடுத்தி, நினைத்த இடத்தில் உறங்கிக் கொள்வார்கள் என்று சொல்வதுண்டு. அந்த நிலைக்கு பாபா முழுமையாக மாறி இருந்தார். பாபா தன் உடையை மாற்றிக் கொண்டது போல உள்ளத்தையும் மாற்றிக் கொண்டார். அவரிடம் காணப்பட்ட கோலம் காணாமலே போய் விட்டது. அவரது கண்கள் அபாரமான கருணை மழை பொழியும் கண்களாக மாறியது. அவர் முகத்தில் மிகுந்த களை உண்டாகி அலாதியானப் பொலிவைப் பெற்றது. மொத்தத்தில் அவர் மனம் அமைதி கொண்டது. எல்லையற்ற சாந்தம் அவரை ஆக்கிரமித்தது. எப்போதும் தியானத்தில் அமர்ந்தவராக பாபா மாறினார். 

அவருக்குள் புகுந்த அமைதி அவரது மனோநிலையை முழுமையாக மாற்றியது. பகல் நேரங்களில் மசூதியில் இருந்து ஆலமரத்தடிக்கு வரும் அவர் மற்றவர்களிடம் பேசுவதை குறைத்தார். யாராவது கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொன்னார். மற்ற நேரங்களில் அவர் பார்வை விண்ணைப் பார்த்தபடி இருந்தது. அவர் வாய், “நானே அல்லா, நானே ஈஸ்வரன்” என்று சொல்லியபடி இருந்தது. இரவில் துவாரகமாயி மசூதிக்கு திரும்பும் பாபா, அங்கும் யாரிடமும் பேச மாட்டார். அமைதிக்குள் அவர் தன்னை புதைத்துக் கொண்டார். மற்றொரு வகையில் சொல்லப் போனால், பாபா இந்த இடத்தில் இருந்தாலும் ஆனந்தமான ஏகாந்தத்தை அனுபவித்தார். மாலை நேரத்தில் சீரடி அருகில் உள்ள கிராமங்கள் வரை நடந்தே சென்று விட்டு வருவார். நாளடைவில் அவர் வாழ்க்கை முறைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது. சில நாள் குளிப்பார். 

சில நாள் குளிக்க மாட்டார். சில சமயம் ஒரு வாரம் வரை கூட குளிக்காமல் இருப்பார். என்றாலும் தினமும் இந்துக்களும் முஸ்லிம்களும் போட்டி போட்டுக் கொண்டு பாபாவை தரிசனம் செய்ய தவறவில்லை. அவர்களை பாபா அவர்கள் இஷ்டத்துக்கே விட்டு விட்டார். பாபா புகழ் சீரடியைத் தாண்டி பரவியது. தினமும் ஏராளமானவர்கள் பாபாவை தேடி வந்தனர். அவர்கள் பாபாவுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்தனர். பாபா அதை வைத்து பெரிய சொத்து எதுவும் சேர்த்து விடவில்லை. துவாரகமாயி மசூதிக்குள் அவர் வைத்திருந்த புகை பிடிக்கும் மண் குழாய், கொஞ்சம் புகையிலை, ஒரு தகர டப்பா, கஃப்னி உடை, கஃபனி வகை நீண்ட அங்கி, சட்கா என்றழைக்கப்பட்ட சிறு கைத்தடி ஆகியவையே அவரது உடமைகளாக இருந்தன. பாபாவின் உடை, உள்ளம் மாறியதைத் தொடர்ந்து அவரது தினசரி வாழ்வியல் நடைமுறைகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த மாற்றத்தின்படி சீரடி சாய்பாபாவின் தினசரி வாழ்க்கை, பக்தர்களுக்கு வியப்பூட்டும் வகையில் இருந்தது.

No comments:

Post a Comment